அர்த்த ராத்திரிக் குற்றாலத்தை ரசித்தபடியே நடந்து மெயின்அருவிக்குள் நுழைந்து அசையாமல் நின்று குளித்தேன். மனதுக்குப் போதுமென்று தோன்றாவிட்டாலும் உடலுக்குப் போதுமென்றதும் ஈர உடையுடன் வெளியே வந்தேன். பிறகுதான் பையில் பணமும் சுருட்டும் இருந்தது ஞாபகம் வர எடுத்துப் பார்த்தேன். மொத்தமாக நனைந்து போயிருந்தது, அப்படியே எடுத்து அருவித் தண்ணீரில் வீசியெறிந்தேன், ஒரு கணத்தில் மிதந்து தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போனது.

மழை தூறிக்கொண்டே இருக்க, இலக்கின்றி நடந்தேன். மூடிக்கிடந்த ஒரு கடையின் ஒரத்தில் மழைக்காக ஒதுங்கியிருந்த ஒருவர் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்தபோது, ‘‘என்ன தேசாந்திரம் போன சாமி, சீக்கிரமா திரும்பிடுச்சு…’’ என்று சொல்லி சிரித்தபடி வெளிச்சத்துக்கு வந்து ஒரு சிகரெட்டைக் கையில் கொடுத்தார்.

அது வேதாச்சலம். ஐம்பது வயதை தாண்டியவர்… பல வருட குற்றால யாத்திரையில் பழக்கமானவர். வெளிச்சத்தில் இழுத்துப் பார்த்தேன், வழுக்கை முன்னைவிட அதிகரித்திருந்தது, ஆனாலும் வழக்கம் போல தாடி, மீசை இல்லாமல் சுத்தமாகவே இருந்தார்.

காலையும் இரவும் இட்லி விற்பனை செய்வார். மற்ற நேரங்களில் குற்றாலத்தில் காலாற சுற்றிக் கொண்டிருப்பார். இதுவரை அவரது வாழ்க்கை, குடும்பம், குழந்தை என்று எதைப் பற்றியும் அவர் பேசியதில்லை, நானும் கேட்டதில்லை.

’’என்னாச்சு… நடுராத்திரியில் அருவி தரிசனமா..?’’ என்றபடி சிகரெட்டைப் பற்றவைத்தேன். ஏனோ, அவரை பார்த்தது மனதுக்கு சந்தோஷமாயிருந்தது.

’’சாயங்காலம் ஒரு பையன் கடைக்குத் தனியா வந்தான். சாப்பிட உட்கார்ந்தவன், ஒரு இட்லியை மட்டும் ஏனோதானோன்னு சாப்பிட்டு மீதியை அப்படியே இலையில வச்சிட்டுக் கிளம்பிட்டான். அவன் கண்ணுல நிறையவே சோகம் இருந்திச்சு. கடையை அப்படியே போட்டுட்டு அவன் பின்னாடி போனேன். சிற்றருவி பாதையில போய், உச்சிப் பாறையில போய் உட்கார்ந்து அழுதான். தற்கொலை பண்ணிடுவான்னு பயந்து ஒரு போலீஸ்காரர்கிட்டே சொன்னேன். அவரும் உடனே அவனை மேலே இருந்து கீழே விரட்டி விட்டார்.  ஆனாலும், அவன் தற்கொலை செஞ்சுக்குவான்னு பயமா இருக்கு, அதான் அப்போ இருந்து அவனுக்குக் காவலுக்கு இருக்கேன்…’’ என்று தூரத்தில் கையைக் காட்டினார். எவனோ ஒருவனுக்காக இருட்டில் காத்திருக்கும் வேதாச்சலத்தை பார்க்க பிரமிப்பாக இருந்தது. அவர் சுட்டிக் காட்டிய திசையில், ஒரு மரத்தின் கீழே, வழிந்துகொண்டிருந்த மழையைப் பொருட்படுத்தாமல்  சாய்ந்தபடி அமர்ந்திருந்தான், அந்த இளைஞன்.

எனக்கு சிரிப்பு வந்தது. ‘‘உமது இட்லியும் சாம்பாரும்தான் அவனைப் பயமுறுத்தி இருக்கவேண்டும். அதனால் சாப்பிடாமல் நழுவியவனை, வேவு பார்த்து நேரத்தை வீணடித்து விட்டீர்களே…’’ என்று வாய்விட்டு சிரித்தேன்.

என்னைப் பற்றி வேதாசலத்துக்குத் தெரியும் என்பதால் கோபப்படாமல், ‘‘ஒரு வேளை அவன் தற்கொலை செய்திருந்தால், என்னால் நிம்மதியாக வாழ முடியாது, அதனால் நேரத்தை வீணடித்ததில் தவறில்லையே…’’ என்று அவரும் புன்னகைத்தார்.

’’சரி.. அவனிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாமே!’’

’’என்னால் மனிதர்களுடன் உறவாட முடிவது இல்லை. என்னைப் பார்த்தும் அவன் பயந்துவிடலாம்…’’ என்றார்.

’’ஆஹா… எத்தனை அழகாகப் பேசுகிறீர்கள். ஊர் விட்டு ஊர் வந்து, யோசித்துக் கொண்டே இருப்பவன் இனிமேல் தற்கொலை செய்து கொள்ள மாட்டான் என்று நான் சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை, வாருங்கள் அவனிடமே போகலாம்…’’ என்று அவனை நோக்கி நடந்தேன்.

இளவயதுக்காரர்களை வேறு எந்த சோகமும் இத்தனை தூரம் பாதிக்காது என்பதை அனுமானித்து, ‘‘உன்னை ஏமாற்றியவள் பெயர் என்ன சொல்… அவளை என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்…’’ என்று உரத்த குரலில் கேட்டபடி, அவன் அருகில் அமர்ந்தேன்.

அந்த இருட்டுக்குள் இப்படி ஒரு கேள்வியை என்னைப் போன்ற ஒருவனிடம் இருந்து எதிர்பாராமல் அதிர்ச்சி அடைந்தான். சட்டென எழ முயற்சித்தான்  அருகே இருந்த வேதாசலத்தையும் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை என்பது பார்வையிலே தெரிந்தது. நான் அவன் தோளில் கைவைத்து அழுத்தினேன்.

’’நீங்கள் சித்தரா..?’’ என்றபடி தடுமாறினான்.

’’அப்படியே வைத்துக்கொள். இன்று மாலையிலிருந்து நீ ஒரே ஒரு இட்லி மட்டும்தான் புசித்திருக்கிறாய் சரிதானே…’’ என்று வேதாசலத்தைப் பார்த்து புன்னகைத்தேன்.

மேலும் அதிர்ச்சியடைந்தவன், ‘‘நீங்கள்..’’ என்று இழுத்தான்.

’’என்னைப் பற்றிய ஆராய்ச்சி எதற்கு? உன்னுடைய குல தெய்வம் எனக்கு ஆணையிட்டதால் நான் இங்கு வந்திருக்கிறேன். நீ விரும்புவதைச் செய்துதர எனக்கு உத்தரவு. இப்போது சொல் நீ தற்கொலை செய்ய உதவ வேண்டுமா அல்லது உன் காதலியை மனம் மாற்ற வேண்டுமா?’’ என்றேன்.

என்ன சொல்வது, நம்புவதா… வேண்டாமா என்ற தடுமாற்றம் அவனிடம் தெரிந்தது. நிலைமையை சீர் செய்வதற்காக, ‘’நீ எங்கே அறை எடுத்திருக்கிறாய் என்று சொல், அங்கே போய் பேசுவோம்..’’ என்று எழுந்தேன். அவனுக்கும் அது பிடித்திருக்க வேண்டும். இருட்டில் இருந்து தப்பித்தால் போதும் என்று எழுந்து நடந்தான்.

எதுவும் பேசாமல் அவனுடன் சென்றோம். குற்றாலத்தில் வசதியான ஹோட்டல் ரூமுக்குள் நுழைந்தோம். அறைக்குள் நுழைந்ததும் உடனே ஏதோ அதிசயத்தை நான் செய்ய இருப்பதாக நம்பி, அவனது காதல் கதையை அவசரமாக ஒப்புவித்தான்.

இவன் பெயர் பிரசாத். லதாவை உயிருக்குயிராக காதலித்திருக்கிறான். இருவரும் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறார்கள். முகம் தெரியாத நண்பருடன் லதா பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பிரசாத் கண்டித்திருக்கிறான். சந்தேகப் படுகிறவனை காதலிக்க முடியாது என்று தாறுமாறாகப் பேசி சண்டை போட்டு பிரிந்து விட்டாள். அது, அவனது கோபத்துக்கும் சோகத்தும் காரணம் இல்லை.  

ஆம், இப்பொழுது இன்னொரு நண்பரை லதா காதலிக்கிறாள் என்பதுதான் பிரசாத்துக்கு ஆத்திரத்தைக் கிளப்பியிருக்கிறது. லதாவைப் பார்க்கும் போதெல்லாம் ஆத்திரம் வருவதால், அவளை பழி வாங்குவதற்கு நல்லவழி, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதுதான் என்று முடிவெடுத்து குற்றாலம் வந்துவிட்டான். ஆனால், இன்னும் அதற்குத் தைரியம் வரவில்லை என்று ஒப்புக் கொண்டான்.

’’ஒரே நதியில் இரண்டு முறை கால் நனைக்கமுடியாது என்பார்கள், அதன் அர்த்தம் தெரியுமா?’’ என்று கேட்டேன்.

’’எனக்கு தமிழ் பேச மட்டும்தான் தெரியும், சின்னப் பிள்ளையில இருந்தே இங்கிலீஸ் மீடியம்தான் படிச்சேன், தமிழ்ல கஷ்டமா ஏதாவது கேட்டாத் தெரியாது…’’ என்றான். வாய்விட்டுசிரித்தேன்.

‘’ஒரு நல்ல தமிழ் குடிமகனுக்கான அடையாளம் இதுதான். அதைவிடு. நதியில் நீர் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கும். அதனால், ஒவ்வொரு முறை கால் நனைக்கும்போதும், நீ புதிய நீரில், புதிய நதியில் கால் நனைப்பதாகத்தான் அர்த்தம். ஒவ்வொரு கணமும் பழைய நதி நகர்ந்துபோய்… புதிய நதிதான் அங்கே பிறந்துகொண்டே இருக்கிறது. அதைப்போன்று எத்தனையோ பிரிவுகள் உனக்குத் தெரியாமல் ரகசியமாக உனக்குள்ளே, தினமும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. நேற்று இருந்த நீ இன்று இல்லை. கடந்த காலத்தில் நீ செய்த ஒவ்வொரு செயலும் இப்போது உனக்கு அசட்டுத்தனமாகத் தெரியும். நீ குழந்தையாக இருந்தது முதல் வாலிபனாக வளர்ந்தது வரை எத்தனையோ பிரிவுகளை சந்தித்திருக்கிறாய், ஆனால் காதல் பிரிவை மட்டும் மறக்க முடியாமல் தவிக்கிறாய் அப்படித்தானே…’’

’’ஆமாம் சாமி…’’

’’உன்னுடைய தாய் அல்லது தந்தை எதிர்பாராமல் மரணம் அடைந்தால் என்ன செய்வாய்?’’

இப்படியரு கேள்வியைக் கேட்டு தயங்கியவன், ‘‘ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்…’’ என்றான்.

’’உன்னை இந்த உலகத்துக்குக் கொண்டுவந்தவர்கள், உனக்காக பணம் செலவழித்து படிக்க வைப்பவர்கள், உன் முன்னேற்றத்திற்காக கனவு காண்பவர்கள் இறந்தால்கூட, நீ அவர்களுக்காக உயிரைவிட மாட்டாய், ஆனால் எவளோ ஒரு பெண் உன்னை ஒதுக்கிவிட்டதற்காக தற்கொலை செய்து கொள்ளப் போகிறாய் அப்படித்தானே…’’

அமைதியாக இருந்தான் பிரசாத்.

’’அவள் இன்னொருவனை காதலிக்காமல் இருந்தால், நீ  அவளை மறந்திருப்பாய். ஆனால் அவள் சந்தோஷமாக இருப்பது உனக்கு அவமானமாக இருக்கிறது. அப்படித்தானே…’’ என்று கேட்டபொழுதும் பதில் இல்லை.

’’பிரிவு என்பது மாற்றம். மாற்றம் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாதது. எல்லா உறவுகளையும் ஏதாவது ஒரு கட்டத்தில் நீ இழந்துதான் ஆக வேண்டும், நிரந்தரமான உறவு என்று வாழ்க்கையில்  எதுவும் இல்லை…’’ என்று சொன்னதும் வாய் திறந்தான்.

’’ஆனா, காதல் தோல்வியைப் போல் இதுவரை என்னை எதுவும் பாதிக்கலையே சாமி?’’

’’இப்போது உனக்கு அப்படித்தான் தோன்றும். ஆனால் காலம் எனும் அற்புத மருத்துவன் எல்லாவற்றையும் மறக்கச் செய்வான்….. அவன் உன் காயத்தைக் குணப்படுத்துவான்’’

’’எனக்கு நல்லது செய்ய வந்திருப்பதாகச் சொன்னீர்கள்…’’ என்று முனகினான்.

’’ஆம்.. உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன். காதல் தோல்விக்கு அற்புதமான மருந்து காலம்தான். ஆனாலும் காயம் ஆறும் வரை காத்திருக்காதே. நீ யாரால் ஏமாற்றப் பட்டதாக நினைக்கிறாயோ, அவள் நன்றாக வாழவேண்டும் என்று மனசார வாழ்த்து தெரிவித்து… அவள் பாதையில் இருந்து விலகு. உனக்கு அதைவிட சிறந்த வேறு ஒரு பாதை இருக்கிறது என்று காத்திரு’’ என்றேன்.

ஓரளவுக்கு தெளிந்திருந்தான். ஆனாலும் ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால்தான் முழுமையாக காதல் தோல்வியில் இருந்து வெளிவருவான் எனத் தோன்றியது.

’’உன்னை அந்த பெண்ணிடம் இருந்து பிரித்தது மனிதர்கள் அல்ல, காலம்தான். நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் இருவருக்கும் அகால மரணம் என்று  விதி இருக்கிறது. நீ இப்பொழுது தற்கொலை முயற்சி வரை வந்ததன் காரணமே அந்த பெண்ணுடன் சிலகாலம் நட்புடன் இருந்ததுதான்.  உன் பெற்றோர்கள் உன் மீது வைத்திருக்கும் பாசம், குலதெய்வ வழிபாடு போன்றவைதான் உங்களைப் பிரித்து உயிருடன் வாழ வைத்திருக்கிறது…உன்னைப் பற்றிய கவலையில் உன் தாயும் தந்தையும் சாப்பிடாமல் காத்திருக்கிறார்கள்…’’ என்று அடித்துவிட்டேன்.

இப்போது பிரசாத் முகத்தில் தெளிச்சியும் கவலையும் வந்தது. ‘‘சாமி… நான் இதுவரைக்கும் என்னைப் பத்தி மட்டும்தான் யோசிச்சேன், அம்மா, அப்பாவைப் பத்தி யோசிக்கவே இல்லை. இனியாவது அவங்க சந்தோஷப்படுற மாதிரி நல்லது செய்ய ஆசைப்படுறேன். ஆனா, நான் செய்றது எல்லாம் சரியா, தப்பான்னு எனக்கே தெரியலையே…’’ என்றான்.

அவனது மாற்றமும் கேள்வியும் சந்தோஷமாக இருந்தது. அருகில் இருந்த வேதாசலமும் பிரகாசமானார்.

’’நீ என்ன செய்தாலும் அதை உன் தாய், தந்தை, உயிர் நண்பர்கள் உன் அருகில் நின்று பார்த்துக் கொண்டே இருப்பதாக கற்பனை செய்துகொள். அதற்குப்பின் நீயே நினைத்தாலும் தவறு செய்ய முடியாது…’’ என்றேன்.

அடுத்தகணம் உடமைகளை எல்லாம் எடுத்து வைத்து ஊருக்குக் கிளம்பத் தயாரானான். பர்ஸை எடுத்து உள்ளே வைக்கப் போனவன், அதனை விரித்து கைக்கு வந்த பணத்தை எடுத்து, ‘‘உங்களைப் போன்றவர்களுக்கு பணம் கொடுத்தால் அம்மா சந்தோஷப்படுவார்… வேண்டாமென்று சொல்லாதீர்கள்…’’ என்று கையில் திணித்தான்.

சற்று முன்னர் தண்ணீரில் வேண்டாமென வீசியெறிந்த பணம், மீண்டும் கைக்கு வந்ததை நினைத்து வாய்விட்டுச் சிரித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *