ஞானகுருவை சந்திக்க ஒரு முதியவருடன் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இவர் உடல் பற்றி நிறைய தகவல்கள் கூறுகிறார். தியானக் கலையில் வல்லவராக இருக்கிறார். நீங்கள் மட்டும் ஏன் சூட்சும உடல் பற்றி எதுவும் சொல்லவில்லை’’ என்று கேட்டார் மகேந்திரன்.
அந்த நபரை ஞானகுரு ஏறெடுத்துப் பார்த்ததும், ‘’கண்ணுக்குத் தெரிவது பருப்பொருள் என்றால், கண்ணுக்குத் தெரியாதது சூட்சும உடல். பருப்பொருளை கவனிப்பது போலவே ஸ்தூல உடலையும் பாதுகாக்க வேண்டும். முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் மூலாதாரச் சக்கரத்தின் அருகில் குண்டலினி சக்தி இருக்கிறது. குண்டலினியை எழுப்பும் சக்தி தீயுடன் விளையாடுவது போன்றது. வலது நாடி வழியாக குண்டலினியை நெற்றிக்கு ஏற்றிவிட்டால் அமுதம் உண்ணலாம்…’’ என்று முடித்தார் அந்த முதியவர்.
’’நீங்கள் குண்டலினியை நெற்றியில் சேர்த்துவிட்டீர்களா..?”
‘’நிறைய குருக்களை சந்தித்துவிட்டேன், யாராலும் எனக்கு உதவ முடியவில்லை. அதனால்தான், உங்களை தேடி வந்தேன்…’’ என்றார்.
‘’கண்ணுக்குத் தெரியாத சூட்சும உடல் குறித்த அறிவு மனிதனுக்குத் தேவை இல்லை. கண்ணுக்குத் தெரிந்த உடலையே மனிதர்களால் உருப்படியாக பராமரிக்க முடிவதில்லை. இடகலை, பிங்கலை, சுழுமுனை என்றெல்லாம் பேதம் பிரித்து, தியானத்தில் அமர்ந்து குண்டலினியை மேலே ஏற்றுவது கற்பனையே. அது ஒரு கடினமான இலக்கு என்பதாலே, யாராலும் அதனை முழுமையாக அடைய முடிவதில்லை.
அதனால் முதலில் உன் உடம்பை நேசி. மனதை இலகுவாக்கு. கடவுள், சொர்க்கம் என்றெல்லாம் யோசனையை விடுத்து வாழ்க்கையையும் சக மனிதர்களையும் நேசிக்கத் தொடங்கு. எது நடந்தாலும் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள். உன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழு. பிரச்னை வருகிறது என்றால் அதில் இருந்து விலகி நின்று பார். உன்னையே நீ வேறு ஒரு மனிதனாக எண்ணிக்கொள். உனக்கு நடக்கும் நன்மை, தீமைகளை உன் கற்பனை மனிதன் எப்படி எடுத்துக்கொள்கிறான் என்று பார். அந்த கற்பனை மனிதன் நீ வழிநடத்து. அதுதான் உன்னுடைய தேடலுக்கான எல்லை. சூட்சும உடல் பற்றிய சிந்தனைகளை யாரேனும் வேலை அற்றவர்கள் செய்யட்டும்’’ என்றார் ஞானகுரு.
திகைத்து நின்றார் முதியவர்.