வாஸ்து பிரச்னை தீர்ந்துபோன மன திருப்தியில் இருந்த ராஜரத்னம், நான் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தார். அப்போது வெளியில் வந்த அவரது மனைவி, ‘‘என்னங்க நம்ம குலதெய்வம் பத்திக் கேளுங்க..’’ என்றார்.

உடனே ராஜரத்னம், ‘‘சாமி… எங்க குலதெய்வம் ரொம்பவும் உக்கிரமானது. போன முறை போய் வந்தபிறகுதான் பிரச்னைகள் ஆரம்பம். அதனால் குல தெய்வம் குத்தமாக இருக்குமா?’’ என்று கேட்டார்.

’’வாஸ்து பிரச்னை என்றாய். இப்போது பழியைத் தூக்கி குலதெய்வம் மீது போடுகிறாய்…’’ என்று சிரித்தேன்.

’’சாமி அப்படிச் சொல்லாதீங்க… எங்க சாமி ரொம்பவும் துடியானது’’ என்றார் அச்சத்துடன்.

’’நான் கோபக்காரன், என்னை வணங்கவில்லை என்றால் அழித்துவிடுவேன், தப்பு செய்தால் நரகத்துக்குத் தள்ளிவிடுவேன், எனக்கு பூஜை செய்யவில்லை என்றால் உன்னை துன்பப் படுத்துவேன். நீ சம்பாதித்ததில் காணிக்கை போடவில்லை என்றால் சாபம் தருவேன் என்று எந்த கடவுளும் சொல்வதில்லை… அது கடவுளின் குணமும் அல்ல. மனிதர்கள் மட்டுமே இப்படி சிந்திக்கக் கூடியவர்கள்.

முன்னோர்களே குலதெய்வங்கள். அவர்கள் கடவுளாக இருந்தால் உன்னை வாழவைப்பார்களே தவிர அழிக்கவோ பயமுறுத்தவோ மாட்டார்கள். ஆனாலும் உன் குழப்பம் தீர மீண்டும் ஒரு முறை அங்கேயும் போய்வா… ஆனால் பயத்துடன் போகாதே. அன்புடன் போ, கடவுளை ஆசைதீர வணங்கு…’’ என்றேன்.

ராஜரத்னம் முகத்தில் தெளிவு வந்தது. அந்நேரம் உயர் ரக நாய் ஒன்று வேகமாக ராஜரத்னத்தை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே பாய்ந்து வந்தது. என்னைப் பார்த்த பார்வையில் விரோதம் இருந்தது.

உடனே ராஜரத்னம், ‘‘நோ.. பாபு! ஹி இஸ் எ ஃப்ரண்ட்’’ என்று நாயை அன்பாகத் தடவிக் கொடுத்தபடி, ‘‘இது என்னோட உயிர்… ரொம்பவும் பாசமா வளர்க்கிறேன்’’ என்றார்.

’’மனிதர்கள் நாய் வளர்ப்பது பாசத்தைக் காட்டுவதற்கு அல்ல… பிறரை அடிமையாக்கும் ஆசைகளின் மிச்சம்…’’ என்று சொல்லிவிட்டு சுருட்டை எடுத்துப் பற்றவைத்தேன்.

ராஜரத்னம் முகம் சட்டென்று இருளடித்துப் போனது. குழப்பமான முகத்துடன், ‘‘சாமி… நான் இவ்ளோ அன்பா… பாசமா நாய் வளர்க்கிறேன். நீங்க அடிமைத்தனத்தின் மிச்சம்னு சொல்லிட்டீங்களே…’’ என்று ஆதங்கப்பட்டார்.

அவர் பேசியதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், ‘‘எதற்காக நாய் வளர்க்கிறாய்…?’’ என்றேன்.

’’பாதுகாப்பா, அந்தஸ்து கூடினதா தெரியும்னுதான் முதல்ல நாய் வாங்கினேன். ஆனால், அது என் மீது காட்டிய பிரியம், என்னை மாற்றிவிட்டது. வெளியே எத்தனை டென்ஷன்கள் இருந்தாலும் வீட்டிற்கு வரும்போது, இவை வாலாட்டி வரவேற்கும் வாஞ்சையில் என்னையே மறந்து விடுகிறேன்…’’

’’அதாவது ஒரு மகாராஜா அரண்மனைக்குத் திரும்பியதும், அவரை இளைப்பாறச் செய்து களிப்பூட்டும் பணிப்பெண்கள் போல…’’

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் ராஜரத்னம்.

’’உனக்கு மனபாரத்தைக் குறைக்கும் இந்த நாய்க்கு வெறிபிடித்தால் என்ன செய்வாய்? உன்னுடைய நாய் சுதந்திரமாக வீட்டை விட்டு வெளியேறி மற்ற நாய்களுடன் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தால் சேர்த்துக் கொள்வாயா? உன்னையோ அல்லது உன்னைச் சேர்ந்தவர்களையோ கடித்தாலும், இதே போன்று அன்பு காட்டுவாயா?’’

’’இது உயர்ஜாதி நாய், வெறி பிடிக்காது சாமி… வீட்டிலேயே அதுக்கு எல்லா வசதியும் இருக்கும் போது எதுக்காக வெளியே போகணும்? நாம பாதுகாப்பா வளர்த்தா… யாரையும் கடிக்காது. பிற உயிர்கள் மீது அன்பு செலுத்துவது நல்லதுதானே சாமி..’’ என்றார்.

’’ஆஹா… பிற உயிர்கள் மீதுதான் மனிதர்களுக்கு எத்தனை அக்கறை! எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவதாக இருந்தால் ஒரு பாம்பு, ஆந்தை, கோட்டானை எடுத்து வளர்க்கலாமே…’’

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

’’நாயை நீ அடக்கி ஆளமுடியும் என நினைப்பதாலே வளர்க்கிறாய். நீ சொன்னதை அது கேட்கும்படி பழக்கமுடியும் என நினைக்கிறாய்… ஒருவேளை நீ சொன்னதை அது கேட்கவில்லை என்றால் அதனை உன்னால் அடிக்க முடியும். அதற்காக உன்னை யாரும் தட்டிக் கேட்கப்போவது இல்லை. இது அடிமைப்படுத்தும் குணமில்லாமல் வேறு என்ன?’’

’’சாமி… என் வேலைக்காரனுக்கு கொடுக்கும் சம்பளத்தைவிட இந்த நாய்க்கு அதிகமா செலவழிக்கிறேன், தடுப்பூசி போடுறேன்… அதனால நான் சொல்வதை செய்யணும்னு எதிர்பார்க்கிறது நியாயம்தானே..’’ என்று மெல்லிய குரலில் பதில் சொன்னார்.

’’ஆஹா… பண்டமாற்று போன்று நீ நாய்க்கு செய்யும் உதவிகளுக்கு அதனிடம் இருந்து அன்பை எதிர்பார்க்கிறாய். ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்துகொள், எந்த நாயுமே உன் வீட்டுச் சோற்றை மட்டும்தான் நம்பியிருக்கிறது என்று நினைக்காதே…’’ என்று எழுந்து கொண்டேன்.

நான் கிளம்ப யத்தனிக்கிறேன் என்பது புரிந்ததும் உள்ளே சென்று ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்த ராஜரத்னம், ‘‘சாமி… தப்பா நினைக்காதீங்க… நான் என்னோட குருஜியைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு உடை கொடுப்பேன். நீங்களும் மறுக்காம வாங்கிக்கிடணும்…’’ என்று பையை நீட்டினார். 

 ‘‘சாமி… எங்க வீட்லேயே குளிச்சுட்டு இந்த ட்ரெஸ்ஸைப் போட்டுக்கோங்க..’’ என்றதும் மறுக்காமல் குளிக்கப் போனேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *