ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு வகையில் தான் மட்டும் கஷ்டப்படுவதாக நினைக்கிறான். மற்றவர்களுக்கு வரும் கஷ்டங்களுடன் ஒப்பிடும்போது தன்னுடைய கஷ்டம் மட்டுமே மிகவும் துன்பகரமானது என்றும் நினைக்கிறான்.
பொதுவாகவே, மிகவும் இயல்பாக வாழ்க்கையில் வந்துபோகும் விஷயங்களைத்தான் பெரும் துயரமாகவும், கஷ்டமாகவும், துன்பமாகவும் நினைக்கிறான். கஷ்டம் என்பது பூதத்தை போன்றது. பயப்பட பயப்பட அதன் உருவம் வளர்ந்துகொண்டே செல்லும். அதிகம் பயந்தால் ஆபத்துதான்.
கஷ்டம் மனிதனுக்கு மனவலிமையைக் கொடுக்கிறது என்பதுதான் உண்மை. இந்த உண்மை புரியாமல், என்னுடைய குழந்தைக்கு எந்தத் துன்பமும் கஷ்டமும் வரவே கூடாது என்று பெற்றோர் கடவுளிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள்.. தங்களைப் போன்று படிக்கவும், பள்ளிக்கு சென்றுவரவும் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக நிறையவே செலவழிக்கவும், அதற்காக கஷ்டப்படவும் தயாராக இருக்கிறார்கள். சின்ன வயதில் கஷ்டத்தை அனுபவிக்காமல் வளரும் குழந்தைதான் எதிர்காலத்தில் சின்ன கஷ்டத்திற்கும் மரவட்டையைப் போன்று சுருண்டுவிடுகிறது.
ஒரு புழு எப்படி பட்டாம்பூச்சியாக மாறுகிறது என்பதை தன் மகனுக்கு காட்டுவதற்காக, அதன் வளர்ப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார் அப்பா. முட்டையில் இருந்து எத்தனை கஷ்டத்துடன் வெளிவருகிறது என்று பார்க்கச்சொன்னார். முட்டையில் இருந்து வண்ணத்துப்பூச்சி வெளிவருவதற்கு மிகவும் சிரமப்பட்டதை பார்த்த சிறுவனுக்கு மனம் வலித்தது. வண்ணத்துப்பூச்சிக்கு இத்தனை கஷ்டம் வேண்டாம் என்று, அந்த முட்டையை அவனே உடைத்து வண்ணத்துப்பூச்சியை வெளியேற்றினான். வெளியே வந்த வண்ணத்துப்பூச்சி எத்தனை முயற்சி செய்தும் பறக்க முடியவில்லை. சிறகை விரித்து பறக்கமுடியாமல் மரணத்தைத் தழுவியது. அதைக்கண்டு அழுதபடி அப்பாவிடம் விளக்கம் கேட்டான் மகன். முட்டையில் இருந்து வெளிவர முயற்சிக்கும்போதுதான் பட்டாம்பூச்சியின் இறகுகள் பலம் பெறுகின்றன. அந்த வாய்பை நீ தடுத்துவிட்டதால், அந்த பட்டாம்பூச்சி இறந்துவிட்டது என்றார் அப்பா.
இந்த பட்டாம்பூச்சி போலத்தான் தன்னுடைய பிள்ளையின் வளர்ச்சியைக் கெடுக்கிறார்கள் பெற்றோர்கள். கஷ்டமே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழமுடியுமா என்று யோசித்துப்பார்த்தால், வாய்ப்பே இல்லை என்பது புரியும். ஏனென்றால் உறவினர்கள், நண்பர்களின் மரணங்களை நிச்சயம் தரிசிக்கவேண்டிய வாய்ப்பு வரும். என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும் உடல் நலம் கெட்டுப்போகும். ஏமாற்றம், துரோகம், அவமானம் போன்ற எத்தனையோ பிரச்னைகளை எதிர்கொள்ளும் நிலைமை எல்லோருக்கும் வரவே செய்யும். அதனால் சின்ன வயதிலிருந்தே கஷ்டங்களை எதிர்கொள்ளும் மனப்பான்மையுடன் பிள்ளையை வளர்பதுதான் நல்லது.
கழுகு அப்படித்தான் அதன் குஞ்சினை பழக்குகிறது. குஞ்சு போதுமான அளவுக்கு வளர்ந்ததும் கூட்டை அடித்து நொறுக்குகிறது கழுகு. அதனால் அந்த கூட்டின் முனையில் இருந்து எட்டிப்பார்க்கும்போது, கீழே தள்ளிவிடும் கழுகு. பயந்துபோய் சிறகடிக்க நினைத்து தத்தக்காபித்தக்கா என்று உயிர் பயத்தில் தள்ளாடும்போது, அந்த குஞ்சை பாதுகாப்பாக பிடித்துக்கொள்ளும். அம்மாவிடம் பத்திரமாக இருப்பதாக நினைக்கும்போதே, மீண்டும் அந்த குஞ்சை ஆகாசவெளியில் தள்ளிவிடுகிறது கழுகு. அம்மா கீழே விழுந்தால் பிடித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை வரவே, அசுவாசமாக சிறகடித்துப் பறக்கத்தொடங்கும் குஞ்சு. சிறகசைக்கத் தெரியாமல் கீழே விழும்போது மீண்டும் மீண்டும் கற்றுத்தருகிறது. . அதனால்தான் பறவைகளிலேயே மிகவும் உயரத்துக்கு பறக்கும் சக்தி கழுகிற்கு கிடைத்திருக்கிறது. உயர்ந்த நிலையை அடைந்தவர்களால், எல்லா கஷ்டங்களையும் இயல்பாக தாங்கிக்கொள்ளமுடியும்.
அதெப்படி கஷ்டங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்வது?
தனது தம்பியை தோளில் தூக்கிக்கொண்டு மலைக்கு மேல் இருக்கும் தனது கிராமத்துக்கு சிறுமி ஒருத்தி சென்றாள். அவளுடன் வியாபாரத்துக்காக ஒரு துணி மூட்டையை வியாபாரி ஒருத்தன் தூக்கிக்கொண்டு சென்றான். மலை என்றாலே கஷ்டப்பட்டுத்தானே நடக்கவேண்டும். இரண்டு பேரும் மிகவும் சிரமப்பட்டு மேலே ஏறினார்கள். பாதி தூரம் கடந்ததும் ஓய்வு வேண்டும் என்று துணி மூட்டையை போட்டு கீழே உட்கார்ந்தான். அந்த சிறுமியிடம், உனக்கும் கை வலிக்கத்தானே செய்கிறது, கொஞ்சநேரம் ஓய்வெடு என்று சொன்னான். அதற்கு அந்த சிறுமி, தம்பியை தூக்கினால் யாருக்காவது கை வலிக்குமா, விபரம் தெரியாமல் பேசாதீர்கள் ‘என்றபடி போய்க்கொண்டே இருந்தாள்.
உண்மைதான். சுமையை தம்பியாக பார்த்ததால் சிறுமிக்கு கை வலிக்கவில்லை. ஆனால் வியாபாரி துணி மூட்டையை சுமையாகத்தான் பார்த்தான். அதனை வாழ்வாதாரமாக பார்த்திருந்தால் அவனுக்கும் சுமையின் கஷ்டம் தெரிந்திருக்காது. அதனால் எந்த ஒரு கஷ்டத்தையும் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் பாதிப்பு உண்டாக்கும். நடப்பது சிலருக்கு கஷ்டமாக இருக்கும், சிலருக்கோ உடல் நலனுக்கு நல்லது என்ற எண்ணத்தில் சந்தோஷம் தரும். 6 மணிக்கு முடியும் வேலையை இரவு 9 மணி வரைக்கும் பார்க்கும் சூழல் ஏற்படும்போது, இது நிறுவன முன்னேற்றத்துக்கு செய்யவேண்டிய கடமை என்று எடுத்துக்கொண்டால் அது கஷ்டமாகத் தெரியாது. இல்லையென்றால் உன்னை வேண்டுமென்றே பழி வாங்குவதாக தெரியும். நோயினால் பாதிக்கப்படும்போது, ஓய்வெடுக்க ஒரு வாய்ப்பு என்று எடுத்துக்கொண்டால், நோயின் துன்பம் சோதனை தருவதாக இருக்காது.
ஆம், எல்லா கஷ்டங்களையும் வாய்ப்பாகவும், சந்தோஷமாகவும் பார்த்துக்கொள்ள முடியும். அப்படி பார்க்கும் கண்கள் கிடைத்தவருக்கு கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் போகும்.
- முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாகத்தான் கஷ்டம் வருவதாக மதங்கள் போதிக்கிறதே..?
கஷ்டம் உனக்கு எப்படி வந்தது என்பது முக்கியமில்லை, அதனை எப்படி விரட்டவேண்டும் என்பதுதான் முக்கியம். ஏனென்றால் கஷ்டங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். பரிட்சைக்கு படிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதன்பிறகு பரிட்சை முடிவுக்குக் காத்திருப்பது அதைவிட கஷ்டமாக இருக்கும். ஏதேனும் பாடத்தில் தோல்வி அடைந்தால், அது அதைவிட கஷ்டமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பரிட்சை வந்துகொண்டுதான் இருக்கும். அன்றன்று ஏற்படும் கஷ்டங்களே வாழ்வில் பெரிய துன்பமாகத் தெரியும். அதனால் கஷ்டத்துக்கு காரணம் முற்பிறவி பாவம் என்று பரிகாரம் செய்ய முயற்சிக்காமல், கஷ்டத்தை ஏற்றுக்கொள்ள பழகு.
- காதல் தோல்வி எனக்கு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுக்கிறதே…
உண்மையான காதலுக்கு வெற்றி, தோல்வி என எதுவுமே கிடையாது. மனதுக்குப் பிடித்தவரோடு வாழ்வது மட்டுமே காதல் வெற்றி இல்லை. மனதுக்குப் பிடித்தவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துவதுதான் உண்மையான காதல். உன்னைவிட இன்னொருவர் அவருக்கு பொருத்தமாக இருப்பார் என்று சந்தோஷப்படு. உனக்கு இன்னொரு காதலை அறிமுகம் செய்வதற்கு காலம் எடுத்திருக்கும் முடிவாக எண்ணிக்கொள். ஆம், காதல் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டேதான் இருக்கும். அதனால் அடுத்த காதலுக்கு தயாராக இரு. இந்தக் காதலில் நடந்த தவறுகளை அடுத்த காதலில் திருத்திக்கொள். தோல்வியில்லாத காதல் நிச்சயம்.
- கஷ்டம் வந்தால் என்ன செய்யவேண்டும்?
சந்தோஷமாக ஏற்றுக்கொள். இன்று அயல்நாட்டுக்குப் போய் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா? நிம்மதியாக ஆறு மணி நேரம் தூங்கமுடியாது, மூன்று நேரம் வயிறு நிரம்ப சாப்பிடமுடியாது. முட்டிக்கொண்டிருக்கும் மூத்திரத்தைக்கூட நினைத்த நேரத்தில் பெய்ய முடியாது. எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடமுடியாது. அப்படிப்பட்ட நரகத்தில் உழைத்து பணம் சேர்த்து ஊருக்கு அனுப்புகிறார்கள். ஊரில் இருந்து பொண்டாட்டியோ, அம்மாவோ, குழந்தையோ போன் செய்தால் தங்கள் கஷ்டங்களை கொஞ்சமும் வெளிக்காட்ட மாட்டார்கள். அங்கு மிகவும் சந்தோஷமாக வாழ்வதாகச் சொல்வார்கள். ஏனென்றால் அவர்களுடைய கஷ்டம், வேறு யாருக்கும் கஷ்டம் தரக்கூடாது என்ற நல்லெண்ணம்தான். இத்தனைதூரம் அடிமை வேலை செய்பவர்களே கஷ்டங்களை மனதார ஏற்றுக்கொள்ளும்போது, மற்றவர்களால் முடியாதா என்ன?
பத்து மாதங்கள் கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு பிள்ளைகளை தனது வயிற்றில் சுமக்கிறாள் தாய். எந்தத் தாயும் அதனை சுமையாக நினைப்பதில்லை. உயிர் போகும் அளவுக்கு பிரசவ நேரத்தில் வலி இருக்கும் என்று தெரிந்தாலும், தாய்மை அடைவதால் சந்தோஷம் கொள்கிறாள். தாயைப் போன்று கஷ்டத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொள்.
- கஷ்டமே வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
மரணிக்க வேண்டும். அப்போது உன்னை எந்தக் கஷ்டமும் நெருங்காது.