’காத்திருக்க கற்றுக்கொள். நீ வேட்டையாடுவதில் புலியாக இருந்தாலும் பதுங்கியிருந்து, காத்திருந்து சரியான நேரத்தில் பாய்ந்தால்தான் மானை பிடிக்க முடியும். உன்னிடம் இருக்கும் திறமையும் முயற்சியும் மட்டுமே வெற்றியைக் கொடுக்காது. காத்திருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதை கற்றுக்கொள். உனக்கான நேரம் நாளையும் வரலாம்… அடுத்த ஆண்டும் வரலாம். ஆனாலும் காத்திரு’ என்று இளைஞன் ஒருவனுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு வந்தார் ஞானகுரு.
‘’கடன் தருகிறேன் என்று அலைபேசியில் தினமும் அழைப்பு வருகிறது, ஏன் இப்படி கடன் எளிதாகிவிட்டது…’’ என்று கேட்டார் மகேந்திரன்.
‘’உன்னை அடிமையாக்குவதற்கு அத்தனை ஆசைப்படுகிறார்கள். எதிர்கால நம்பிக்கை என்பதன் இன்னொரு பெயர்தான் கடன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத மனிதர்கள்தான் முன்பு வாழ்ந்துவந்தனர். அவர்களைப் பொறுத்தவரை, எதிர்காலம் என்பது இன்னமும் சிக்கலாக இருக்கும் என்றே நம்பினார்கள். அதனால்தான் யாருக்கும் கடன் கொடுப்பதற்கு பயந்தார்கள். கடன் கொடுப்பதை வெறுத்தனர்.
ஆனால், இன்று எதிர்காலத்தை தெளிவாக கணிக்கும் நுட்பம் மனிதனுக்கு வாய்த்துவிட்டது. உன்னை ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி அட்டை என்று அட்டைகளுக்குள் அடக்கிவிட்டார்கள். அதனால், கடன் வாங்கியவன் எங்கேயும் தப்பித்து ஓடிவிட முடியாது. மேலும், ஒருவனை அடிமைப்படுத்த மிகச்சிறந்த ஆயுதம் கடன் என்பதையும் மனிதன் புரிந்துகொண்டான். நீ மாத சம்பளத்துக்காரன் என்றால் உன் வீடுதேடி வந்து கடன் கொடுப்பார்கள். உன்னால் வேலையை விட்டு ஓடிவிட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதுவே நீ வேலை இல்லாதவன் என்று சொல்லிப்பார், ஒரு ரூபாய் கொடுக்கவும் ஆள் இருக்க மாட்டார்கள்.
வளரும் நாடுகளுக்கு உலக வங்கிகள் பணத்தை அள்ளியள்ளி வழங்குகிறது. அதுமட்டுமின்றி, ஏழை நாடுகளுக்கு கேட்ட பணத்தை அள்ளிக்கொடுக்கின்றன வளர்ந்த நாடுகள். ஏன் தெரியுமா? முன்பு போன்று போரிட்டு அந்த நாட்டை அடிமைப்படுத்த வேண்டியதில்லை. கடன் கொடுத்தாலே ஒரு நாடு அடிமையாகிவிடும்.
ஆம், உன் நாட்டில் ரோடு போடுவதற்கு வெளிநாட்டுக்காரன் பணம் கொடுப்பான். அந்த ரோடு கட்டியபிறகு அவனே வசூல் செய்துகொள்வான். வசூல் செய்துதரும் வேலைக்காரனாக மட்டுமே நீ இருப்பாய். அந்த ரோட்டின் வசூல் முடிவதற்குள் அடுத்த ரோடு கட்டுவதற்கு உன்னிடம் வாங்கிய பணத்தையும் உன் உழைப்பையுமே முதலீடு செய்வான். ஒரு கட்டத்தில் நாட்டிலுள்ள அனைத்து ரோடுகளின் வசூல் பணமும் அவனுக்குத்தான் போகும். சொகுசான பயணம் என்று நீ அவனுக்கு அடிமையாக இருப்பதில் சந்தோஷப்படுவாய். ஒரு கட்டத்தில் உன் நாட்டின் அதிபர் யார் என்பதையும் அவனே தீர்மானிப்பான்.
ஆம், கடன் கொடுப்பவன் என்றென்றும் முதலாளியாகவும் தலைவனாகவும் இருப்பான். கடன் வாங்குபவன் என்றென்றும் அடிமையாகத்தான் இருப்பான். அதனால் கடன் வாங்காதே, அது உன் சுதந்திரத்தின் விலை’’ என்றார் ஞானகுரு.