- கேள்வி : சித்தர்கள் எத்தனை பேர்… சித்தர்களுக்கு மரணமே இல்லையாமே? என்.வி.மூர்த்தி, செஞ்சி
ஞானகுரு :
சித்தர்கள் விண்ணில் இருந்து பூமிக்கு வந்தவர்கள் அல்ல, மண்ணில் இருந்து எழுந்தவர்களே. இவர்கள் பாச, பந்தங்களைக் கடந்தவர்கள் என்று சொல்லப்பட்டாலும் போகர் தவிர, மற்ற அனைவரும் மனைவி, மக்களுடன் வாழ்ந்தவர்களாகவே அறியப்படுகிறார்கள். வேதங்களின் கணக்குப்படி பார்த்தால் திரேதாயுகத்தில் ஆயிரம் பேர், துவாபாரயுகத்தில் ஐநூறு பேர், கலியுகத்தில் மூவாயிரம் பேர் என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. நமக்குத் தெரிந்தது பதினெண் சித்தர்கள். 108 சித்தர்களுக்கான பட்டியலும் காணக்கிடைக்கிறது. உண்மையில் இந்த உடல்தான் இறைவன் என்று வாழ்ந்த அத்தனை மனிதர்களும் சித்தர்களே. அதனால்தான் சித்தர்கள் உடலைப் பேணுவதற்கான வழிமுறைகளை சொல்லிக்கொடுத்தார்கள்.
சித்தர்கள் மட்டுமல்ல மனிதர்களுக்கும் முழு மரணம் வாய்ப்பதில்லை என்பதுதான் ஞானம். ஒரு மரம் வெட்டப்படும்போது விறகாகிறது. எரிக்கப்படும்போது கரியாகிறது. புதைக்கப்படும்போது வைரமாகிறது. மரம் மட்டுமல்ல மனிதனும் ஏதாவதொன்றாக மாறிக்கொண்டேதான் இருப்பான். அதனால் நீயும் சித்தனே.