’மனிதனின் வாழ்க்கையில் தினமும் கிடைக்கும் சொர்க்கம் என்றால், அது உறக்கம் மட்டும்தான். அதனை அனுபவித்துப் பார்… உறக்கத்தை நீ தேடாதே, அது உன்னை தேடி வரவேண்டும்’ என்று வயதான ஒரு தம்பதியருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார் ஞானகுரு.

‘’நாம் சேமிக்கும் பணத்தை வங்கியில் போட்டுவைப்பதா அல்லது நிலம், தங்கத்தில் முதலீடு செய்யலாமா..?’’ என்று கேட்டார் மகேந்திரன்.

‘’வங்கி என்பதே ஒரு மோசடிதான். எந்த ஒரு வியாபார நிறுவனமும் தன்னுடைய வளர்ச்சிக்கும், தன்னுடைய லாபத்துக்கும், தன்னுடைய சுயநலத்துக்கும் மட்டும்தான் பாடுபடுமே தவிர, வாடிக்கையாளருக்கு நன்மையைக் கொடுக்காது’’ என்றார் ஞானகுரு.

‘’இப்படி சொன்னால் எப்படி..? அதுதானே பாதுகாப்பான இடம்..?”

‘’அப்படி உன்னிடம் யார் சொன்னது..? வங்கியில் நீ கடன் கேட்பதாக இருந்தால், அதற்கு ஈடாக உன்னிடம் என்ன சொத்து இருக்கிறது என்று கேட்பார்கள். நீ சொத்து கொடுக்கவில்லை என்றால் கடன் கிடைக்காது. அதேநேரம் வங்கியில் உன்னுடைய பணத்தை முதலீடு செய்தால், அதற்கு எந்த உத்திரவாதமும் தர மாட்டார்கள்.

வங்கி லாக்கரில் நீ வைத்திருக்கும் நகையோ, பணமோ திருடு போய்விட்டால் அதற்கு எந்த வங்கியும் பொறுப்பு ஏற்காது. உன் கணக்கில் இருக்கும் பணத்தை வேறு எவரேனும் லாவகமாகத் திருடிவிட்டால், அதற்கும் வங்கி பொறுப்பு ஏற்காது. வீட்டுக்கடனோ, தனிநபர் கடனோ ஒரு தவணை கட்டாவிட்டாலும் உன்னைத் தேடி ஆட்களை அனுப்புவார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டுவார்கள்.

ஆனால், இவை எல்லாமே உன்னைப் போன்ற சாமானிய மனிதர்களுக்குத்தான். அதுவே நீ ஒரு கோடீஸ்வரனாக இருந்தால் நீ  என்ன கேட்டாலும் கிடைக்கும், எவ்வளவு கேட்டாலும் கிடைக்கும். நீ அவற்றை திரும்பக் கட்டவில்லை என்றாலும் கவலை இல்லை. அதற்கும் மேல் நீ வெளிநாட்டில் போய் செட்டில் ஆகவேண்டும் என்றாலும், அவர்களே டிக்கெட் எடுத்து தருவார்கள். அவர்கள் கட்டாத பணத்தால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட உன்னுடைய சேமிப்பில் கைவைப்பார்கள். இத்தனை வில்லங்கம் நிறைந்த இடத்தைத்தான் வங்கி என்று நம்புகிறாய்…’’ என்றார் ஞானகுரு.

‘’ஆனால், பணத்தை சேமித்துவைக்க அதைவிட நம்பகமான வழி வேறு ஒன்றும் தெரியவில்லையே..?’’ என்று விழித்தார் மகேந்திரன்.

‘’வங்கிகள் உருவானதே சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான். அதற்கு முன்பும் மக்கள் சேமித்தார்கள், முதலீடு செய்தார்கள். எப்படி என்று யோசித்துப்பார்’’ என்றபடி நகர்ந்தார் ஞானகுரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *