அலுக்கவும் சலிக்கவும் செய்யாத மூன்று விஷயங்கள் மனிதன் வாழ்க்கையில் இருக்கின்றன. மனிதனுக்கு எஜமான் போன்று கட்டளையிடும் இந்த விஷயங்களை நிராகரிக்கத் தெரிந்த மனிதன் நிம்மதியாக, சந்தோஷமாக இருப்பான். ஆனால் இந்த விஷயங்கள் மிகவும் சந்தோஷம் தருவதாக இருப்பதால், மனிதன் இவற்றை மனதார நேசிக்கிறான், இவற்றில் இருந்து வெளிவர விரும்புவதே இல்லை. அந்த மூன்று விஷயங்கள் என்ன தெரியுமா?

முதல் விஷயம் மனிதனின் பசி

அடுத்த வேளை சாப்பாட்டை பதுக்கி வைத்துக்கொள்ளும் குணம் வயிற்றுக்கு கிடையாது. அதேபோல் பசிக்கு ஒரு வேளை ஓய்வு கொடுக்கும் குணமும் வயிற்றுக்கு கிடையாது. ஆனால் வயிற்றின் இயல்பு தெரியாமல் மூக்குமுட்ட சாப்பிடுவதுதான் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் வெற்றிக்கும் முட்டுக்கட்டை போடும் முதல் விஷயம். கல்யாண சாப்பாடு, ஹோட்டல் சாப்பாடு என்றால் வெளுத்துக்கட்டுபவர்கள் பலர். இதுதவிரவும் எப்போதும் வயிறு நிரம்பநிரம்ப சாப்பிடவேண்டும் என்ற ஆசையும் பழக்கமும் நிறைய பேருக்கு உண்டு. பசிக்கு சாப்பிடுவதைவிட ருசிக்கு சாபிடுபவர்களே அதிகம். அதுதான் அவர்களை சாப்பாட்டுக்கு அடிமையாக்குகிறது.

அடுத்தது தூக்கம். கும்பகர்ணனின் கதை தெரிந்திருக்கும். உறக்கத்தின் ருசி அறிந்தவன். விழித்திருக்கும்போது கும்பகர்ணனை வெல்வதற்கு எவராலும் இயலாது. அவன் தூக்கத்தைக் கெடுத்து போருக்கு அனுப்பியதால், செத்துப்போனான். அவனுக்கு வாழ்வதைவிட தூங்குவதுதான் ரொம்பவும் பிடித்திருந்தது. அவனைப்போல் நீண்ட நேரம் தூங்குவதை நிறைய பேர் விரும்புகிறார்கள். காலையில் எழுந்து காபி குடித்துவிட்டு மீண்டும் ஒரு தூக்கம் போடுவது நிறைய பேருக்கு பழக்கம். தூங்கத்தூங்க இனிக்குதடா என்று வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

மூன்றாவது காமம். அந்த காமத்தை சிற்றின்பம் என்று பெயரிட்டு அழைத்தார்கள். ஏனென்றால் கொஞ்சநேரம் மட்டுமே இன்பம் கொடுக்கக்கூடியது. ஆனால் மீண்டும் மீண்டும் ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டக்கூடியது. உலகில் உள்ள அத்தனை ஆணிடமும் பெண்ணிடமும் ஒரே மாதிரியான இன்பமே கிடைக்கும் என்றாலும், வெவ்வேறு நபரிடம் இன்பம் பெறுவதற்கு ஆசைப்படுவதுதான் காமத்தில் தோற்றுப்போவதன் முதல் அறிகுறி. இந்த விஷயத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்பதை நோக்கி பாய்ந்து செல்கிறது மனிதகுலம்.

ஆக, அதீத உணவு, நீண்ட தூக்கம், உறவுக்கான ஏக்கம் ஆகிய மூன்றும் சாதாரண  நடைமுறை விஷயங்களாக தெரிந்தாலும், இவையே ஒரு மனிதனின் வெற்றிப்பாதையை தீர்மானிக்கின்றன.

உணவு கிடைக்கும்போது வயிறு புடைக்க சாப்பிடுவது தவறில்லை என்றே பலரும் எண்ணுகிறார்கள். நிறைய சாப்பிட்டால்தான் கடுமையாக உழைக்க முடியும் என்று சாக்கு சொல்கிறார்கள். ஆனால் வயிறு நிறைய உணவு இருக்கும்போது தூக்கம் வருமே தவிர, உழைப்பதற்கு மனம் வராது, உடலும் ஒத்துழைக்காது. வயிறு முட்ட சாப்பிடும் கணத்தில் கிடைக்கும் அற்ப சந்தோசத்திற்காக தன்னுடைய உடல் நலனை அடகு வைக்கிறான் மனிதன். சாப்பிடுவதற்காகவே பிறந்தவன் போன்று மேலும் மேலும் சாப்பிடுகிறான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது நம் தமிழ் பழமொழி.

மருத்துவனிடம் கேட்டால் அதிகம் சாப்பிடுபவனுக்கு உடல் பருமன், ரத்த அழுத்தம், நீரிழிவு, ஞாபகக் குறைவு, கொழுப்பு, மாரடைப்பு, சிறுநீரக குறைபாடு என்று வரிசையாக அனைத்து நோய்களும் வரும் என்று எழுதியே கொடுப்பான். இவை எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், மனிதன் மந்தமாகிவிடுவான். அவனுக்கு புதிய சிந்தனை தோன்றவே செய்யாது. நிறைய உணவு சாப்பிடும் மீன் வயிறு வீங்கி செத்துப்போவதைப் போல், மனிதனும் நிறைய தின்று உடல் நிறைய நோய்களை வரவழைத்து செத்துப்போகிறான்.

உணவைப் போலவே அதிக உறக்கமும் சிந்தனைக்கு ஆபத்து தருவதாகும். அதிகநேரம் தூங்கி எழுபவனுக்கு தேவையற்ற மன அழுத்தமும் மனக்குழப்பமும் ஏற்படுவது இயல்பு. ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வு உண்டாகும். ஆனால் மீண்டும் மீண்டும் தூங்கிக்கொண்டே இருப்பது சுகமாகத் தெரியும். அந்த சுகத்திற்குப் பின் ஏராளமான துன்பம் வரிசைகட்டி நிற்பது தெரியாது. உடம்பு குண்டாக மாறுவதற்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் அதிக தூக்கம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. தூக்கத்தை விரும்பும் மனிதனுக்கு சிந்திக்கும் எண்ணமும் திறனும் இருப்பதேயில்லை. அதனால் அதிக தூக்கம் அவனை மூடனாக்கிவிடும்.

மூன்றாவது தீராத காமம். வயிற்றுப் பசியைப் போலவே காமமும் ஒரு வகையான பசி. இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் முழு செயலும் சிந்தனையும் அந்த வழியில் மட்டுமே போகும். எதிரே இருப்பது பெற்றவளா, உடன் பிறந்தவளா என்று பார்க்கமுடியாத அளவுக்கு சிந்தனை மழுங்கும். தீராத காமத்தால் உண்டாகும் பிரச்னைகளை பட்டியல் போடவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் நாளேட்டில் தினம் தினம் காணப்படும் சம்பவங்களே சாட்சி.

உணவு, உறக்கம், உறவு மூன்றும் மனிதனின் வாழ்வோடு ஒட்டிப்பிறந்தவை. இவை இல்லாமல் மனிதன் வாழவேமுடியாது என்பது உண்மை. அதேநேரம் அளவுக்கு மீறினால் ஆபத்து என்பதும் உண்மை. அதனால் உனக்கு நீயே ஒரு கட்டமோ, வட்டமோ போட்டு அதற்குள் நின்றுகொள். எவ்வளவு சாப்பிடவேண்டும், எத்தனை நேரம் தூங்கவேண்டும், எத்தனை உறவு என்பதை நீயே தீர்மானம் செய். வயிறு பசித்திருக்கும்போதும், கண்கள் விழித்திருக்கும்போதும்தான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். காமம் பற்றிய சிந்தனை இல்லாத நேரத்தில்தான் உன் புத்தி நேர் வழிகளில் செல்லத்தொடங்கும். அதனால் இந்த மூன்றையும் அளவோடு நிறுத்தினால் ஆனந்தமாக வாழ்வாய், அளவைத் தாண்டினால் அழிவை நோக்கி பயணமாவாய்.

சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் சரியான அளவு இருக்கிறதா?

நிச்சயம் இருக்கிறது. அரை வயிறு உணவு கால் வயிறு தண்ணீர் கால் வயிறு காற்று என்பதுதான் சரியான அளவு. அரை வயிறு உணவும் ஜீரணமானபிறகே மீண்டும்  சாப்பிட வேண்டும். மூன்று அல்லது நான்கு முறை அரை வயிறு உணவு சாப்பிடலாம். தேவைக்கும் அதிகமாக தண்ணீர் குடிக்கலாம். ஏப்பம் வரும் அளவுக்கு உண்ணக்கூடாது.

உறங்குவதற்கும் அளவு இருக்கிறது. ஒரு நாளில் கால் பகுதி நேரத்தை தூக்கத்தில் கழிக்கலாம். அதாவது ஆறு மணி நேரம் போதுமானது. இது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் பொருந்தாது. அதாவது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வ்யதைத் தாண்டியவர்களுக்கும் உறக்கமே மருந்து. அதனால் அவர்கள் 9 மணி நேரம் தூங்குவது நல்லது. மற்றவர்களுக்கு ஆறு மணி நேரம் போதுமானது.

மதியம் தூக்கம் வருகிறதே?

மதியத் தூக்கம் மிகவும் நல்லது. ஆனால் அந்தத் தூக்கம் அதிகபட்சம் அரை மணி நேரத்துக்கு மட்டுமே இருக்கவேண்டும். அதனால் படுத்ததும் எழுந்தரிக்கக்கூடிய திறன் இருப்பவன் மட்டும் மதியம் தூங்கலாம்.

மனைவியிடமும் அதிக காமம் அனுபவிக்கக்கூடாதா?

உன் வீட்டு நெருப்பு என்பதற்காக அதை உடலில் பற்றவைத்துக் கொள்ளலாமா? முறைப்படுத்தி நெருப்பை பயன்படுத்தினால், அது உனக்கு பயன் தருவதாக இருக்கும் இல்லையென்றால் அதுவே சிதை நெருப்பாக மாறும்.

சாப்பாடு, உறக்கம், காமம் ஆகிய மூன்றும்தான் ஏழைகளுக்கு இன்பம் தருகிறது, இவற்றையும் தவிர்த்துவிட்டு அவன் என்னதான் செய்யவேண்டும்?

அவன் ஏழையாக இருக்கும் காரணமே இந்த மூன்றும்தான். என்றைக்கு இந்த மூன்றும் அத்தனை முக்கியமில்லை என்பதை உணர்கிறானோ அன்றே அவன் இவற்றைத்தாண்டி சிந்திக்கத் தொடங்குவான். சிந்தனை செய்யும் மனிதன் சிறப்பாக செயல்படத்தொடங்குவான். சிறப்பாக செயல்படுபவன் நிம்மதியாகவும் நீண்டநாள் சந்தோஷமாகவும் இருப்பான். அதனால் அற்ப சந்தோஷத்திற்கு ஆசைப்படாதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *