’’அழுகை என்பது கோழைத்தனமல்ல. அது மன அழுத்தத்தை அகற்றும் அற்புத மருந்து. அழத்தெரியாத ஆண்களும் பெண்களும்தான் கல்நெஞ்சக்காரர்களாக,  பிறரை துன்புறுத்துபவராக இருப்பார்கள். அதனால் அழுகை நல்லது, ஆனால், அடிக்கடி அழுவது ஆபத்து, உன் மனதை பலப்படுத்த வேண்டும் என்ற அறிகுறி அது’’ என்று ஆசிரியை ஒருவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தார் ஞானகுரு.

‘’குழந்தைகள்தானே அடிக்கடி அழுகிறார்களே..?’’

‘’குழந்தைகளுக்கு மன வலிமையும் தன்னம்பிக்கையும் குறைவு. அதேநேரம் பயம் அதிகம். அதைத்தான் அழுகையாக வெளிப்படுத்துகிறார்கள். வளர்ந்து மன வலிமை அதிகரிக்கும் தருணத்தில், அவர்களின் அழுகை குறைந்துபோகிறது. பொதுவாகவே அழுகை என்பது இயலாமையால், கோபத்தால், ஆனந்தத்தால், வெற்றியால், துக்கத்தால், அவமானத்தால் வரலாம். எப்போதாவது ஒரு முறை அழும்போது அந்த அழுகைக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். எப்போதும் அழும் நபர்களுக்கு பரிதாபம்கூடக் கிடைக்காது. அழுது அடம்பிடித்து காரியம் சாதிக்கும் குழந்தைகளின் குணத்தை சில பெண்கள் வளர்ந்த பிறகும் கடைபிடிக்கிறார்கள் என்றால், அவர்கள் இன்னமும் வளரவே இல்லை. மனநலத்தில் பாதிப்பு உள்ளது என்றுதான் அர்த்தம்…’’

‘’அழுதாலே மனநலம் பாதிப்பு என்று சொல்லிவிடுவீர்களா..?’’ கோபமாகக் கேட்டாள் ஆசிரியை.

‘’தாங்கமுடியாத உடல் வலி, நோய், காயம் காரணமாக அழுகை வருகிறது என்றால் உடல் நலப் பிரச்னை என்று அர்த்தம். உடலில் எந்த பிரச்னையும் இல்லாத நேரத்தில், ஒருவருக்கு அடிக்கடி அழுகை வருகிறது என்றால் நிச்சயம் மனம் பாதிக்கப்பட்டுள்ளது என்றுதான் அர்த்தம். நாட்பட்ட கோபம், ஏமாற்றம், பயம், நம்பிக்கையின்மை, அவமானம் போன்றவை மனதிற்குள் நீண்ட நாட்களாக பதுங்கியிருக்கும்போது, மன அழுத்தமாக மாறிவிடுகிறது. யாரேனும் ஒருவர் ஒரே ஒரு வார்த்தை தவறாகப் பேசினாலும், திட்டினாலும் அத்தனை மன அழுத்தமும் ஒன்றுசேர்ந்து வெடித்து அழுகையாக வெளிப்படுகிறது. ஆகவே அடிக்கடி அழுபவர்கள் ஆறுதல் அடைவதில்லை. மேலும் மேலும் துயரத்திற்கே ஆளாகிறார்கள்…’’

‘’அடிக்கடி அழும் நபர்கள் என்னதான் செய்ய வேண்டும்..?’’

‘’எந்த விஷயங்களுக்கு எல்லாம் அழுகை வருகிறது என்பதை தீவிரமாக ஆராய்ந்து பார்த்தாலே, உண்மையைக் கண்டுபிடித்துவிட முடியும். அவமானம் செய்யும்போது அழுகை வருகிறதா அல்லது யாரேனும் அதட்டும் நேரத்தில், ஏமாற்றம் வரும் நேரத்தில் அழுகை வருகிறதா என்று பார்த்தாலே மனதில் தேங்கி நிற்கும் குறையைக் கண்டுபிடித்துவிட முடியும். எது பிரச்னையோ அதுதான் தீர்வும் ஆகும். ஆம், அந்த பிரச்னை ஏன் ஏற்பட்டது, எப்படி வளர்ந்து நிற்கிறது என்பதை மனம் விட்டு பேசினாலே போதும், அதன்பிறகு சடக்கென்று அழுகை தோன்றாது. இதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குழப்பத்தில் இருந்தால் நீ மருத்துவரைத்தான் சந்திக்க வேண்டும்…’’ என்றார் ஞானகுரு.

சிந்தனையில் ஆழ்ந்தார் ஆசிரியை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *