கோடை விடுப்பு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களிடம், விடுமுறையை எப்படி கழித்தீர்கள் என்று ஆசிரியர் கேட்பதுண்டு.
ஓவிய வகுப்பு, கிரிக்கெட் கோச்சிங், நடன வகுப்பு என்று ஆளாளுக்கு ஒன்று நிச்சயம் சொல்வார்கள். கல்வி கற்பதில் இருந்து ஓய்வு வேண்டும் என்பதற்காகத்தான் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் அந்த நாட்களிலும் எதையாவது கற்கச்சொல்லி பிள்ளைகளை வெளியே விரட்டுகிறார்கள் பெற்றோர்கள். இப்படி எதையாவது கற்பதுதான், விடுமுறையின் நோக்கம் என பெற்றோர்கள் நினைப்பதுதான் மிகப்பெரிய வேடிக்கை.
இதற்கு காரணம் பெரியவர்களுக்கும் ஓய்வு என்பதன் அர்த்தமே தெரிவதில்லை. அதனால்தான் ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் வேலைக்குச் செல்ல வேண்டியதில்லை என்ற அளவில்தான் சந்தோஷப்படுகிறார்கள். வேலை செய்வது அவர்களைப் பொறுத்தவரை கடுமையான சுமை. ஏனென்றால் செய்யும் வேலையை ரசித்து சந்தோஷமாக செய்பவர்கள் அரிது. அதுபோல் பெற்றோரின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்கிறார்களே தவிர, இஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் மிகவும் குறைவு. படிப்பு, வேலை மட்டுமின்றி ஓய்வையும் வீணாக்குபவர்களே அதிகம்.
சந்தோஷ் வேலை செய்யும் அலுவலகத்தில் நெட்வொர்க் குறைபாடு ஏற்பட்ட காரணத்தால், அதனை நிவர்த்தி செய்வதற்காக இரண்டு நாட்கள் திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டது. எதிர்பாராத விடுமுறை என்றதும் குஷியானான் சந்தோஷ். உடனே மனைவி, குழந்தைகளுடன் அருகில் இருக்கும் மலைபிரதேசத்துக்கு ஓய்வெடுக்க கிளம்பினான். முன்கூட்டியே ரிசர்வேஷன் செய்யவில்லை என்பதால் அவசரமாக பஸ்ஸில் கிளம்ப நினைத்தான். ஆனால் மனைவியும் குழந்தைகளும் பஸ் பயணத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், வாடகை கார் பிடித்து கிளம்பினான். நீண்டதூரம் காரில் பயணித்து மலைபிரதேசத்துக்கு செல்லும் முன்னரே, குடும்பத்தில் அத்தனைபேரும் களைத்துப்போனார்கள்.
ஒரு நல்ல தங்கும் விடுதியை தேடிக் கண்டுபிடித்து அறைக்குப் போனார்கள். வெளியே அற்புதமாக வானிலை நிலவினாலும், வெளியே சென்று சுற்றிப்பார்க்கும் மனநிலை யாருக்கும் இல்லை. அதனால் அன்று முழுவதும் அறையில் அடித்துப்போட்டதுபோல் படுத்துத் தூங்கினார்கள். மறுநாளும் குடும்பத்தினர் தூங்குவதைப் பார்த்து சந்தோஷ் கோபமானான். இத்தனை பணம் செலவழித்து சுற்றுலா வந்து, இப்படியா அறையில் அடைந்து கிடப்பது என்று திட்டிக்கொண்டே இருந்தான். அதனால் மனைவியும் குழந்தைகளும் எரிச்சலானார்கள்.
வந்த இடத்தில் நிம்மதியாக இருக்கவிடாமல் இப்படியா டார்ச்சர் செய்வது என்று நொந்துகொண்டே ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பினார்கள். போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஆறு இடங்களை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு இரண்டு இடங்களைத்தான் அவர்களால் பார்க்கமுடிந்தது. இதற்கு காரணம் சோம்பேறித்தனம் என்று குடும்பத்தினரை மேலும் மேலும் திட்டினான். சந்தோஷ். அடுத்த நாள் அலுவலகம் என்றதால், உடனடியாக காரில் கிளம்பினார்கள். ஊருக்கு வந்து சேர்ந்த அலுப்பில் அத்தனை பேரும் தூங்கிக்கொண்டிருக்க… சந்தோஷ் அலுவலகத்திற்கு சென்றான். இரண்டு நாட்கள் பார்க்காத வேலைகளையும் சேர்த்து சந்தோஷ்க்கு ஏகப்பட்ட வேலைகளை அள்ளிக்கொடுத்தார்கள். பயங்கர களைப்பில் இருந்த சந்தோஷ் வேலைகளை சொதப்ப… மேலதிகாரியிடம் இருந்து சரமாரி திட்டுவிழுந்தது.
ரெண்டு நாள் ஜாலியா ஊர் சுத்தத்தெரியுது, ஒரு வேலையை உருப்படியா செய்யத்தெரியலைன்னா வேலையை விட்டுப் போ என்று கத்தினார் அதிகாரி. ரெண்டு நாள் விடுமுறையும் சந்தோஷமாக இல்லை என்பதை சொல்லமுடியாமல், வேலையில் மூழ்கினான் சந்தோஷ்.
சந்தோஷைப் போன்று ஓய்வை எப்படி அனுபவிப்பது என்று தெரியாமல்தான் பலரும் சொதப்பிக்கொண்டு இருக்கிறார்கள். விடுமுறை என்றதும் ஒரு வேலையும் செய்யாமல் தேமே என்று தொலைக்காட்சி முன்பு படுத்துக்கிடப்பதை சந்தோஷம் என சிலர் நினைக்கிறார்கள். மூன்று நேரமும் மூக்குமுட்ட சாப்பிடத்தான் லீவு விடப்பட்டதாக நினைப்பவர்களும் உண்டு. அடித்துப்பிடித்து சினிமா பார்ப்பது, சொந்தக்காரர்களை தொந்தரவு செய்வது என்று எதையாவது செய்து ஓய்வை ஒழித்துத்தான் கட்டுகிறார்கள். ஓய்வு எத்தனை அவசியம் என்ற உண்மை நிறைய பேருக்குத் தெரிவதே இல்லை.
- ஓய்வு நிஜமாகவே அவசியமா?
ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் ஓய்வு எடுக்கவேண்டும். உடலுக்கு தூக்கம் எத்தனை அவசியமோ அந்த அளவுக்கு மனசுக்கு ஓய்வு அவசியம். அதனால்தான் ஆறு நாட்கள் உழைப்பு, ஒரு நாள் ஓய்வு என்று கட்டமைப்பு உலகெங்கும் நிலவுகிறது. அலுவலக வேலை செய்பவர்கள் மட்டுமின்றி வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கும் காட்டு வேலை செய்யும் விவசாயிகளுக்கும் ஓய்வு நிச்சயம் தேவை. அப்போதுதான் உடலும் மனமும் நலம் பெறும்.
- மனம் ஓய்வு எடுக்குமா?
ஒரு நொடியும் சும்மா இருப்பதில்லை மனம். எதையும் நினைக்கக்கூடாது என்று கட்டளை போட்டாலும், அந்த கட்டளைகளை எப்படியெல்லாம் மீறலாம் என்று நினைக்கத்தான் செய்யும். சிந்தனைகள், ஞாபகங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள், எரிச்சல்கள், குரூரம், கோபம் என்று மனதிற்கு ஏராளமான வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். உடலை தூங்க வைப்பதுபோல் மனதை ஓய்வெடுக்கச் சொல்ல முடியாது. ஆனால் மனதை குஷிப்படுத்த முடியும். மனதிற்கு சந்தோஷம் தரும் விஷயங்களை செய்வதுதான் ஓய்வு.
- சுற்றுலா செல்வது ஓய்வு கிடையாதா?
ஆனந்தமாக சுற்றுலா செல்வது நிச்சயம் நல்ல ஓய்வுதான். ஆனால் ஒரே நாளில் எட்டு இடங்களை சுற்றிப்பார்த்து, அத்தனையையும் பார்த்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்வதால் மனதிற்கு நிம்மதியும் திருப்தியும் நிச்சயம் கிடைக்காது. ஆக்ராவிற்கு போய் தாஜ்மஹாலை விறுவிறுவென சுற்றிப்பார்த்து, அதன் எதிரே நின்று போட்டோ எடுத்துக்கொள்வதால் மனம் சந்தோஷம் அடையாது. அந்த இடத்தில் நீ ஷாஜகானாக அல்லது மும்தாஜாக மாற வேண்டும். இத்தனை பெரிய கல்லறை கட்டுவதற்கு எப்படி சிந்தனை ஏற்பட்டது, அந்த அளவுக்கு ஷாஜகான் மனதில் மும்தாஜ் எப்படி இடம் பிடித்தாள், எப்படியெல்லாம் கட்டியிருப்பார்கள், எந்த ஆண்டு கட்டப்பட்டது, எத்தனை பேர் கட்டினார்கள் என்றெல்லாம் தேடிப்படித்தும், கேட்டும் தெரிந்துகொள். அப்போதுதான் தாஜ்மஹாலின் ஆழமும் அர்த்தமும் உனக்குப் புரியவரும். கண்களை மூடிப்பார்த்தாலும் உன் மனதில் தாஜ்மஹால் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டு அளப்பரிய சந்தோஷம் கொடுக்கும். அந்த சந்தோஷம் உன் மனம் முழுவதும் நிரம்பிவழியும்போது… பரிபூரண ஓய்வு கிடைக்கும்.
- இன்றைய சூழலில் இப்படியெல்லாம் ஆராய்வது சாத்தியமா?
எதையும் ஆழமாக ஆராய்ந்து பார்க்க விருப்பமில்லை என்றால் செய்யவேண்டாம். இப்படித்தான் ஓய்வு எடுக்கவேண்டும் என்று யாரும் யாருக்கும் வரைமுறை கொடுக்கமுடியாது. ஏனென்றால் உழைத்துக்கொண்டே இருப்பதும்கூட ஒருசிலருக்கு ஓய்வாக இருக்கலாம்.
அதேபோல் ஓய்வு எடுப்பதற்கு ஊர் சுற்றிப்பார்க்கத்தான் வேண்டும் என்பது அவசியமில்லை. தனியறைக்குள் அமர்ந்தும் நீ ஓய்வெடுக்கலாம். உன் மனசுக்கு முழுமையாக சந்தோஷம் தரும் காரியத்தை செய்வது எல்லாமே ஓய்வுதான். உனக்கு சந்தோஷம் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை என்றால், உன் குடும்பத்தினருக்கு, உன் நண்பர்களுக்கு சந்தோஷம் தரும் செயலை செய்யத்தொடங்கு.
விடுமுறை தினத்தில் மனைவி, குழந்தைகளுக்கு ஆசை ஆசையாக சமையல் செய்துகொடு. அவர்கள் சிரிப்பில், சந்தோஷத்தில் உன் மனதிற்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும். உன்னை தலை மீது வைத்து கொண்டாடுவார்கள். இந்த சந்தோஷத்திற்கு ஈடாக உலகில் எந்த ஓய்வும் கிடையாது என்ற உண்மை புரியும்.
- ஓய்வுக்கு இலக்கணம் உண்டா?
என்ன செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்பவர் புத்தர். அனுபவித்து சாப்பிடுவதுபோல், தூங்குவதையும் விரும்பி செய்வார். அப்படியே ஓய்வையும் விரும்பி ஏற்றுக்கொள். உனக்குள் மாற்றம் பூவாக மலரும்.