செடிகளில் பூத்துக்குலுங்கும் மலர்களை தரிசித்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. பின்னே வந்துநின்ற மகேந்திரன், ‘’ஏன் நீங்கள் மலர்களைக் கொய்து ஆண்டவனுக்குப் படைப்பதில்லை..?’’ என்று கேட்டார்.

‘’என்னிடம் ஆண்டவன் மலர்களைக் கேட்கவில்லையே, பின் எதற்காக நான் அதனை பறிக்க வேண்டும்?’’ என்று சொன்ன ஞானகுரு, மகேந்திரன் கையில் இருந்த பேப்பர்களை பார்த்ததும், ‘’நீண்ட காலமாக எனக்கென்று கொஞ்சம் வீடு வாங்கவேண்டும் என்ற ஆசை, அதைத்தான் இன்று நிறைவேற்றி வந்திருக்கிறேன். உங்கள் ஆசி வேண்டும்’’ என்று நீட்டினார்.

’’இந்த உலகில் ஏராளமான கொலைகள் இந்த மண்ணுக்காகத்தான் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும், இன்னமும் மண் மீதான ஆசை ஆணுக்குப் போகவே இல்லை’’ என்று சிரித்தார்

‘’எனக்கென்று இடம் வாங்குவது தப்பா?” ஆதங்கத்துடன் கேட்டார் மகேந்திரன்.

‘’நீ ரயிலில் பயணம் செய்கிறாய்… சுகமான பயணம் என்பதற்காக, ஏதேனும் ஒரு பர்த்தை நீ விலைக்கு வாங்குவாயா..?”

‘’அதெப்படி, நான் அந்த ரயிலுக்கு பயணி மட்டும்தானே…’’

‘’அப்படித்தான் மகேந்திரா… நீ இந்த பூமிக்கு விருந்தாளி. பயணம் முடிந்ததும் உன் உடுப்பைக்கூட உருவி எரித்துவிடுவார்கள். நீ சம்பாதித்த வீடு, சொத்து, நிலம், பதவி, புகழ், உறவு, நட்பு என எதுவும் உன்னுடன் வரப்போவதில்லை. இந்த உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும். ஆனாலும், இந்த மண்ணுக்குத்தான் எத்தனையெத்தனை போராட்டங்கள். இன்று நீதிமன்றங்களில் நிரம்பிவழிவது நில வழக்குகள்தான். நாட்டை பிடிக்கப்போகிறேன் என்றுதான் எல்லா அரசர்களும் சண்டை போட்டு மாண்டு போனார்கள். கோடிக்கணக்கான வீரர்கள் அரசர்களின் ஆசைக்கு உயிர் இழந்தார்கள். இன்றும் எல்லா நாடுகளும் அக்கம்பக்கத்து நாடுகளுடன் வம்பிழுப்பதற்கு காரணம் மண்ணாசைதான். மனிதர்களின் ரத்தத்தால் இந்த பூமியே சிவந்தாலும் மண்ணாசை மட்டும் மனிதனை விடுவதே இல்லை…’’

‘’நான் எனக்கென்று வாழத்தானே வாங்குகிறேன்..’’

‘’ஒரே ஒரு வீடு என்றுதான் இந்த ஆசை தொடங்கும். கொஞ்சம் நிலம், எதிர்கால முதலீடு என்று ஆசை வளரும். ஒரே ஒரு வீடு வாங்குவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சம்பளத்தில் பாதியை கடனுக்கு இழந்து, சந்தோஷத்தை தொலைத்த மனிதர்கள்தான் எக்கச்சக்கம். அண்ணன், தம்பி, சகோதரி பாசமாகத்தான் இருப்பார்கள். பெற்றோரின் இடத்தை பிரிக்கும்போதுதான் ஒவ்வொருவரின் கோர முகமும் வெளிப்படும். தன்னுடைய சொத்தில், யாரும் பங்கு கேட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், பெண்ணுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று சொல்லி வைத்தான். மண்ணைத்தான் எதிர்கால நம்பிக்கையாக நினைக்கிறான் மனிதன். மண்ணாசையை விடு வாழ்க்கை வசப்படும்’’ என்றார்.

‘’நான் இப்போது என்ன செய்வது..?”

‘’உன் இடம்… உன் ஆசை… நீயே முடிவுசெய்’’ என்று சிரித்தார் ஞானகுரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *