முன்னே சென்று கொண்டிருந்த ஒவ்வொரு வாகனத்தையும் ஓவர்டேக் செய்து முன்னேறிக் கொண்டிருந்த சுந்தரம், ஒரு லாரியை முந்த முடியாமல்… அதன் வேகத்திலேயே பின் தொடர்ந்தார். இந்த வேகம் வேண்டாமே என்று சொன்னதை அசட்டை செய்து, ‘‘நாற்பது வருஷமாச்சு… டிரைவிங் பத்தி சொல்லித்தர வேண்டாம்…’’ என்று சொன்னவர், ஒரு கணம் லாரி வேகம் குறைப்பதைக் கணிக்காமல் விட்டதால், எங்கள் கார் லாரியின் பின்புறத்தில் சட்டென்று மோதி, அப்படியே திக்குதெரியாமல் திசைமாறி பாதையில் இருந்து விலகி… கண்ணை மூடித் திறப்பதற்குள் ரோட்டோரத்தில் இருந்த ஒரு பெரிய புளிய மரத்தில் முட்டி நின்றது.

மோதிய காருக்குள் உருண்டு, முட்டி மோதி எழுந்ததில் எனக்கு நெற்றி, கை, கால்களில் அடிபட்டு இருந்தது. கண்ணுக்கு முன்னே கொஞ்சம் கொஞ்சமாக வீங்கத் தொடங்க, நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்தது. என்னைப் பற்றிய கவலை மறந்து சுந்தரத்தைப் பார்த்தேன். அதிர்ச்சியில் மயக்கமடைந்திருந்தார். வேடிக்கை பார்க்க ஓடோடி வந்த சிலரது உதவியுடன் சுந்தரத்தை காரில் இருந்து வெளியே இழுத்து, தூக்கி மரத்தடியில் படுக்க வைத்து, நாடித் துடிப்பை பரிசோதித்தேன். பயப்படும் அளவுக்கு இல்லை,

சுந்தரத்திற்கு உடலில் வேறு எங்கும் காயம் இல்லை. அதனால் அவரது உடம்பை நீவி விட்டேன். பெரிய அடி இல்லை.  முன்னே போன லாரியின் டிரைவர் ஓடி வந்து உதவி வேண்டுமா என்று கேட்டு நின்றான். புன்னகையுடன் தலையை அசைத்தேன். அவனுடைய கைலியை சட்டென்று கழட்டி, என் ரத்தத்தை துடைத்துவிட்டான். என் குறிப்பறிந்து காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்துக் கொடுத்தான்.

லேசாக தண்ணீர்  தெளித்ததும், திகில் நிறைந்த முகத்துடன் கண் திறந்தார் சுந்தரம்.

’’மீண்டும் பிறந்து விட்டீர்கள்… வெல்கம்…’’ என்று சிரித்தேன்.  சிரிக்கும்போது முகத்தில் ஆங்காங்கே வலி தெறித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. சுந்தரம் கண் விழித்ததும் லாரி டிரைவரும் விடைபெற்றுக் கொண்டான்.

உயிர் பிழைத்ததையே நம்பமுடியாமல் தடுமாறி எழுந்தார். உடம்பில் எந்த காயமும் இல்லாத காரணத்தால் சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டார். யாரோ  ஒருவர் வீட்டில் இருந்து மருந்து எடுத்துவந்து, தடவி, நெற்றியில் வழிந்த ரத்தத்தை நிறுத்த கட்டு போட்டார். அனைவருக்கும் நன்றி சொல்லி எழுந்ததும் சுந்தரத்திடம், ‘‘காரை எடுங்கள்…’’ என்றேன்.

எங்களுக்கு பெரிய அடி எதுவும் இல்லை என்றதும் சுற்றியிருந்த கூட்டம் சுவாரஸ்யமின்றி முழுமையாகக் கலைந்தது.

காரின் முன்புறம் லேசாக அடிபட்டிருந்ததை கவனித்த சுந்தரம், ‘‘ராகு காலத்துல கிளம்புனா இப்படித்தான்…’’ என்று முனகியபடி பரிசோதித்தார். சுருட்டு குடித்துக் கொண்டிருந்த எனக்கு ‘சுருக்’கென கோபம் வந்தது. அவரை மிரட்டிப் பணிய வைக்க நினைத்தேன்.

’’மனதை முழுமையாக டிரைவிங்கில் செலுத்தாமல், காலத்தின் மீது பழியைப் போடுகிறீர்களா? இன்று உங்கள் முதலாளியும், நீங்களும் இந்த காருக்குள் உயிர் விடவேண்டும் என்பதுதான் விதி. அதனை என் ரத்தம் கொடுத்து தடுத்திருக்கிறேன். விபத்துக்காக கலங்குவதை விட்டு, உயிர் பிழைத்ததற்காக சந்தோஷப் படுங்கள்…’’ என்றேன்.

எதிர்பார்த்தபடியே என்னுடைய பதில் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. திகில் நிறைந்த முகத்துடன் பேசினார்.

’’ஆமா சாமி, இந்த சனிப்பெயர்ச்சியில எங்க முதலாளி உயிருக்கு ஆபத்துன்னு சொல்லியிருந்தாங்க. அதைத்தான் நீங்க தடுத்திருக்கீங்க. உங்களைப் பத்தித் தெரியாம தப்பாப் பேசிட்டேன். மன்னிச்சிருங்க சாமி…’’ என்று அளவுக்கு மீறி பணிந்தார். எல்லா பணக்காரர்களுக்கும் ஏதேனும் கண்டம் இருப்பதாக கதை விட்டால்தானே ஜோசியர்களுக்கு பிழைப்பு ஓடும். நான் குருட்டாம்போக்கில் சொன்னதை நிஜமாகவே நம்பினார் சுந்தரம்.

நான் எதையும் கண்டுகொள்ளாமல், ‘‘காரை எடுங்கள்.. என்னை அருகே ஏதாவது ஒரு பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டு நீங்கள் ஊர் திரும்புங்கள்’’ என்றேன்.

’’கார் ஓடுமான்னு தெரியலையே…’’ என்று டூல் பாக்ஸை எடுத்தார்.

’’முதலில் நம்பிக்கை வையுங்கள்..’’ என்று சொல்லி அருகிலிருந்த மணலில் சாய்ந்து படுத்தேன். கொஞ்சநேரத்திலேயே கார் உறுமும் சப்தம் கேட்டது. உடனே சுந்தரம் முதலாளிக்கு விபத்து பற்றிய தகவலை செல்போனில் சொல்லி, என்னுடைய சக்தியால் உயிர் பிழைத்ததையும் சொன்னார். முதலாளியின் பதிலை பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

இரண்டு நாட்கள் லேட்டாக வந்தாலும் பரவாயில்லை, சாமிக்கு ஒரு மருத்துவமனையில் சிகிச்சையளித்து, அதற்குப் பின் குற்றாலத்தில் இறக்கி விட்டுத்தான் வரவேண்டும் என்று முதலாளி சொல்லி விட்டாராம். சுந்தரத்திற்கு இப்போது என்மீது அபிமானமும் பயமும்  கூடியிருந்தது.  

நான் ரொம்பவும் பிகு செய்யாமல் காரில் ஏறிக்கொண்டேன். இப்போது காரை சீராக ஓட்டினார் சுந்தரம். இராஜபாளையத்தை நெருங்கியபோது நன்றாக இருட்டி, மழையும் பெய்யத் தொடங்கியது. ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே ஒரு டீ கடை வாசலில் நிறுத்தச் சொன்னேன்.

 எனக்கு தாங்கிக் கொள்ளக்கூடிய வலிதான் என்று சொன்னபின்னரும் அருகே இருந்த மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒரு மாத்திரை வாங்கி வலுக்கட்டாயமாகக் கொடுத்தார். மாத்திரையை வீசி எறிந்துவிட்டு டீ, பன் சாப்பிட்டதும் உடம்புக்குத் தெம்பு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *