காலை உணவாக ஒரு பப்பாளி பழத்தை ரசித்து தின்றுகொண்டிருந்தார் ஞானகுரு. அப்போது ஒளியிழந்த கண்களுடன் வந்து நின்றார் ஒருவர். பாதி பழத்தைக் கொடுத்ததும் அதை மறுத்து, கேள்வியைக் கேட்டார்.

’’சுவாமி, நான் நன்றாக வாழ்ந்தவன். என்னுடைய ஃபேக்டரியில் 500 பேர் வேலை செய்தனர். ஒரு தவறான முயற்சியில் தோல்வியை சந்தித்தேன். அந்த தோல்வியில் இருந்து பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு புதிய முயற்சியைத் தொடங்கினேன். ஆனால், அதுவும் மிகப்பெரிய தோல்வி. இப்போது என் வீடு, ஃபேக்டரி என அத்தனையையும் இழந்துவிட்டேன். சொந்த ஊரைவிட்டு புதிய ஊருக்கு வந்திருக்கிறேன். இனியும் நான் உயிர் வாழத்தான் வேண்டுமா?” என்று கேட்டார்.

‘’நீ உயிர் வாழும் ஆசையில்தான் இருக்கிறாய். அதனால்தான், வெற்றி பெறுவதற்கான வழியைத் தேடி வந்திருக்கிறாய். உயிர் வாழும் ஆசை இல்லையென்றால், இங்கே வந்த நேரத்தில் நீ தற்கொலை செய்திருக்கலாம்’’ என்று சிரித்ததும் தலை குனிந்தார்.

‘’செல்வம் என்பது யாருக்கும் சொந்தமானது அல்ல. இன்று உன்னிடம் இருப்பது நாளை வேறு ஒருவரிடம் இருக்கும். ஆனால், உன்னுடைய உடல், உன்னுடைய மனம், தன்னம்பிக்கை, தைரியம், அனுபவம், திறமை ஆகியவை என்றென்றும் உன்னுடன் இருப்பவை. இத்தனை தகுதிகள் உன்னுடன் இருக்கும்போது, பணம் மட்டும் போய்விட்டது என்று ஏன் வருந்துகிறாய். இப்போதும் உன்னால் ஒரு தொழில் தொடங்க முடியும். அந்த தொழிலில் நீயே முதலாளியாகவும், நீயே தொழிலாளியாகவும் இரு. உன் அனுபவம், அறிவை முதலீடு செய்.ட்டு.

பழைய வாழ்க்கையை ஒரு கனவு என்று எண்ணிக்கொள். கனவு கலைந்ததும் நிஜ வாழ்க்கைக்கு வந்துவிட்டாய். பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உன் உடல் உறுதியாகவே இருக்கிறது. அதனால் புதிய மனிதனாக பிறப்பெடுத்துக்கொள்… கூட்டுப் புழுவில் இருந்து வண்ணத்துப் பூச்சியாக மாறிவிட்டதாக எண்ணிக்கொள். தன்னுடைய சொத்தை எல்லாம் மறந்து புத்தர் உண்மையைத் தேடினார். நீ சொத்துக்களை எல்லாம் இழந்து புதிய வாழ்க்கையைத் தேடு’’ என்றார் ஞானகுரு. முகத்தில் புன்னகையுடன் கிளம்பினார் புதியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *