இளைஞன் கணேசனை ஆறுதல் படுத்திய நேரத்தில், மகேந்திரசாமி மேலும் சில நபர்களை அழைத்துக்கொண்டு மேலே வந்தார்.

’’சாமி… இவங்க எல்லோரும் என்கூட மலைக்குக்கீழே இருக்கிறவங்க, உங்களை தரிசிக்க ஆசைப்படுறாங்க…’’ என்று மகேந்திரன் சொல்லி முடிக்கும் முன்னரே…

’’சாமி… உங்களுக்கு மாய, மந்திரமெல்லாம் தெரியுமாமே…’’ என்று  வந்தவர்களில் ஒருவன் ஆர்வமுடன் கேட்டான். நான் மகேந்திரனைப் பார்க்க, அசட்டுத்தனமாக முகத்தை வைத்தபடி நின்றுகொண்டிருந்தார்.

’’யோகசித்தி வாய்ப்பது மிக அபூர்வம், அதனை விளையாட்டு போன்று கேட்பதும், வேடிக்கை பார்க்க நினைப்பதும் சாபக்கேடான குற்றம்…’’  என்று குரலில் கொஞ்சம் காரம்கூட்டிச் சொன்னேன்.

வந்தவர்கள் ஏதோ தவறுதலாகக் கேட்டதாக நினைத்து அமைதியடைய, ஒருவன் மட்டும், ‘‘சாமி… வேற மதத்துக்காரங்க வந்து நம்ம மதத்தைப் பத்தி தப்புத்தப்பா பேசுறாங்க. அதைக்கேட்டு கொஞ்சபேர் ஏமாந்துபோய்  மதம் மாறிப் போயிடுறாங்க… இதையெல்லாம் தடுக்க ஏதாவது செய்யணும்…’’ என்றான் ஒருவன்.

அவனை கூர்ந்து பார்த்தபடி, ‘‘வேறு மதத்தில் இருந்து உன் மதத்துக்கு மாறி வந்தவனை என்ன சொல்வாய்..?’’

உடனே கொஞ்சமும் யோசிக்காமல், ‘‘அவனுக்கு புத்தி வந்திடுச்சு, இப்பவாது திருந்தி வந்துட்டானேன்னு சந்தோஷமா ஏத்துக்க வேண்டியதுதான்…’’ என்றான்.

’’பிறக்கும்போது அனைவரும் பரிசுத்தமான குழந்தைகள்தான். பெறோர்கள்தான் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் என்று வளர்க்கிறார்கள். மாற்று மதங்களில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமலே, தன்னுடைய மதம் மட்டுமே உயர்ந்தது என்ற எண்ணத்தில் வளர்ந்து விடுகிறார்கள். எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. ஆனால், மதத்தின் பேரால்தான் இந்த உலகில் அதிகமான போர் நடந்து அதிகமான மனிதர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லா மத கோட்பாடுகளும் தெரிய வேண்டும், அதில் பிடித்ததை தேர்வு செய்யவோ விலகி நிற்கவோ பக்குவம் வேண்டும்..’’ என்றேன்.

’’அதெல்லாம் சரிப்படாது சாமி…’’ என்று ஒருவன் உரக்கப் பேச, ’’ஏன்… உன் மதத்தின் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?’’ என்று திரும்பிக் கேட்டதும் அடங்கிப் போனான்.

‘’உன் மதத்தில் அவனுக்கு ஏதோ ஒரு குறை தென்படுவதால், வேறு ஒரு மதத்துக்குப் போகிறான். அவனுக்கு உன் மதத்தில் என்ன பிரச்னை என்பதை கண்டறிய வேண்டும். அதனை தவிர்க்க வேண்டும். இப்போது பெரும்பாலான இந்துக்கள் மதம் மாறுவதற்கு காரணம், ஜாதி கொடுமைதான். இங்கே கண்டறிய முடியாத கடவுளை அவன் அங்கேயும் கண்டறிய முடியாது. ஆனால், அவனுக்கு கடவுளைவிட ஜாதியில் கிடைக்கும் பெருமை முக்கியமாக இருக்கிறது. அதை ஏன் நீ கெடுக்க வேண்டும்? எல்லா மதங்களும் போய் சேரும் இடம் ஒன்றேதான். உன் மதம் பற்றிய கவலையை விடு. இருப்பவர்களை தக்கவை. அது போதும்’’ என்றதும் கொஞ்சம் அமைதி காத்தனர்.

அடுத்து ஒருவன் ஆர்வத்துடன் முன்வந்து, ‘‘சாமி… இந்த உலகத்தில நல்லவங்க கஷ்டப்படுறாங்க, கெட்டவங்க வசதியா இருக்காங்க, இது ஏன் சாமி?’’ என்று ஆர்வமாகக் கேட்டான்.

’’நீ நல்லவனா.. கெட்டவனா?’’ என்று அவனை உற்றுப்பார்த்தேன். அந்தக் கேள்வியை எதிர்பார்க்காமல், ‘‘பெரிய தப்பு எதுவும் செஞ்சது இல்ல சாமி, அதுபோலவே ரொம்பவும் நல்லது பண்ணியதும் இல்லே…’’ என்று குழம்பினான்.

’’ஒருவனை நல்லவன் அல்லது கெட்டவன் என்று முடிவு செய்வது காலம் மட்டுமே. ஒரு திருடன் கத்தியைக் காட்டி மிரட்டும்பொழுது, யாருமற்ற தெருவில் அனாதையாக பணம் கிடைக்கும்போது, முகம் பார்க்கும் கண்ணாடிகள் நிறைந்த அறையில் தனியாக இருக்கும்போது ஒவ்வொரு மனிதரும் எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதை அவர்களே முன்கூட்டி அறியமாட்டார்கள். வெளிஉலகத்திற்கு அமைதியாக இருப்பவன் வீட்டில் மனைவி, குழந்தைகளை அடக்கியாளும் கொடூரனாக இருக்கலாம். எல்லோரிடமும் வம்பு வளர்த்துக் கொண்டிருப்பவன், தனிமைக்குப் பயந்து நடுங்குபவனாக இருக்கலாம். உலகில் வாழும் எல்லா மனிதர்களிடமும் மிருககுணம் அடிமனதில் உலவிக் கொண்டுதான் இருக்கும். சாட்சிக்கு யாருமில்லாத சந்தர்ப்பத்தை எந்த மனிதனும் தவறவிடுவதில்லை…’’

’’அப்படின்னா யாருமே நல்லவங்க இல்லையா சாமி…?’’

’’தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தும், அதைச் செய்ய துணிவில்லாதவர்களை நல்லவர்கள் என்று சொல்வது சரியில்லை என்கிறேன் அவ்வளவுதான். அதனால் முன்னேறியவனை கெட்டவன் என்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவனை நல்லவன் என்ற பார்வையாலும் பார்க்காதே.

 உன்னுடைய பார்வையில் மிகவும் நல்லவனாகத் தெரியும் ஒருவன், இன்னொருவன் பார்வையில் கெட்டவனாகத் தெரியலாம். பணக்காரன், வசதியானவன், இறைவனால் ஆசிர்வதிக்கப் பட்டவன் என்று நீ நினைக்கும் ஒருவன், சேமித்திருக்கும் பணம் போதவில்லையே என்று பிச்சைக்காரனாக புலம்பிக் கொண்டிருக்கலாம். அதனால் கஷ்டப்படுவதற்கும் சுகமாக இருப்பதற்கும் நல்லவனாக இருப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ரகசியமாக உலவும் உலகநீதியை உரசிப் பார்க்காதே…’’ என்று எழுவதற்கு முயற்சித்தேன்.

’’சாமி… இன்னும் ஒரே ஒரு கேள்வி…’’ என்று ஒருவர் ஓடோடி முன்வந்தார். பார்வையாலே என்னவென்று கேட்டேன்.

’’சுனாமி… பூகம்பம், புயல், இடிமழைன்னு உலகத்திலே நடக்கிறதைப் பார்த்தா பயமா இருக்கு சாமி, உலகம் சீக்கிரம் அழிஞ்சிடும்னு சொல்றாங்களே உண்மையா?’’ என்று கேட்டார்.

’’இந்த பூமி உருவான காலங்களில் இருந்து அன்றாடம் நடந்துவரும் மிகச்சாதாரண நிகழ்ச்சிகள்தான் இவை. உலகம் உங்கள் கைக்குள் சுருங்கிப் போனதால், இதுபோன்ற நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் கண்டு பயப்படுகிறீர்கள். எப்படியென்றாலும் அழிவு என்பது கண்டிப்பாக உண்டு, அது மனிதனுக்குத்தானே தவிர இந்த உலகத்திற்கு இல்லை…’’ என்றபடி எழுந்தேன்.

மகேந்திரனை அருகே அழைத்து, ‘‘இவன் கணேசன், சின்ன வயசிலேயே வாழ்க்கை இவனுக்கு அக்னி பரிட்சை நடத்துகிறது. இவனுக்கு சிறிய அளவில் இட்லிக் கடை வைப்பதற்கு உதவி செய், அதற்குப் பின் பிழைக்கும் வழியை அவனே தேடிக்கொள்வான்’’ என்றேன்.

இந்த உதவியெல்லாம் மிகவும் சாதாரணம் என்ற ரீதியில் கணேசனை அரவணைத்துக் கொண்டார் மகேந்திர சாமி. நான் முன்னே நடக்க, எல்லோரும் என்னை பின் தொடர்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *