செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். ’’இயற்கையை மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காக நாசம் செய்கிறார்களே சுவாமி, ஓசோன் மண்டலத்தின் அருமை புரியாத மக்களுக்கு அதனை புகட்டுவது எப்படி?’’ என்று கேட்டார்.

’’இயற்கை தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளும். அதனால், அதனை நீ காப்பாற்ற வேண்டாம். உன்னுடைய உடம்புக்குத் தேவையான சுத்தமான காற்று கிடைக்கிறதா என்பதை மட்டும் பார்… இன்னும் சில நாட்களில் காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலை வந்துவிடும்’’ என்றபடி நகர்ந்தார் ஞானகுரு.

’’அதெப்படி சுவாமி, இந்த பிரபஞ்சம் நிறைய காற்று இருக்கும்போது, அது எப்படி பற்றாக்குறையாகும், ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும்?’’

‘’தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உருவாகும் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கூறினால் சிரித்திருப்பாய். ஆனால், இன்று ஒரு வாய் தண்ணீர் வேண்டும் என்றாலும் காசு இல்லாமல் கிடைக்காது. அப்படியொரு நிலைதான் காற்றுக்கும் வரப்போகிறது.

ஏனென்றால் மனித உடல் சுத்தமான காற்றை மட்டுமே ஏற்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. நீ சுவாசிக்கும் காற்றில் சிறிய தூசி இருந்தால்கூட, உடனே இருமல், தும்மல் மூலம் அதனை வெளியே தள்ளிவிடும். சுத்தமான காற்றுதான்  உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும். காற்று எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு உனது  ஆயுள் கெட்டியாக இருக்கும். காற்று தான் உயிர்களின் முதல் ஜீவ நாடி. அதனால் முதலில் நீ சுவாசிப்பதற்கு மட்டும் சுத்தமான காற்றுக்கு ஏற்பாடு செய், அது போதும்…’’

‘’சுத்தமான காற்றுக்கு நான் என்ன செய்யவேண்டும்?”

‘’அதிகம் சிரமப்பட வேண்டாம். உன் வீட்டில் இடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கேற்ப சில செடிகளை வளரவிடு. ஒவ்வொரு நபரும் செடி வளர்க்கத் தொடங்கிவிட்டால் உலகத்தின் ஓட்டை தானாகவே அடைந்துவிடும். மனிதனுக்கும் சுவாசிப்பதில் சிக்கலே வராது’’ என்றபடி மூச்சை அழுத்தமாக உள்ளே இழுத்தார்.

Leave a Reply

Your email address will not be published.