கடுமையான கோபத்துடன் ஆசிரமத்துக்கு வந்தார் மகேந்திரன். ‘இன்று என் கண் முன்னே ஒருவன் பெண்ணை சீண்டினான். அங்கேயே அவனை அடித்துக்கொல்ல வேண்டும் என்பது போன்று ஆத்திரம் வந்தது. ஆனால், என்னால் அடிக்க முடியாது என்பதால் வந்துவிட்டேன். ஏன் எனக்கு ஒருவனை கொல்லும் அளவுக்கு வன்முறை சிந்தனை ஏற்பட்டது’’ என்று கேட்டார் மகேந்திரன்.
‘’மனிதனுக்கும் விலங்குக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. அதனால், வன்முறை மனிதனின் ரத்தத்தில் கலந்துதான் இருக்கிறது. அடித்து வளர்ப்பதுதான் நல்ல குழந்தை வளர்ப்பு என்று நம்புகிறோம். கணவன், மனைவி அடிக்கடி சண்டை போடுவதும், அடித்துக்கொள்வதும் வன்முறை மீதான விருப்பம்தான். இன்று உலகம் முழுவதும் சண்டை படங்களுக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கிறது. அதனால் உனக்கு திடீரென ஒருவனை கொலை செய்யும் அளவுக்கு வன்மம் தோன்றுவதில் ஆச்சர்யம் இல்லை’’
‘’இப்படி ஒரு சிந்தனை வருவது பாபம் இல்லையா?”
‘’ஒருவனை கொலை செய்யவேண்டும் என்ற சிந்தனையே, கொலை செய்வதற்கு ஒப்பானதுதான். அநியாயத்தைக் கண்டால் தட்டிக் கேட்பது நல்ல குணம். அதற்கும் வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீ தவறு செய்தவனை வெல்ல வேண்டும் என்பது முக்கியம் அல்ல. அவன் செய்தது தவறு என்பதை சுட்டிக்காட்டுவதும், தட்டிக் கேட்பதும்தான் முக்கியம்.
ஆனால், உனக்கு அதை செய்வதற்கு அச்சம். காயம் ஏற்படலாம், உடல் உறுப்புகள் சேதம் அடையலாம், ஏன் உயிர் போகலாம் என்ற பயம் காரணமாக அங்கிருந்து ஓடி வந்துவிட்டாய். அதேநேரம், உன் வசதிப்படி அவனை மனதால் கொல்ல நினைக்கிறாய். இந்த வன்முறை நாளை உன்னைவிட எளிய மனிதரிடம் நிச்சயம் வெளிப்படவே செய்யும்.
உன்னைச் சேர்ந்த மனிதர்களை இந்த வன்முறை சிந்தனை காயப்படுத்திவிடும். ஆகவே, வன்முறையை அன்பாக மாற்றுவதற்கு முயற்சி செய். கண்ணுக்கு முன்னே அநியாயம் நடந்தால் உன்னால் முடிந்தால் தட்டிக் கேள். இல்லையென்றால், கடவுள் பார்த்துக்கொள்வார் என்று விலகிவிடு. நீ கொலையாளியாக மாறாதே’’ என்றார் ஞானகுரு.
மனதில் இருந்த வன்மம் குறைவதை உணர்ந்தார் மகேந்திரன்.