வாழ்க்கையில் ஏதேனும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு, அதை அடைவதற்காக வாழ்நாள் முழுவதும் போராடும் மனிதர்கள் உண்டு. அப்படி, . வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்ட பிறகும், ஆசைப்பட்ட லட்சியத்தை அடையாமல் செத்துப்போனவர்கள்தான் அதிகம்.

ஆனால், குறிப்பாக எந்த ஒரு லட்சியத்தையும் உருவாக்கிக்கொள்ளாமல், தற்செயலாக வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயத்தை சவாலாகவும் லட்சியமாகவும் எடுத்துக்கொண்டு ஜெயித்தவர்கள் நிறையவே இருக்கிறார்கள். இவர்களைத்தான் வெற்றியாளர்கள், புத்திசாலிகள் என்று உலகம் கொண்டாடுகிறது.

மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதுதான் மாளவிகாவின் தீராத ஆசை. அதற்காக இரவும்பகலுமாக படித்தாள். கடினமாக தெரிந்த பாடங்களுக்கு எல்லாம் டியூஷன் போனாள். கஷ்டப்பட்டு படித்து பரிட்சை எழுதினாள். ஆனால் அவள் எடுத்த மதிப்பெண்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு போதுமானதாக இல்லை. பணம் கட்டி படிக்கவைக்கும் அளவுக்கு வீட்டில் வசதியும் இல்லை. மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை என்றதும் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்தாள் மாளவிகா. ஏராளமான மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயற்சித்தாள். நல்லவேளையாக மாத்திரை வீரியமற்றது என்பதால் காப்பாற்றப்பட்டாள். மருத்துவர்களின் கவுன்சிலிங்கிற்கு பிறகு… வேறு வழியில்லை என்பதால், தன்னுடைய மருத்துவ லட்சியத்தை தூக்கி எறிந்துவிட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தாள்.

இனிமேல் எந்த லட்சியமும் தேவையில்லை, நன்றாக படித்து நல்ல வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றினால் போதும் என்று மட்டும் எண்ணிக்கொண்டாள் மாளவிகா. அதன்படி முன்னைவிட கூடுதல் அக்கறையுடன் படித்துமுடித்து வேலைக்குப் போனாள். வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலே அந்த வேலையின் சூட்சுமம் மாளவிகாவுக்கு சுலபமாக பிடிபட்டுப்போனது. சந்தோஷமாகவும் கடினமாகவும் உழைத்து, அந்த நிறுவனத்தில் நல்ல பெயர் வாங்கினாள். அவள் வேலை செய்த நிறுவனத்திற்கு ஏகப்பட்ட ஆட்கள் தேவையாக இருந்தது. ஆனால் அவளது நிறுவன விதிமுறைகளுக்குட்பட்டு வேலையில் சேர்வதற்கு கிராமத்து மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதைப் பார்த்தாள். குறிப்பாக கல்லூரி வளாகத் தேர்வில் கிராமத்து மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை குறைவாக இருப்பதைப் பார்த்து வருத்தப்பட்டாள். அதனால் ஏதாவது வகையில் மாணவர்களுக்கு உதவவேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

தெளிவான யோசனைக்குப் பிறகு தன்னுடன் வேலை செய்த சில ஊழியர்களுடன் இணைந்து ஒரு கன்சல்டன்சி நிறுவனம் தொடங்கினாள் மாளவிகா. அந்த நிறுவனம் மூலமாக நகருக்கு வெளியே இருக்கும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியும், நேர்முகத்தேர்வை வெற்றிகொள்ளும் வழிகளையும் சொல்லிக் கொடுத்தாள். ஒவ்வொரு வருடமும் மாளவிகாவின் நிறுவனத்தின் மதிப்பு கூடியது. அவளிடம் பயின்ற மாணவர்கள் வேலைக்குச் செல்லும் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒவ்வொரு மாணவனுக்கு வேலை கிடைக்கும்போதும், ஒரு குடும்பத்தின் வாழ்க்கைத்தரம் உயர்வதை கண்ணுக்கு எதிரே கண்டு சந்தோஷமானாள். மருத்துவரானால் மட்டும்தான் சேவை செய்யமுடியும் என்று வருத்தப்பட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்தது எத்தனை முட்டாள்தனம் என்பதை உணர்ந்து இப்போதும் சிரித்துக்கொள்வாள் மாளவிகா.

அதனால் லட்சியம் என்று எதையாவது முடிவு செய்துகொண்டு, அதனை அடைவதற்காக இன்றைய சந்தோஷங்களை தொலைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம். மிகப்பெரிய லட்சியம் மட்டுமல்ல, எந்த ஓர் எதிர்பார்ப்பையும் வாழ்க்கையில் வளர்த்துக்கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் சாதாரண லட்சியங்களும், எதிர்பார்ப்புகளும்கூட தேவையற்ற துன்பம் தருவனவே.

  • லட்சியமும் எதிர்பார்ப்பும் ஒன்றில்லையா?

இரண்டுமே கனவுதான். ஆனால் லட்சியம் என்பது ஒவ்வொரு மனிதரிடமும் ஒன்று அல்லது இரண்டுதான் இருக்கும். மேலும் எளிதில் கிடைக்காத ஒன்றுதான் லட்சியமாக இருக்கும். ஆனால் எண்ணிக்கையில் அடங்காத எதிர்பார்ப்புகள் மனிதர்களுக்கு உண்டு. காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரையிலும் நிமிடத்திற்கு நிமிடம் எதிர்பார்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கும்.  எதிர்பார்ப்புகளுக்கு எவ்விதமான தகுதிகளும் தேவை இல்லை என்பதால் பரிட்சை எழுதாத ஒருவன்கூட, பாஸாக வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

பொருட்காட்சியில் ஆசையுடன் ஒரு பொருள் வாங்கியபிறகு, மற்றொரு கடையில் வேறு ஒரு பொருளை பார்த்ததும், கையில் இருப்பதை தூக்கியெற்ந்து அந்த பொருளுக்கு ஆசைப்பட்டு ஏங்கியழும் பிள்ளைகளை பார்த்திருப்பீர்கள். அந்தக் குழந்தைகளிடம் இருப்பதைப் போன்ற எதிர்பார்ப்புகள்தான் மனிதர்கள் மனதில் மண்டிக் கிடக்கின்றன. ஒரு லட்சியம் நிறைவேற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு அந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. அதனால் ஒவ்வொரு மனிதனிடமும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. லட்சியத்தைப் போன்று ஒவ்வொரு எதிர்பார்ப்புகளும் ஏதேனும் ஒரு வகையில் துன்பம் தருவதாகவே இருக்கும் என்பது மட்டும் முழு உண்மை.

  • லட்சியம் வைத்திருப்பவனால் சந்தோஷமாக இருக்கவே முடியாதா?

லட்சியத்தை அடைவதுதான் மகிழ்ச்சி என்று எண்ணாமல், மகிழ்ச்சி அடையும் ஒவ்வொரு கணத்திலும் லட்சியம் நிறைவேறுவதாக நினைப்பதுதான் புத்திசாலித்தனமான வாழ்வு. ஆனால் லட்சியத்தை மனதில் புதைத்து வைத்திருப்பவன், ஆனந்தம் அடைவதை குற்ற உணர்ச்சியாகவே கருதுவான். சந்தோஷமாக இருந்தால் லட்சியத்தை அடையமுடியாமல் போகும் என்று எண்ணுவான். அதனாலே சந்தோஷம் அவனைத்தேடி வந்தாலும் விலகிப்போவான்.

  • லட்சியம் அடைந்தபிறகு சந்தோஷமாக இருப்பானா?

முன்பைவிட மோசமான துன்பநிலைக்கு ஆளாவான். எந்த ஒரு லட்சியத்துடனும் வாழ்க்கை முடிவடைவதில்லை என்பதால் அடுத்த ஒரு லட்சியத்தை உருவாக்கவேண்டிய நிலைக்கு ஆளாவான். ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு பதக்கம் வாங்கினால் போதும் என்றுதான் லட்சியம் வைத்திருப்பான். ஒரு பதக்கம் வாங்கியதும், அடுத்த போட்டியில் பங்கேற்பீர்களா என்று கேட்பார்கள். உடனே அடுத்த போட்டியில் இரண்டு பதக்கம் வாங்குவதற்கு முயற்சி செய்வேன் என்று சொல்வான். அதற்காக இரண்டு மடங்கு கடுமையாக உழைப்பான். தன்னுடைய உடலுக்கு வயதாகிறது, தன்னைவிட இளையவர்கள் போட்டியில் நுழைவார்கள் என்ற எண்ணம் இல்லாமல் மீண்டும்மீண்டும் போட்டியில் கலந்துகொள்வான். ஒரு கட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்துவிடுவான். அதன்பிறகு வாழ்நாள் முழுவதும் தோற்றுப்போன மனநிலையில்தான் வாழ்வான். எந்த ஒரு லட்சியமும் வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் தரக்கூடியதில்லை என்ற உண்மையை அனைவரும் அறிந்துகொள்வது அவசியம்.

  • லட்சியம் இல்லை என்றால் பிற உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்காதே?

உண்மைதான். எந்த உயிரினமும் வாழ்க்கையில் லட்சியம் வைத்துக்கொள்வதில்லை. பறக்கவேண்டும் என்று எந்த யானையும் ஆசைப்படுவதில்லை. தலைகீழாக பறப்பதற்கு எந்த பறவையும் முயற்சி எடுப்பதில்லை. அதற்காக லட்சியம் வைத்திருந்தால்தான் மனிதன் என்ற முடிவுக்கு வரவேண்டியதில்லை.

  • துன்பம் தராத லட்சியம் எதுவுமே இல்லையா?

இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதையே லட்சியமாக வைத்துக்கொள்ளலாம். எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கமுடியுமோ, அப்போதெல்லாம் சிரிப்பதற்கும், பிறருடன் இணைந்து மகிழ்வுடன் வாழ்வதற்குமான லட்சியத்துடன் இருக்கவேண்டும். தான் சந்தோஷமாக இருப்பதுமட்டுமின்றி, தன்னுடன் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கும் இன்பத்துக்கான வழியை காட்டுவதை லட்சியமாக கொள்ளலாம். ஆனால் இன்பம் கிடைக்கவில்லையே என்று துன்பப்படாமல் இருத்தல் வேண்டும்.

  • ஆனால் லட்சியவாதிகளால்தானே இந்த உலகத்தில் மனித வாழ்க்கை சுலபமாகியிருக்கிறது?

முந்தைய கால அரசர்களுக்குக்கூட கிடைக்காத சொகுசு வாழ்க்கை இன்றைய மனிதனுக்கு கிடைத்துள்ளது. ஆனால் அவை எல்லாமே செயற்கை சந்தோஷம்தான். சாணம் போட்டு மெழுகப்பட்ட மண் தரையில் கிடைத்த குளிர்ச்சியை பெறுவதற்கு, இன்று கிரானைட் தரை வேண்டியுள்ளது. மரம் கொடுத்த காற்றை பெற மின்விசிறி தேவைப்படுகிறது. அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு உதவும் மின்சாரம் இல்லையென்றால் கணினி தொடங்கி குளிர்சாதனம் வரை எதுவும் இயங்காது. அதனால் இப்போது இயந்திரங்களுக்கு அடிமையாக வாழவேண்டியுள்ளது. வாழ்வின் சொகுசுக்காக அத்தனை மின்சாதன பொருட்களையும் வாங்கியாகவேண்டிய கட்டாயத்துக்கு அனைத்து மனிதர்களையும் தள்ளி, கடன்காரர்களாக மாற்றியிருப்பது அந்த லட்சியவாதிகள்தான். அதனால் பிறருடைய லட்சியத்தினால் உனக்கு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதே.

  • அப்படியென்றால் இதுவரை மாபெரும் லட்சியம் அடைந்தவர்கள் எல்லாம்?

பாவம். அவர்கள் அனைவருமே மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *