’அழகான மலரைப் பார்க்கும் எவரும், அதனை பறிப்பதற்கு ஆசைப்படவே செய்வார்கள். அதனுடைய அர்த்தம் என்ன தெரியுமா? அந்த அழகை தனக்கே தனக்கு என்று சொந்தமாக்கிக்கொள்ளும் சுயநலம்தான்’ என்றார் ஞானகுரு.

‘’அப்படியென்றால் நான் அழகாக இருப்பது என் தவறா..?’’ கேள்வி கேட்டாள் கல்லூரி பெண்.

‘’அழகாக இருப்பது நிச்சயம் தவறு அல்ல. மலர், மான், யானை எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன. ஆனால், அழகாக இருக்கிறேன் என்ற எண்ணம் பறவை, விலங்கு, மலர்களிடம் இருப்பதேயில்லை. ஆனால், மனிதன் மட்டுமே அழகை ஆராதிக்கிறான். அதனால், அழகாக இருப்பதாக நினைக்கும் பெண் ஆணவம் கொள்கிறாள். அழகை ரசிப்பவர்களையும் ஆதரிப்பவர்களையும் கண்டு பெருமைப்படுகிறாள். அந்த ரசனைக்காரர்கள் முழுக்க முழுக்க அழகைத் தேடித்தான் வருகின்றனர். அழகை அடைவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதனால் அழகை விரும்பும் ஆணிடம் எச்சரிக்கையாக இரு…’’

‘’ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?””

‘’உன் அழகை சொந்தமாக்கிக்கொள்ள விரும்புபவன், நீ அழகியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். நீ அழகியாக மட்டுமின்றி அறிவாளி, திறமைசாலி, துணிச்சலான பெண் என்று தெரியவந்தால் பயந்துவிடுவான். தனக்குக் கிடைக்காத அழகு பிறருக்குக் கிடைக்கக்கூடாது என்ற எண்ணமும் அந்த ரசிகனிடம் தோன்றலாம். அதனால் உன் அழகை நீ விரும்பு. பிறர் விரும்புவதிலும் தவறு இல்லை. ஆனால், உன் அழகைக் காட்டி நீ ஆதாயம் தேட முயற்சிக்காதே, இறுதியில் நஷ்டம் அடைவது நீயாகத்தான் இருப்பாய்..’’

‘’அழகாக இருப்பது தனித்தன்மைதானே..?”

‘’நிறமும், வாளிப்பான வடிவமும், திருத்தமான மூக்கும் முழியும் மட்டுமே அழகுக்கு இலக்கணம் அல்ல. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் ஏதோ ஒரு விதத்தில் அழகுதான். இந்தியாவின் ஐஸ்வர்யாராயை அமெரிக்கர்கள் கேலி செய்யலாம். ஆகவே, அழகுக்கு ஒரே கண்ணோட்டம் கிடையாது.

மும்தாஜின் அழகைக் காண ஷாஜகானின் கண்கள் வேண்டும் என்பார்கள். ஒருவர் மீது அன்பு வந்துவிட்டால், அங்கு உடல் அழகுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. உன்  தாயிடமோ, தந்தையிடமோ அழகை எதிர்பார்த்திருக்கிறாயா..? எப்படியிருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்கிறாய் அல்லவா அப்படித்தான் அனைத்து மனிதர்களையும் மதிக்க வேண்டும். அழகைக் கண்டு ஏமாறாதே… ஏமாற்றவும் செய்யாதே…’’ ஞானகுரு பேசி முடித்ததும் தன்னுடைய அழகு பற்றிய பிம்பம் உடைந்துபோனதை உணர்ந்தாள் கல்லூரிப் பெண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *