காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார். ‘’நான் காவல் துறையில் உயர் பதவியில் இருக்கிறேன். என் சொல்லை கட்டளையாக ஏற்று செய்வதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள். என்னால் பலருக்கு எளிதாக உதவ முடிகிறது. ஆனால், நான் இந்த காக்கி உடுப்புக்குள் சிக்கிக்கொண்டதைப் போன்று உணர்கிறேன். இதனை உதறமுடியாமல் தவிக்கிறேன். பல நேரங்களில் எனக்கு உடன்பாடு இல்லாத வேலைகளை செய்யவேண்டி இருக்கிறது. நான் இந்த வேலையை உதறிவிட்டு எனக்குப் பிடித்த போட்டோ கிராபர் வேலைக்குப் போகலாமா?” என்று கேட்டார்.
’’ஏதேனும் ஒரு வேலை என்பதை செய்துதான் ஆகவேண்டும். உனக்கும் உன்னை நம்பியிருக்கும் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு ஏதேனும் வேலை செய்துதான் ஆகவேண்டும். பார்க்கும் வேலையில் உடன்பாடு இல்லையென்றால், ஒவ்வொரு நாளும் கைதியைப் போன்றுதான் நகரும். இப்போது உனக்கு முன் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, சட்டென்று இந்த உடுப்பை களைந்து எறிந்துவிட்டு உன் மனதுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு வேலை பார்த்து வாழ்க்கையை நடத்துவது. அப்படி ஒரு வேலையில், இப்போது உனக்கு கிடைக்கும் அளவுக்கு வசதியும் வருமானமும் கிடைப்பது உறுதி இல்லை என்பதாலே தயங்கிகிறாய். ஆனால், இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டால் நிச்சயம் சந்தோஷம் கிடைக்கும்.
இரண்டாவது வழி ஒன்று இருக்கிறது. எது உனக்கு அமைந்திருக்கிறதோ அதனை உனக்கான வேலையாக ஏற்றுக்கொள்வது மற்றும் மாற்றிக்கொள்வது. ஆம், உனக்கு வாய்த்த உடல் அமைப்புடன்தான் நீ வாழ முடிவது போன்று, கிடைக்கும் வேலையை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள். இந்த வேலையில் எப்படியெல்லாம் சந்தோஷம் கிடைக்கும் என்று பார். தினமும் ஏதேனும் ஒரு வகையில் நான்கு பேருக்காவது உதவ முடியுமா என்று பார். ஏனென்றால் பலருக்கும் உனக்கு கிடைத்திருப்பது போன்ற வேலை கிடைப்பதில்லை. இது எத்தனையோ பேருடைய கனவு வேலை. ஆகவே, கிடைத்த பொக்கிஷத்தை தவற விடாதே. .
பிடித்த வேலை, பிடிக்காத வேலை என்பதெல்லாம் உன் மனதில்தான் உள்ளது. பிடிக்காத வேலையை முழுநேரம் நீ செய்தாலும், உனக்குப் பிடித்த வேலையை பகுதி நேரமாக செய்ய முடியும். எனவே, என்ன வேலை செய்தாலும் அதனை முழு மனதுடன் செய். அப்போது எல்லா வேலையிலும் உனக்கு சந்தோஷமும் திருப்தியும் நிறையவே கிடைக்கும்’’ என்றார் ஞானகுரு.
போலீஸ் உடுப்பில் மிடுக்குடன் விடைபெற்று சென்றார் அந்த அதிகாரி.