திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிப் பார்க்கும் நோக்கத்தில் எழுந்து நடந்தேன். கொஞ்சநேரத்திலேயே கால் வலித்தது. எங்கேயாவது உட்காரலாம் என்று கண்களைச் சுழற்றியபோது, சிறுதூரத்தில் இருபதைக்கூட தொடாத ஒரு இளைஞன் தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். துள்ளித்திரிய வேண்டிய வயதில் உலகத்து சோகத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாக சுமக்கும் பரிதாபம் தெரியவே அருகே சென்று அமர்ந்தேன்.
இலக்கின்றி எதையோ வெறித்துக்கொண்டு இருந்தவனை என் வருகை சலனப்படுத்த… எழுந்து நடையைக் கட்டப் பார்த்தான். அவனை தடுத்து நிறுத்துவதற்காக, ‘‘தம்பி… நான் கீழே இறங்குவதற்கு கொஞ்சம் தோள் கொடுக்க முடியுமா?’’ என்று தூண்டில் போட்டேன்.
எதையோ சொல்ல வாயெடுத்தவன், ‘‘சரி.. வாங்க…’’ என்று அழைத்தான்.
’’கால் வலிக்கிறது, கொஞ்சநேரம் ஓய்வெடுத்துக்கொள்கிறேன்… வா நீயும் உட்கார்…’’என்று அவன் கையைப் பிடித்து அருகே அமரவைத்தேன்.
அமர்ந்தவனின் உள்ளங்கையை அன்போடு அழுத்திப் பிடித்து, ‘‘என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி பிரமை பிடிச்ச மாதிரி இருக்கிறாய்?’’ என்று மென்மையாகக் கேட்டேன்.
அவன் வாயில் இருந்து வார்த்தைகள் வருவதற்குப் பதில், கண்களில் இருந்து கண்ணீர் வெடித்துக் கிளம்பியது. சின்ன விசும்பல்களுக்கு இடையே, ‘‘வேலை போயிடுச்சு…’’ என்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.
கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பான் என்ற என் யூகத்தை, வேலை போனதாகச் சொல்லி அதிரவைத்தான். மேற்கொண்டு அவனே பேசட்டும் என்று காத்திருந்தேன். சோகக் கதையைக் கொட்டினான். ராமநாதபுரம் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஏழை குடும்பத்தில் பிறந்தவனாம் கணேசன். பதினோராம் வகுப்பு பரிட்சை எழுத இருந்த சமயத்தில் அம்மா நோய் தாக்கி இறந்துபோயிருக்கிறார். குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவனது தந்தை கடன் வாங்கி வைத்தியம் பார்த்த பணத்தை எப்படித் திருப்பித் தருவது என்று புரியாமல் பயந்து, இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடி விட்டாராம். இவனது தங்கையை மட்டும் சித்தி வளர்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, இவனை கைகழுவியிருக்கிறார்கள். ஏதாவது வேலை செய்து தங்கையின் செலவுக்கும், அப்பாவின் கடனுக்கும் பணம் அனுப்புகிறேன் என்று மதுரை வந்திருக்கிறான்.
வழியற்றவர்களுக்கு ஆபத்பாந்தவனாக கைகொடுக்கும் ஹோட்டல் வேலையில் முதலில் நுழைந்திருக்கிறான். ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை பார்த்தும் சரியாக சம்பளம் தராமல் இழுத்தடித்திருக்கிறார்கள். அதனால் அங்கிருந்து வெளியேறி ஒரு மெக்கானிக் கடையில் வேலை பார்த்திருக்கிறான். இரவும் பகலும் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கிய முரட்டு எஜமானின் அடி தாங்காமல் அங்கிருந்தும் விலகியிருக்கிறான். இதற்கடுத்து திருப்பரங்குன்றத்தில் இருக்கும் ஒரு லாட்ஜில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். அங்கு நடக்கும் விபசாரத்திற்கு நிர்வாகம் உடந்தையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாலும், அங்கே தொடர்ந்து இருக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் நொந்துபோய் வேலை செய்திருக்கிறான். நேற்று இரவில் போலிஸ்காரர்கள் ரெய்டு வந்திருக்கிறார்கள். போலீஸாரிடம் இவன் உண்மையைப் பேசிய காரணத்தால், இத்தனை நாள் வேலை பார்த்த சம்பளத்தையும் கொடுக்காமல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்கள். நடந்ததை சொல்லிமுடிக்கும் வரை கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது.
’’நான் ராசியில்லாதவன் சாமி. நான் பிறந்ததுமே நல்லா வசதியா இருந்த தாத்தாவுக்கு தொழில்ல நஷ்டமாயிருச்சு. அதனால எல்லோருமே என்னைய தரித்திரம்னு சொல்வாங்க. நான் எதுக்குமே லாயக்கில்லை, வாழ்க்கையை ஜெயிச்சதில்லை, ஜெயிக்கப் போவதுமில்லை. நான் ஒரு இடத்துக்குப் போறதுக்குள்ள, என் தரித்திரம் முன்கூட்டியே போயிடுது…’’ என்று அழுதான்.
அவன் முழுவதுமாக அழுது முடியட்டும் என காத்திருந்தேன். சிறிது நேரத்திலேயே கணேசன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
’’கணேசா… நீ எதிலேயுமே ஜெயித்ததில்லை என்று சொல்லாதே… நீ பிறந்ததே ஒரு மாபெரும் போராட்டத்தின் வெற்றிதான். நீ கருவாக உருவான நேரத்தில் உன்னுடன் போட்டியிட்ட கோடானுகோடி எண்ணிக்கையிலான உயிர் அணுக்களை தோல்வியடையச் செய்துதான் நீ ஜனித்திருக்கிறாய். இந்த உலகில் பிறந்த எல்லோருமே உன் வயது வரை வளர்ந்து, வாழ்ந்துவிடுவது இல்லை. அந்த வகையிலும் நீ ஒரு வெற்றியாளன். நீ இத்தனை வருடங்கள் நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்து வருவதும் சாதனைதான். இதற்குமேலும் ஏன் உன்னையே நத்தையைப் போன்று சுருக்கிக் கொள்கிறாய்…’’ என்றேன்.
என்னை நிமிர்ந்து பார்த்த கணேசன், ‘‘நீங்க பேசுறதைக் கேட்க நல்லாத்தான் சாமி இருக்கு, ஆனா வேலையில்லாம படுற கஷ்டத்தை அனுபவிச்சுப் பார்த்தாத்தான் தெரியும்…’’ என்று லோகாதாயம் பேசினான்.
’’நீ மதுரைக்கு எதுவுமே தெரியாமல் வந்தாய். அந்த நிலைக்கே ஒரு வேலை உனக்காக காத்திருந்தது. இப்பொழுது நீ ஹோட்டல் வேலையையும், மெக்கானிக் தொழிலையும் கற்று வைத்திருக்கிறாய் வேலை கிடைக்காமலா போய்விடும்…’’ என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மீண்டும் மகேந்திரசாமி சில ஆட்களுடன் மேலே வந்தார்.