ஆசிரமத்தை ஞானகுரு துடைப்பம் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு குடும்பஸ்தன் அமைதியாக வந்து நின்றார். தன்னுடைய வேலை முழுமையாக முடிந்ததும் அவனிடம் வந்தார் ஞானகுரு.
‘’என்னுடைய பெண்ணுக்கு திருமணம் நடத்தவேண்டும். நல்ல இடம் வந்திருக்கிறது. ஆனால், அதிக நகை கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன். ஆனால், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவன் தவறான தொழில் செய்கிறான். தெளிவாக சொல்வது என்றால் கஞ்சா விற்பனை செய்கிறான். நல்ல செல்வத்தில் புரளுகிறான். சந்தோஷமாகவே இருக்கிறான். இத்தனை நாட்களும் நேர்மையாக இருந்த நான் ஒரு திருமணம் முடிக்காமல் சிரமப்பட, அவனோ கவலையே இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறான். ஏன் இப்படி நடக்கிறது..? நானும் தவறான தொழில் செய்யலாமா..?”
ஞானகுரு அவரது தோளில் கை போட்டபடி பேசினார்.
‘’சட்டத்துக்குப் புறம்பாக தொழில் செய்பவன் லட்டு சாப்பிட முடியும், அதேநேரம் சிறையில் களி சாப்பிடவும் தயாராக இருக்க வேண்டும். வன்முறை கும்பலிடம் சிக்கி உயிர் விடவும் வாய்ப்பு உண்டு. எந்த நேரமும் மரணத்தின் வாசலில் அமர்ந்திருக்கும் காரணத்தால், இருக்கும் நேரத்தை எல்லாம் கொண்டாட்டமாகக் கழிக்கிறான். நாளை அவனுடைய மகள் திருமணத்திற்கு தயாராக இருக்கும்போது அவன் இதேபோன்று செல்வத்துடன் இருப்பானா அல்லது சிறையில் கைதியாக இருப்பானா என்று சொல்ல முடியாது.
பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது. விலை உயர்ந்த மருந்தை வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது, மெத்தையை வாங்கலாம் தூக்கத்தை வாங்க முடியாது, புத்தகத்தை வாங்கலாம் புத்தியை வாங்க முடியாது, கூட்டத்தை வாங்கலாம் நண்பர்களை வாங்க முடியாது, வேலைக்காரர்களை வாங்கலாம் விசுவாசத்தை வாங்க முடியாது.
உன்னுடைய மகள் ஒரே நாளில் திருமணத்துக்குத் தயாராகவில்லை. அவள் திருமணத்துக்கு எத்தனை நகை வேண்டுமோ அதை உன் சம்பாத்யத்தில் சேர்த்து வைக்காதது உன் தவறு. அப்படி சேர்க்க முடியவில்லை என்றால், உன்னிடம் இருக்கும் பணத்துக்குத் தகுந்த மாப்பிள்ளையைப் பார். அதுதான் சரியான பார்வை. அதை மறந்து,சட்டத்துக்குப் புறம்பான வழியில் இறங்கிவிடாதே, அப்புறம் உன் மகள் திருமணத்தைக்கூட உன்னால் பார்க்க முடியாமல் போய்விடலாம்.
நேர்மையாக இருந்ததற்கு கடவுள் எந்த வெகுமதியும் கொடுக்க மாட்டார். நீதான் அதனை வெகுமதியாக எடுத்துக்கொண்டு சந்தோஷம் அடைய வேண்டும். உனக்கேற்ற மாப்பிள்ளையைப் பார்…’’ பேசி முடித்தார் ஞானகுரு.
தெளிவுடன் திரும்பினார் குடும்பஸ்தன்.