இறைவனின் பெயரில் எந்த ஒரு பொருளையும் வீணடிப்பது, அதுவும் குறிப்பாக ஹோமத்தில் நெய், பட்டுப்புடவைகளை போடுவது எனக்கு அறவேபிடிப்பதில்லை. எனவே, முன்னோர்களின் பசியைத் தீர்க்கவே இப்படி செய்கிறேன் என்ற ஆனந்தனை கண்டுகொள்ளாமல் கோபத்துடன் எழுந்தேன்.
’’சாமி, கோபப் படாதீங்க… நீங்க எங்கே போகணும்னு சொல்லுங்க கார்ல இறக்கிவிடச் சொல்றேன். நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது, இது என்னோட காணிக்கை…’’ என்று கொஞ்சம் பணத்தை எடுத்து கையில் கொடுத்தார். நான் எதுவும் பேசாமல் வாங்கி பையில் வைத்துக் கொண்டேன்.
’’நான் குற்றாலம் போகவேண்டும், அதனால் ஏதாவது பஸ் நிலையத்தில் என்னை இறக்கிவிடச் சொல்…’’ என்றேன்.
’’குற்றாலம் இங்கிருந்து மூணு மணி நேரம்தான் சாமி… காரிலேயே போய் இறங்கிக்கோங்க…’’ என்று டிரைவரை அழைத்து தகவல் சொன்னார். வீட்டில் மனைவி, பிள்ளைகளை கூப்பிட்டு ஆசிர்வாதம் வழங்கச் சொன்னார்.
அவரது மகன் பட்டும்படாமலும் காலைத் தொட்டு எழுந்ததும் காணாமல் போனான். அவன் வீட்டிற்குள் போனதும் ராஜரத்னம் என்னை சமாதானப் படுத்தினார்.
‘‘சாமி… காலேஜ் படிக்கிற பையன், அதனால் பக்குவம் வராம இருக்கான். தப்பா நினைச்சு கோபப்படாதீங்க’’ என்றார்.
‘‘இந்த வயதில் அசட்டுத் துணிச்சல் இல்லையென்றால்தான் தவறு’’ என்று கிளம்பும் போது ராஜரத்னம் கண்களில் ஒரு கேள்வி தெரிந்தது. கண்களாலே என்னவென்று கேட்டேன்.
‘‘சாமி… என் பையன் மேல அன்பா இருக்கேன். அவன் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறேன், ஆனால், கொஞ்சம்கூட மதிக்க மாட்டேங்கிறான். அதுமட்டுமில்லாம இவ்வளவு சம்பாதிக்கிற எனக்கே விவரம் பத்தாதுங்கிற மாதிரி எடுத்தெறிஞ்சு பேசுறான்’’ என்று தயங்கியபடி சொன்னார்.
‘‘உன்னையும் உன் தந்தையையும் எடுத்துக் கொண்டால் யார் அறிவாளி?’’
கொஞ்சநேரம் யோசித்த ராஜரத்னம், ‘‘எங்கப்பா சம்பாதிக்கத் தெரியாதவர், ஆனா ரொம்பவும் நல்லவர். நாங்க அவர் முன்னால நின்னு பேசவே பயப்படுவோம்’’ என்றார்.
‘‘கண்டிப்பாக உன்னைப் போலத்தான் உன் மகன் இருப்பான். ஆம், உன்னைவிட புத்திசாலியாக இருப்பான். அவன் வேகத்திற்கு உன்னால் சிந்திக்க முடியாது என்பதால் உன்னை குறைவாக மதிப்பிடுகிறான். உன் தந்தையிடம் பயம் இருந்ததால் அவரை நீ விமர்சனம் செய்யவில்லை. ஆனால் உன் மகனுக்கு இப்போது சுதந்திரம் இருக்கிறது, உண்மையை நேருக்கு நேராகச் சொல்கிறான். உன் குழந்தை உன் மூலம் வந்தவன் என்றாலும் நீ சொன்னபடி கேட்கும் நாய் போன்று அவனும் வாலாட்டிக் கொண்டே இருக்கவேண்டும் என எதிர்பார்க்காதே. அவனுக்கு சொந்தமாக நிற்கும் சக்தி கொடு, பாதுகாப்பு கொடு ஆனால் வழிகாட்டாதே. உன் வழியை நீ தேடியதைப் போன்று அவன் வழியை அவன் தேடிக் கொள்வான். ஓவ்வொரு இளைஞனும் அடுத்தகட்டத்துக்கு நகரும்போது தந்தையை மதிக்கத் தொடங்குவான், அதுவரை காத்திரு’’ என்றபடி தயாராக நின்ற கார் அருகே சென்றேன்.
கார் தயாராக கிளம்பத் தயாராக நின்றது. அறுபது வயதைத் தாண்டிய, மெல்லிய தேகத்துடன் இருந்த டிரைவர் கதவைத் திறந்து விட்டார். இந்த வயதில் ஒரு டிரைவரா என்று ஆச்சர்யமாக ராஜரத்னத்தைப் பார்க்க, ‘‘சுந்தரம் எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி… பதினைஞ்சு வருஷத்துக்கு மேல எங்கிட்ட இருக்கார். நிதானமா டிரைவிங் செய்வார்… தங்கமான மனுசர்’’ என்றார்.
முன்னிருக்கையில் ஏறி அமர்ந்தேன்.
திடீர் என்று வெளியூர் செல்லவேண்டி வந்ததில் சுந்தரம் மனம் சுருண்டு போயிருக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. எதுவுமே பேசாமல் வேகமாக காரை ஓட்டத் தொடங்கினார். திருமங்கலம் பைபாஸ் சாலையைத் தொட்டதும் இன்னும் வேகம் கூட்டினார். அவர் மனதில் கோபம் இருப்பதும், அதனால் நிதானம் இழந்ததையும் பார்க்கும்போது ஆபத்தை அழைப்பதாகத் தெரிந்தது. ஆபத்தை எதிர்கொள்ளத் தயாரானேன்.