‘’எந்த பட்டாம்பூச்சியும் அதன் வண்ணத்திற்காக பெருமைப்படுவதில்லை. அழகைக் காட்டி பரிசும் பாராட்டும் கேட்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த வண்ணத்துப் பூச்சிகளுக்கு, அதனிடம் உள்ள அழகான வண்ணம்கூட தெரிவதே இல்லை’’ என்று கல்லூரிப் பெண்ணுக்கு பாடம் நடத்தினார் ஞானகுரு.
‘’அப்படியென்றால் அழகை கொண்டாடக்கூடாதா?’’ கேள்வி கேட்டாள் அந்த அழகி.
‘’உன் அழகை நீ எதற்காக கொண்டாட வேண்டும்? அழகு என்று எதை நீ நினைக்கிறாயோ… அது நிரந்தரமானது அல்ல. நீ கோபமாக இருக்கும்போது, வருத்தத்தில், சோகத்தில், ஏக்கத்தில், பொறாமையில் இருக்கும்போது உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா..? அப்போது தெரியும் உன் முகத்தை நீயே அழகு ஏன்று ஏற்றுக்கொள்ள மாட்டாய்.
உன் மனதில் ஆனந்தம் இருக்கும்போது மட்டும்தான் உன் அழகை உன்னாலே ரசிக்க முடியும். அதனால், அந்த அழகை கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வயிற்றுப் பசியில் இருக்கும் ஆணுக்கு எந்த பெண்ணும் அழகாகத் தெரியமாட்டாள். கண் தெரியாத ஒருவனுக்கு உன் அழகு என்ன சொல்லிக்கொடுக்கும்?
நீ அழகாகப் படைக்கப்பட்டிருக்கிறாய் என்றால், அதில் உன்னுடைய பங்கு எதுவும் இல்லை. அழகை பராமரிக்கிறாய் என்றாலும், அதன் முதல் உரிமை உன் பெற்றோருடையது. அதனால் அது பெற்றோரின் சொத்து. அதனை வரமாக மாற்றிக்கொள்வதும் சாபமாக ஆக்கிக்கொள்வதும் உன் கையில்தான் இருக்கிறது.
ஆண்களைப் பிடிக்கும் தூண்டிலாக அழகை பயன்படுத்துவாய் என்றால், நிச்சயம் ஆண்கள் மாட்டத்தான் செய்வார்கள். ஆனால், உன்னைப் போல் ஏராளமான அழகிகள் உண்டு, அனைவரிடமும் தூண்டில் உண்டு. உன்னிடம் சிக்கிய ஆண், பிறர் தூண்டிலிலும் சிக்குவான். ஏனென்றால், ஆண் எந்த அழகையும் நிரந்தரமாக ரசிப்பதில்லை. அவனுக்கு எல்லா அழகும் இருட்டில் காணாமல் போய்விடும்.
ஆசையாக வாங்கிய கார் மீது ஆண் மிகவும் அன்பு வைத்திருப்பான். எப்போதும் அதில் பயணிக்க விரும்புவான். ஆனால், அதைவிட நல்ல கார் ஒன்று வாங்கிவிட்டால், பழைய காரின் கதி என்னவாகும் என்பது உனக்கே தெரியும். அதனால் அழகுக்கு பெருமை கொள்ளாதே. எப்போதும் உன் தனித்தன்மையை, உன் திறமையைக் காட்டி வெற்றிகொள். அந்த தனித்தன்மை இந்த உலகில் வேறு எந்த ஒரு மனிதரிடமும் இருக்கவே செய்யாது’’ என்றார் ஞானகுரு.
கல்லூரிப் பெண் இன்னமும் சமாதானம் அடையவில்லை என்பது அவள் கண்களில் தெரிந்தது.