’’உங்களைப் போன்ற ஆசிரியர்களால்தான் பள்ளி மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. பிள்ளைகளுக்கு தோல்விகளையும் கொண்டாடக் கற்றுக்கொடுங்கள்’’ என்றார் ஞானகுரு.
‘’அதெப்படி… பிள்ளைகள் நன்றாகப் படிக்கவேண்டும் என்பதற்காக கூடுதல் நேரம் வகுப்பு எடுப்பதும், சரியாகப் படிக்காத மாணவர்களுக்குத் தண்டனை கொடுப்பதும் அவர்களுடைய நன்மைக்குத்தானே… அவர்களால் நாங்கள் எத்தனை மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம் தெரியுமா?’’ கேள்வி கேட்டார் ஆசிரியை.
’’உங்கள் மன அழுத்தத்திற்கு மாணவர்களை பலி கொடுக்க வேண்டாம். முதலில் எல்லா மாணவர்களையும் சமமாகப் பார்ப்பதை ஆசிரியர்கள் விட்டுவிட வேண்டும். ஒட்டுமொத்த பயிருக்கும் மருந்து தெளிப்பது போன்று மாணவர்களுக்கு கூட்டாக பாடம் எடுக்கும் முறையே தவறு. ஏனென்றால், ஒவ்வொரு மாணவனும் தனித்தன்மை கொண்டவன். உடல், மனம், பொருளாதார நிலை, குடும்ப நிலை என எல்லாமே ஒவ்வொரு மாணவனுக்கும் மாறுபடும். ஆகவே, தனிப்பட்ட ஒவ்வொரு மாணவனைப் பற்றி ஆசிரியர்கள் நிறையவே அறிந்திருக்க வேண்டும். மாணவர்களின் மனதில் என்ன விதைக்கிறீர்களோ, அதுவே காலம் முழுவதும் அவர்களுக்கு பயன் தரும். தாய், தந்தையர் சொல்வதைவிட ஆசிரியர் சொல்லையே வேதவாக்காக மாணவர்கள் மனதில் பதிய வைத்துக்கொள்வார்கள்.
படிப்பு சரியாக வராத மாணவனுக்கு அடிப்படைக் கல்வி கொடுத்தாலே போதும். அவனுடைய தனித்தன்மையைக் கண்டறிந்து அதில் ஊக்கப்படுத்துவதுதான் ஆசிரியரின் பணியாக இருக்கவேண்டும். ஓட்டப் பந்தயத்தில் ஒருவர்தான் வெற்றி பெற முடியும், மற்றவர்கள் தோல்வியாளர்கள் அல்ல, போட்டியாளர்கள்தான் என்று கற்றுத்தர வேண்டும். வெற்றி எதையும் சொல்லித்தருவதில்லை, ஆனால் தோல்வி நிறையவே கற்றுக்கொடுக்கும் என்று தோல்வியை கொண்டாட கற்றுத்தர வேண்டும். தோல்வி என்பது அவமானம் அல்ல, போதிய முயற்சி இன்மை என்று சொல்லித்தர வேண்டும். வெற்றியையும் தோல்வியையும் எளிதாக எடுத்துக்கொள்ளவும் கற்றுக்கொடுக்க வேண்டும்…’’
‘’ஆனால், பொதுவாகவே மாணவர்கள் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்களே…?””
‘’அப்படி சொல்லிவிட முடியாது. இந்த வயதில் அவர்கள் மனதில் படிவதுதான் காலம் முழுவதும் அவர்களை வழிநடத்துகிறது. வாழ்க்கையில் பணப் பிரச்னை, ஆரோக்கியம், குடும்பத் தகராறு, பாலியல் பிரச்சனைகள், நம்பிக்கை துரோகம், கேலி, கிண்டல் போன்றவை வரலாம். அந்த நேரங்களில் எல்லாம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு போராட வேண்டும். என்ன பலன் கிடைத்தாலும் டேக் இட் ஈசி என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வாருங்கள். மாணவனுக்கு மட்டுமல்ல, ஆசிரியருக்கும் நம்பிக்கை வரும். மன அழுத்தம் என்பது காணாமலே போய்விடும்.
ஆனால், இன்று மாணவனை ஒரு கருவியாகவே பார்க்கின்றன பள்ளிக் கூடங்கள். படிக்கும்போது மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரமாக இருக்கிறார்கள். அடுத்து பணிக்குச் சென்றதும் வேலை செய்யும் இயந்திரமாக மாறிப் போகிறார்கள். இதில் இருக்கும் சிரமங்கள் குறித்து வெளியே பேசுவது தங்களுக்கு இழுக்கு என்று மனதில் அழுத்தி வைப்பவர்களே ஒருநாள் வெடித்துப் போகிறார்கள். எனவே மாணவர் மனதை பலமாக்குங்கள்… நாளைய உலகம் மன உறுதியுடன் வலம் வரட்டும்’’ என்றார் ஞானகுரு.
நம்பிக்கையுடன் திரும்பினார் ஆசிரியை.