கடல் என்றால் அலைகள் இருக்கத்தான் செய்யும் என்பது போன்று, வீடு என்றால் பிரச்னைகளும் பொண்டாட்டி என்றால் தொந்தரவுகளும் இருக்கத்தான் செய்யும். அதை சமாளிக்கமுடியாத ஆண்கள் அவ்வப்போது ஒரு விசித்திரமான அஸ்திரத்தை எறிவதுண்டு. நீ இப்படியே நச்சரித்துக்கொண்டே இருந்தால், ஒரு நாள் நான் காவி உடுத்தி காணாமல் போய்விடுவேன் என்பார்கள். அதற்கு சாட்சியாக தாத்தாவின் தாத்தா ஓடிப்போன வரலாற்றை சொல்வார்கள். இப்படி பயம் காட்டுபவர்கள் எந்தக் காலத்திலும் துறவியாக மாட்டார்கள் என்று உறுதியாக சொல்லலாம். ஏனென்றால் துறவு என்பது மகத்தான, உறுதியான மனநிலை. எல்லா செல்வங்களையும் விட்டு விலகிச்செல்லும் சித்தார்த்தனின் மனோதிடம் வேண்டும்.
இந்த உலகத்தை தனித்து நின்று சந்திக்கும் தைரியம், மனோதிடம் வருவதுதான் துறவு நிலை. எதற்காகவும் எந்த ஒரு மனிதனையும் சார்ந்திருக்கமாட்டான் துறவி. ஆனால் இன்று துறவி என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாமே, ஆடம்பர மடம் கட்டி, ஆயிரக்கணக்கான அடிமைகளை தன்னுடன் துணைக்கு வைத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை.
முந்தைய காலங்களில் வானப்பிரஸ்தம் என்ற ஒரு நிகழ்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருந்தது. அதாவது வாழ்க்கையை போதுமான அளவுக்கு நிறைவாக வாழ்ந்து முடித்ததும், வனப்பகுதிக்குள் நுழைந்து எளிமையான வாழ்க்கைக்கு மாறிக்கொள்வார்கள். சமைப்பது, மருத்துவம் போன்றவற்றை ஒதுக்கிவிட்டு, கிடைப்பதை மட்டும் தின்று மரணத்தை எதிர்நோக்கி வாழ்க்கையை நகர்த்துவார்கள். ஆனால் இன்று மரணத்தின் கடைசி நொடி வரையிலும் வாழ்க்கையில் திளைத்து, ஆசையில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.
சங்கரலிங்கம் வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து ஏகப்பட்ட சொத்து சேர்த்துவைத்திருந்தார். பிற்காலத்தில் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காக, எல்லா சொத்துக்களையும் தன்னுடைய பேரிலேயே வைத்திருந்தார். அதனால் அவர் பெற்ற நாலு பிள்ளைகளும், அவருடனே கூட்டுக்குடும்பமாக சேர்ந்து இருந்தார்கள். அவர் துடிப்புடன் இருந்தவரையிலும் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடிமைபோல் கிடந்தார்கள். திடீரென ஒரு நாள் சங்கரலிங்கம் பக்கவாதம் வந்து படுக்கையில் விழுந்ததும், குடும்ப நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய அதிகாரத்தை காட்டத் தொடங்கியது. எந்த சொத்து யாருக்குச் சேரவேண்டும் என்பதில் ஏகப்பட்ட குழப்பம் உண்டானது. பாசத்தினால் அத்தனை பிள்ளைகளும் தன்னுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த சங்கரலிங்கம், பிள்ளைகளின் குரூரமான முகத்தைப் பார்த்து வேதனையடைந்தார். இதனை பார்க்கத்தான் இத்தனை நாட்கள் உயிரோடு இருந்தேனா என்று வருத்தப்பட்டார். இரண்டு வருடங்கள் இப்படியே நொந்து நூலாய் வாழ்ந்தார் சங்கரலிங்கம். அவரை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வாழ்க்கையில் இருந்து விலக்கத் தொடங்கினார்கள் பிள்ளைகள். அவருக்கு சாப்பாடு, தண்ணீர் கிடைப்பதுகூட சிரமமானது.
அதனால் சங்கரலிங்கத்தின் உடல்நிலை மேலும் மோசமானது. வாய் பேசமுடியாத நிலைக்கும் சுயநினைவு இழக்கும் கட்டத்துக்கும் வந்தார். உடனே ஆளுக்கொரு பத்திரம் தயார் செய்து, சங்கரலிங்கத்தின் கைரேகை வாங்குவதற்கு ஆளாய் பறந்தார்கள். அத்தனை சொத்துக்களையும் தன்னுடைய பெயருக்கு எழுதிக்கொண்டு, சங்கரலிங்கத்தை கொலை செய்யவும் துணிந்தான் ஒருவன். இதனை தெரிந்துகொண்டவன் மற்றவர்களிடம் தகவல் சொல்ல, அந்த வீடு போர்க்களமானது. நான்கு பேருக்கும் பெரிய மோதல் ஏற்பட்டு வெட்டு, குத்து ஏற்பட்டது. நான்கு பேரும் ஜெயிலுக்குப் போன நாளில் செத்தே போனார் சங்கரலிங்கம். இப்படித்தான் பெரும்பாலோர் இறுதிக்காலம் அமைந்துவிடுகிறது.
புத்திசாலித்தனமாகவும் ஒரு சிலர் வாழ்க்கையை அமைக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஜோசப். கம்ப்யூட்டர் துறையில் படித்து வேலைக்குப் போனார். வெளிநாட்டு வாய்ப்பு வந்தது. மிகவும் கடுமையாக உழைத்தார். பதவியும் பணமும் வந்தது. மேலே மேலே உயரத்திற்கு போய்க்கொண்டே இருந்தார். திடீரென ஒரு நாள் பார்த்துவந்த வேலையில் இருந்து வெளியேறினார். அதுவரை சேர்த்துவைத்திருந்த பணத்தைக் கொண்டு, சொந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டினார். கொஞ்சம் இடம் வாங்கிப்போட்டு இயற்கை விவசாயம் தொடங்கினார். இந்த இரண்டிலும் அவருக்கு பணம் கொட்டவில்லை என்றாலும் நிறைய நிறைய சந்தோஷம் கொடுத்தது.
கோட், சூட் என்று மாட்டிக்கொண்டிருந்த ஜோசப், கிராம வாழ்க்கைக்கு ஏற்ப வேட்டி, பனியனுக்கு மாறிவிட்டார். வெளிநாட்டுக்காரனுடன் சேர்ந்து விதவிதமாக சாப்பிட்ட ஜோசப், இப்போது சிறுதானியங்களை பசிக்கும்போது எடுத்துக்கொள்கிறார். இனிமேல் தன்னுடைய வாழ்வுக்கு பணம் தேவையில்லை என்பதை உணர்ந்துவிட்டார் ஜோசப். அதனால் கடைசி காலத்தில் யாரை நம்பியும் வாழாமல் இயற்கைக்குத் திரும்பி வாழத்தொடங்கிவிட்டார். இதுதான் வாழ்க்கை, இதுதான் தெளிவு.
மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் சரியான வயதில் வானப்பிரஸ்தம் மேற்கொண்டிருந்தால், போர் நடந்திருக்கத் தேவையே இல்லை. ஆளுக்கு கொஞ்சம் நிலத்தை பிரித்துக்கொண்டு தர்மனும் துரியோதனனும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால் பதவி சுகம், பாச சுமையினால் வாழ்நாள் முழுவதும் அரசனாக வாழவேண்டும் என்று ஆசைப்பட்டான் திருதராஷ்டிரன். காலம் முழுவதும் அரசனாக வாழமுடியும் என்று நம்பினான். அதனாலே பெற்ற அத்தனை பிள்ளைகள் கொல்லப்படுவதையும் கண்முன்னே பார்க்கும் துரதிர்ஷ்டத்திற்கு ஆளானான். அதனால் போதும் என்ற மனநிலை தோன்றியதும் வாழ்க்கையில் இருந்து விலகவேண்டும்.
? போதும் என்ற மனநிறைவு எளிதில் கிடைப்பதில்லையே, என்ன செய்யவேண்டும்?
போதும் என்ற மனநிறைவு தானாகக் கிடைக்காது.. எத்தனை பணம் சேர்த்தாலும் எதிர்காலத்துக்குப் போதாது என்ற உண்மையை ஒவ்வொரு நபரும் உணரவேண்டும். ஆயிரம் கோடி சேர்த்துவைத்தாலும் காணாமல் போவதற்கு ஒரு நொடி போதும். அதனால் சேமிப்பை பற்றி கவலைப்படாதே. வாழ்க்கை போதும் என்ற எண்ணம் தோன்றினால், உடனே வழக்கமான வாழ்க்கை பாதையில் இருந்து வெளியேறு.
? வாழ்க்கை சக்கரத்தில் இருந்து வெளியேறி என்ன செய்யவேண்டும்?
எதுவும் செய்யவேண்டாம். வேடிக்கை பார். எப்போதும் போல் வாழு. ஆனால் உலகத்தோடு ஒட்டிக்கொண்டு இருக்காதே. நீ இல்லையென்றால் வீடு இடிந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையை தூக்கிப்போடு. உன்னுடைய ஆலோசனை, அறிவுரை, வழிகாட்டுதல் இல்லாமலே உன்னுடைய இல்லம் சிறப்பாக நடக்கும் என்பதை கண் முன்னே வேடிக்கை பார். வாழ்க்கை புதிதாக தெரியும். புதிர்களுக்கு விடை கிடைக்கும்.
? சாமியாரைப் போன்று காவி உடுத்தி சந்நியாசியாக வேண்டாமா?
துறவி, சாமியார், சந்நியாசி என்று வேடம் போடத்தேவையில்லை. வீட்டிலேயே நீ துறவியாக வாழலாம். வாய்க்கு ருசியாக சாப்பிடுவதை முதலில் நிறுத்து. சாப்பாட்டில் குறை இருந்தாலும், குற்றம் சொல்லாமல் சாப்பிடப் பழகு. உணவு சாப்பிடும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள். நேரத்திற்கு உணவு உட்கொள்ளும் முறையை மாற்று. கிடைக்கும்போது சாப்பிடு, இல்லையென்றால் பசியை சாப்பிடு. கண் முன்னே பிள்ளைகள் தவறு செய்வது தெரிந்தாலும் சட்டை செய்யாமல் அமைதியாக இரு. தவறுகள் மூலம் நல்ல பாடம் படித்துக்கொள்வார்கள். அந்த அனுபவத்தைவிட நல்ல ஆசான் வேறு எதுவும் இல்லை. நாளை என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பட்டியல் போடாமல், இன்று இரவே செத்துப்போகலாம் என்ற நினைப்பில் தூங்கு. நேரமாகிவிட்டது என்று பதறிப்போய் எழாதே. யாருக்கும் இடைஞ்சலாக இல்லாமல், யாரையும் சார்ந்து இராமல், பேச்சைக் குறைத்து வாழப்பழகு. வீட்டுக்குள்ளே நீ துறவியாகி நிம்மதியாக இருக்கலாம்.
? பெண்களும் துறவறம் மேற்கொள்ள வேண்டுமா?
திருமணம் முடிந்துவிட்டாலே, பெண் கிட்டத்தட்ட துறவியாகிவிடுகிறாள். தன்னைவிட கணவனுக்கு என்ன தேவை என்றுதான் பார்க்கிறார்கள். குழந்தை பெற்றதும் முழு துறவியாகிறாள். பிள்ளைக்காக வாழ்கிறாள். அவள் கடவுளிடம்கூட, தனக்காக எதையும் கேட்பதும் பெறுவதும் இல்லை. அதனால்தான் கடைசி காலத்தில் கிடைத்ததை குடித்துக்கொண்டு பெண்களால் நிம்மதியாக வாழக்கையைத் தள்ளமுடிகிறது. மனைவி இல்லாத கணவன் சீக்கிரம் மரணம் அடைவதற்கும், கணவன் இல்லாத மனைவி நீண்ட நாட்கள் வாழ்வதற்கும் அடிப்படை காரணம், பெண்ணின் துறவு மனப்பான்மைதான்.
? எந்த வயதில் மனதளவில் துறவு மேற்கொள்வது நல்லது?
ஐம்பதில் அதற்காக ஆசைப்படு. அறுபதுக்குப் பிறகும் உனக்கு அந்த எண்ணம் வரவில்லை என்றால், நீ பூமியிலே நரகத்தை பார்க்கப்போகிறாய்.