’’விபத்தில் சிக்கி ஒரு கை நொறுங்கிப் போயிருந்தாலும், வலியை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கும் நபர்கள் உண்டு, ஒரு சின்ன முள் குத்தினாலே கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்களும் உண்டு. எது நடந்தாலும், அதனை எளிதாக எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை… அதனால் டேக் இட் ஈஸி..’’ என்ற ஞானகுருவைப் பார்த்து, ‘’சொல்வது எளிதுதான், ஆனால் கடைபிடிப்பதுதான் கடினமாக இருக்கிறது’’ என்றார் ஆசிரியை.
‘’உண்மைதான். கல்லை புரட்டுவது கடினம் என்று தோன்றிவிட்டால், அந்த கல் சிறிய எடையாக இருந்தாலும் உன்னால் நகர்த்தவே முடியாது பெண்ணே. மனதில் நம்பிக்கை இல்லாத பெரும்பாலோர் மன அழுத்தக் குறைபாடு உள்ளவர்கள்தான். அந்த மன அழுத்தம் தொடர்ந்து நீடிக்கும்போது, அது மனநலக் குறைபாடாக மாறிவிடும். அதனால் ஜாக்கிரதையாக இரு…’’
‘’மன அழுத்தம் அத்தனை மோசமானதா..?’’
‘’நல்ல பலன் கொடுக்கும் மன அழுத்தங்களும் உண்டு. உடலில் திடீரென ஏற்படும் மாற்றத்தை உணர்ந்ததும் மன அழுத்தம் கொள்வதும், அது ஏதோ ஒரு நோயின் அறிகுறி என்று பரிசோதனை செய்வதும் நல்லது. சரியான நேரத்தில் போகவில்லை என்றால் வேலை போய்விடும் என்று வேகமாக எழுந்து பணிக்கு முன்கூட்டியே செல்வது நல்லது. ஆனால், பகலில் சீக்கிரம் போகவேண்டும் என்பதற்காக இரவெல்லாம் கண் விழித்திருப்பதுதான் மோசமான மன அழுத்தம். மன அழுத்தத்தையும் பாசிடிவ் எனர்ஜியாக மாற்று. அது உனக்கு சேவகனாக இருக்கும்.
இந்த உலகில், மன அழுத்தம் இல்லாத மனிதர்களை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ஆனால், அதனை நல்ல வகையாக பயன்படுத்திக்கொண்டால் வெற்றியும், மோசமாக பயன்படுத்தினால் மனநலப் பாதிப்பும் ஏற்படும். மன அழுத்தம் என்றதும் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்றாக பலரும் கற்பனை செய்கிறார்கள்.
எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கை இல்லாமை, பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் இல்லாமை, எழுந்தரிக்க மனமின்றி அதிக நேரம் படுக்கையில் கிடத்தல், தொற்று நோய் வந்துவிடுமோ என்பது போன்ற நடக்காத விஷயங்களுக்காக கவலைப்படுதல், தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் கோபம் கொள்ளுதல், உடல் எடை திடீரென அதிகரித்தல், படபடப்பு, பரபரப்பு, எரிச்சல் போன்ற எல்லாமே மன அழுத்தம் வந்துவிட்டதற்கான அறிகுறிகள்தான். இவை நீண்ட நாட்களாக தொடரும்போது உடலிலும் மனதிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.
அதனால், மனதில் இனம் தெரியாத சோகம், ஏக்கம், துன்பம் போன்றவை வந்துவிட்டாலே ஓய்வு எடு. மனதுக்குப் பிடித்தவர்களிடம் அன்போடு பேசு, ஏதேனும் ஊருக்குப் போய்வா…. மனமும் உடலும் சரியாகிவிடும். எந்த துன்பமும் என்னைத் தொடாது என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள். எல்லாம் சரியாகிவிடும்’’ என்றார் ஞானகுரு.
நம்பிக்கை கீற்று ஆசிரியை முகத்தில் எட்டிப் பார்த்தது.