மழை பலமாக பெய்யத் தொடங்கியது. மழை காலத்தில் காரில் பயணம் செய்வது அத்தனை சுகமாக இருந்தது. மழையை வேடிக்கை பார்த்த நேரத்தில் என்னுள் இருந்து ஏதோ இசை பிறந்தது. குழந்தையைப் போன்று பாட்டுப் பாடி சலித்து வேடிக்கை பார்த்தேன்.

’’சாமி… நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா?’’ என்று பீடிகை போட்டார் சுந்தரம்.

’’உங்கள் அனுபவத்துக்குத் தெரியாத எதை நான் சொல்லிவிடப் போகிறேன்…’’ என்று பழைய சமாசாரத்தைக் குத்திக் காட்டினான்.

சுந்தரம் என் குத்தலை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தார். ‘‘சின்ன வயசிலேயே, எங்க முதலாளி கோடீஸ்வரனா இருக்கார். இன்னும் எத்தனையோ பேர் சொந்த வீடு கட்டி வசதியா செட்டிலாயிட்டாங்க. ஆனா எனக்கு இத்தனை வயசாகியும் சம்பளம் பதினைஞ்சாயிரத்து சொச்சம்தான். என் புள்ளைய நல்லா படிக்க வைக்க முடியலை, அவனும் என்னைப் போலவே ஒரு இடத்துல சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்க்குறான். என் ரெண்டு பெண் குழந்தைக்கும் கல்யாணம் முடிச்சுக் குடுத்தாலும், எதுவும் சொல்லிக்கிறமாதிரி இல்லை. ஒருத்தி புருஷன் கூட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கா. இன்னொருத்தி விட்டுட்டு வந்துட்டா. சில நேரம் யோசிச்சுப் பார்த்தா எதுவுமே நிம்மதியில்லாம… என்னத்துக்குப் பிறந்தோம்னு தோணுது…’’ என்று தோற்றுப் போன படைவீரன் போன்று கேட்டார்.

சுந்தரத்தின் தோளைத் தொட்டபடி பேசத் தொடங்கினேன்.

’’சிலை வைக்கப் பட்ட மனிதர்கள் அல்லது பணம், புகழ், செல்வாக்குடன் இருப்பவர்கள் மட்டுமே மனிதனாகப் பிறந்ததற்கு அர்த்தமுள்ளவர்கள் என்று நினைக்கிறீர்களா? சமுதாயத்தின் பார்வைக்கு இவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள்ளும் கடைசிவரை ஏதாவது ஒரு மனக்குறை, போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் சொந்த வீடு கட்ட முடியவில்லை என்று வருத்தப் படுகிறீர்கள். ஆனால், உங்கள் முதலாளி சொந்த வீட்டில் நிம்மதியாக வாழ முடியவில்லையே என வருந்துகிறார். வெளியில் இருந்து பார்ப்பவருக்கு, உங்கள் முதலாளியின் பிரச்னைகள், வருத்தங்கள் தெரிவதில்லை. அவரை ஒரு வெற்றியாளராகவே பார்ப்பார்கள். அதனால் தேவையின்றி மனசைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். எல்லோருமே முழுமையானவர்கள், மனிதர்கள் அத்தனை பேருமே வெற்றி பெற்றவர்கள்தான்…’’ என்றேன்.

’’ஆனா சிலர் அனுபவிக்கும் வசதி, சந்தோஷம் எங்களுக்குக் கிடைக்கிறதில்லையே…’’

’’ஆனால், ஒரு உண்மை தெரியுமா? சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  மகாராஜாக்களும், சக்கரவர்த்திகளும் கூட இன்றைய சாதாரண மக்களைப் போன்று சொகுசாக, வசதிகளுடன் வாழ்ந்திருக்க முடியாது. ஏசி, ஹீட்டர், தொலைக்காட்சி, செல்போன், ஏரோப்ளேன் போன்ற வசதிகளுடன் வாழவில்லை என்பதால்  அவர்களை தோற்றுப் போனவர்கள் என்பீர்களா?’’

அமைதியாக இருந்தார் சுந்தரம்.

’’அடுத்தவர்களுடன் ஒப்பீடு செய்யும்போதுதான் வெற்றி, தோல்வியும் உங்களைப் பாதிக்கிறது. உங்கள் வாழ்க்கையை மட்டும் நீங்கள் வாழுங்கள், அடுத்தவரைப் போன்று வாழ ஆசைப்பட்டால் கடைசிவரை துன்பம்தான். உங்களுக்கு மட்டுமல்ல ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் துன்பமே அடைவார்கள். இத்தனை வயது வரையிலும் வேலை பார்க்கும் உடல் நலன் வாய்த்திருப்பது எத்தனை பெரிய வரம், குழந்தைகள் அனைவரையும் கரையேற்றியது எத்தனை பெரிய சாதனை. இதுவே நீங்கள் நிறைவாக வாழ்ந்ததற்கும், வெற்றி பெற்றதற்கும் சாட்சி. முதலாளியாக இல்லையே என்று வருத்தப்படுவதை விட சிறந்த டிரைவராக இருப்பதற்கு மகிழ்ச்சி கொள்ளுங்கள். உங்கள் முதலாளிக்கு இத்தனை சிறப்பாக வண்டி ஓட்டத் தெரியாது என்று பெருமைப்படுங்கள்’’ என்றதும் சுந்தரம் முகத்தில் சிறு கீற்றாக புன்னகை வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *