ஏனோ, என்னுடன் உரையாடுவதில் மிகுந்த சந்தோஷமாக இருந்தார் சுந்தரம். அவரை பற்றி கேட்டுக்கொண்டே வந்தவர் சட்டென்று திசை மாறி, ‘‘சாமி, குற்றாலத்துல குளிச்சா பைத்தியம் பிடிச்சவங்களுக்கும் தெளிவு கிடைச்சுடுமாமே, உண்மையா?’’ என்று கேட்டார்.
’’மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்கும், சாதாரண நபர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது தெரியுமா?’’
’’ஒரே ஒரு வித்தியாசமா?’’
’’ம்.. நீங்கள் நினைப்பதை எல்லாம் பேசமுடியாது, நினைக்கும்படி எல்லாம் செய்ய முடியாது. ஆனால் நினைப்பது போல் எல்லாம் வாழ்பவர்களைத்தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்கிறோம். மக்கள் தொகை எண்ணிக்கையில் நாம் அதிகமாகவும், அவர்கள் குறைவாகவும் இருப்பதால் நாம் தெளிவான மனநிலை உள்ளவர்கள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களை நோயாளி என்கிறோம். குற்றாலத் தண்ணீரில் மூலிகை இருப்பதால் மட்டும் ஒருவரது மன அழுத்தத்தை மாற்றிவிட முடியாது. சொந்த மகன் அல்லது மகளுக்கு மன நலம் பாதிக்கப்பட்டால் என்ன செய்வோமோ, அதுபோல் அவர்களுடன் பேச வேண்டும், கவனிக்க வேண்டும், காத்திருக்க வேண்டும்’’ என்றபடி நகர்ந்து உட்கார்ந்த நேரத்தில் உடல் வலி தெரிந்தது. வாய் விட்டு வலியை வெளிப்படுத்தி, முகத்தைச் சுளித்தேன்.
’’சாமி… ரொம்ப வலிச்சா ஏதாவது ஆஸ்பத்திரிக்குப் போயிடலாம்…’’ என்றார் பதட்டமாக.
’’வேண்டாம் சுந்தரம்… நான் வலியை ருசித்துப் பருகி நீண்ட நாளாகிவிட்டது. இந்த உடல் துன்பப்பட்டு வலியை நன்றாகவே அனுபவிக்கட்டும். இதுவரை தாங்கக்கூடிய வலியாகவேதான் இருக்கிறது. இந்த வலியில் இருந்து தப்பிப்பதைவிட அனுபவிக்கவே ஆசைப் படுகிறேன். இன்பத்தை கொண்டாடுவது போன்று உடல் வலியையும் மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொள்கிறேன்’’என்று சொல்லி கண் மூடினேன்.
குற்றாலக்காற்று ஜிலுஜிலுவென எழுப்பியது. சீஸன் நேரம் இல்லை என்பதால் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.
’’ஏதாவது ஒரு லாட்ஜில் ரூம் போடலாமா?’’ என்று சுந்தரம் கேட்க வாய்விட்டுச் சிரித்தேன். புரியாமல் நின்ற சுந்தரத்தைப் பார்த்து, ‘‘இந்த குற்றால மலைதான் எனக்கு தங்கும் விடுதி. நீங்கள் வேண்டுமானால் ஒரு ரூம் போட்டு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். காலையில் குற்றாலக் குளியல் போட்டு ஊருக்குத் திரும்புங்கள்’’ என்றேன்.
நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல், ‘‘நாம் இருவரும் காருக்குள் படுத்துக் கொள்வோம், காலையில் என்ன செய்வது என்று முடிவெடுப்போம்…’’ என்றார். எனக்கும் அந்த யோசனை பிடித்திருக்கவே நான் பின் ஸீட்டிலும், அவர் முன் ஸீட்டிலும் படுத்தோம்.
’’சாமி, எப்போதும் சந்தோஷமாக இருக்க ஏதாவது வழி சொல்லுங்களேன்…’’ என்றார்.
’’நிரந்தரமான சந்தோஷம் என்று எதுவுமே இல்லை சுந்தரம். உங்களுக்கு இனிப்பு பிடிக்கும் என்பதற்காக தினமும் இனிப்பு சாப்பிடக் கொடுத்தால், அதுவே ஒரு கட்டத்தில் துக்கமாக மாறிவிடும். இனிப்பைக் கண்டாலே முகசுளிப்பு வந்துவிடும். அதனால் எது இருக்கிறதோ அதையே நிறைவாக எடுத்துக் கொள்ளுங்கள், திருப்தியடைவதில் மட்டுமே ஒருவன் சந்தோஷம் அடைய முடியும்…’’ என்றேன்.
’’காலையில் குற்றாலநாதரை தரிசிக்க வேண்டும்’’ என்றார்.
’’ஓ… நல்ல விஷயம்’’
’’சாமி… ஏதோ கிண்டல் பண்றது மாதிரி சொல்றீங்க…’’எனக் கேட்டார்.
’’கோயிலை எதுக்கு கட்டினாங்கன்னு தெரியுமா?’’
’’என்ன இப்படிக் கேட்குறீங்க… சாமி கும்பிடத்தான்…’’ என்று இழுத்தார்.
’’இல்லை சுந்தரம், கடவுளைக் கைதியாக அடைத்து வைக்கத்தான். கடவுள் நமக்கு மட்டும், நமது ஊருக்கு மட்டும் அருள் பாலிக்க வேண்டும், வேறு எங்கேயும் போய்விடக் கூடாது என்று பயந்து போய்தான் பெரிய பெரிய கோவிலாக கட்டி, அதற்குள் கடவுளை அடைத்து வைத்தான் மனிதன். அதற்குப் பிறகும் கடவுள் மீது சந்தேகம் வந்தது. அதனால்தான் தினமும் பூஜை நடத்தி கடவுளை தாஜா செய்கிறார்கள். நீங்களும் உங்கள் பக்தியைக் காட்டி இறைவனிடம் வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள்…’’ என்றேன்.
நான் சொன்னதை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியாமல் விநோதமாக விழித்தார் சுந்தரம்.
’’படுங்கள் சுந்தரம். காலை எழுந்ததும் அருவியில் குளித்து குற்றால நாதரை தரிசித்து ஊருக்குக் கிளம்புங்கள்…’’ என்று சொல்லிவிட்டு கண்களை மூடினேன். கொஞ்சநேரத்தில் சுந்தரத்திடம் இருந்து மெலிதான குறட்டைச் சப்தம் கேட்கவே, மெதுவாக எழுந்து சத்தம் போடாமல் காரின் கதவைத் திறந்து வெளியேறினேன். அருவி, ‘ஹோ’வென்று இரைந்து என்னை அழைத்தது.