கைகளில் இருந்த தானியங்களை பறவைகளுக்கு வீசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அப்போது, ‘’சுவாமி… ஒற்றைக் குடிசையிலும், நடைபாதையிலும் வாழும் ஏழைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது, அது எப்படி சாத்தியமாகிறது..?” என்று கேட்டார் மகேந்திரன்.
‘’காரில் பயணம் செய்வது சொகுசானதுதான். அதை அனுபவிக்கும் மனநிலை பணக்காரனுக்கு இருக்கிறதா என்பதுதான் முக்கியம். விலை உயர்ந்த அல்லது வசதியாக வேறு ஒரு காரை பார்த்ததும், அப்படி ஒரு கார் தன்னிடம் இல்லையே என்ற எண்ணம் வந்துவிட்டால், இந்த கார் தரும் சுகத்தை அனுபவிக்க முடியாது. சுவையான உணவு என்றாலும் தினமும் அது ஒரே அளவு மகிழ்ச்சியைத் தருவதில்லை.
உண்மையில், மனிதர்கள் ஒப்பீடுகளில்தான் மகிழ்ச்சி அடைகிறார்கள். அடுத்தவரைவிட நல்ல ஆடை கிடைத்துவிட்டால் மகிழ்கிறார்கள். தன்னைவிட வேறு ஒருவருக்கு 100 ரூபாய் கூடுதலாக சம்பள உயர்வு கிடைத்துவிட்டால், தனக்கு கிடைத்த சம்பள உயர்வும் துயரமாகிறது. இப்படி பணக்காரர்களுக்கும், நடுத்தரவர்க்கத்தினருக்கும் கவலைப்படுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது.
அதேநேரம், எல்லா ஏழைகளும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. கொலை, கொள்ளை போன்ற செயல்களில் பலரும் இறங்குவதற்கு ஏழ்மையே முக்கிய காரணமாக இருக்கிறது. அவர்கள் மகிழ்வுடன் இருப்பதில்லை.
ஆனால், பெரும்பாலான ஏழைகள் போதும் என்ற மனநிலைக்கு பழகிவிடுகிறார்கள். எது கிடைத்தாலும் அதற்காக மகிழ்ச்சி அடைகிறார்கள். நாளையும் இப்படி ஏதேனும் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். மகிழ்ச்சி அடைவதற்குக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் தவற விடுவதில்லை. துன்பத்திலும் மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள். அதனால்தான், ஏழைகள் வீட்டில் மரணம்கூட கொண்டாட்டமாகிறது.
பணக்காரர்களும் நடுத்தர மக்களும் எங்கே மகிழ்ச்சி என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இருப்பதைக் கொண்டு ஏழைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், ஏழ்மைக்கும் மகிழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதும் என்ற மனம் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது’’ என்றார் ஞானகுரு.
இந்த பதிலே மகேந்திரனுக்கு போதுமானதாக இருந்தது.