’’காதலிக்கத்தான் அழகு தேவைப்படுகிறது, காமத்துக்கு அல்ல…’ என்று ஞானகுரு சொன்னதன் அர்த்தம் புரியாமல் விழித்தாள் கல்லூரிப் பெண்.
‘’கட்டில் இரவுகளில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் அங்கே இருக்கும் உடல்கள் அழகைத் தேடுவதில்லை. அனைத்து மனிதர்களுமே மன்மதனும் ரதியுமாக மாறுவேடம் போட்டுக்கொள்கிறார்கள். அதனால்தான், இன்னமும் நம் இந்தியாவில் விவாகரத்துக்கள் குறைவாகவே இருக்கின்றன… எல்லோரும் இருட்டில் அழகுதான்’’ என்றார் ஞானகுரு.
‘’அப்படியென்றால் அழகை ரசிக்கவே கூடாதா..?””
‘’நீ எல்லாவிதமான அழகையும் முழுமையாக ரசிக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன். பூவின் அழகும் மணமும் மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. பச்சைப் புல் வெளிகள், உயர்ந்த மலைகள், சூரிய உதயம், அஸ்தமனம், வானவில், குதிக்கும் அருவிகள், தவழும் நதிகள், அலைகள் துடிக்கும் கடற்கரை, பவனி வரும் யானைகள், பட்டாம்பூச்சி, ஆடும் மயில், ஓடும் முயல், பனி மழை என்று திடீரென எதையாவது பார்த்து, அதன் அழகில் நீ மயங்கி நிற்கலாம். ஆனால், அந்த மயக்கம் சில நிமிடங்கள் நீடிக்கும். இதுபோன்ற விஷயங்களில் மட்டும்தான் அழகு என்று பலரும் நினைக்கிறார்கள். இது முழுமையான ரசனை அல்ல.
இன்னும் சிலருக்கு அழகு வேறு சில வகையிலும் தோன்றும். காய்ந்த சருகுகள், உடைந்த படகுகள், தூங்கும் ஏழைகள், கையேந்தும் சிறுவர்கள், வறண்ட ஆறுகள், சில கோடுகள், புள்ளிகள் என்று வித்தியாசமான காட்சிகளையே கலை என்றும் அழகு என்றும் கொண்டாடுவார்கள். இவர்களுக்கு அழகு என்பதன் இலக்கணமே வேறு ஒன்றாகத்தான் இருக்கும். சிரிக்கும் பெண்களைவிட, கண்ணீர் விடும் பெண்கள் பேரழகியாகத் தெரிவார்கள். இப்படி வித்தியாசமான ரசனையும் உண்மையான அழகின் தரிசனம் இல்லை.
எல்லாவற்றிலும், எல்லா நேரங்களிலும் அழகை காண்பதே ரசனை. அந்த அழகை கொண்டாடத் தேவையில்லை, பிறருக்கு அடையாளம் காட்டவும் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த அழகுகளை அங்கீகரிக்கவும் தேவையில்லை. ஏனென்றால் எல்லாமே அழகு எனும்போது எதை மட்டும் தனியே அழகாக பிரித்துப் பார்க்க முடியும்…?
உயர்ந்த அழகு, தாழ்ந்த அழகு என்ற பிரிவினை இல்லாமல் இயற்கையில் தான் காணும் ஒவ்வொன்றையும் அழகாகக் காண்பதே கலை ரசனை. அதாவது உன் கண்ணுக்கு கருப்பு நிறக் கண்ணாடி போட்டுக்கொண்டால், காணும் எல்லாமே கருப்பாகத் தெரியும்தானே…? அதேபோன்று உன் கண்ணுக்கு அழகு எனும் கண்ணாடியை மாட்டிக்கொள். உன் கண்ணுக்குத் தென்படும் எல்லாமே அழகுதான். நீயும் பேரழகு, நானும் பேரழகு..’’ என்று சிரித்தார் ஞானகுரு.
அந்த சிரிப்பில் கல்லூரிப் பெண்ணும் கலந்துகொண்டாள்.