சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவுக்கு, சில பழங்களைக் கொடுத்தார் மகேந்திரன். ‘’எனது நண்பன் ஒருவருக்கு புற்று நோய் வந்துவிட்டது. இதனை குணப்படுத்த எத்தனையோ மருந்துகள், சிகிச்சைகள் எடுத்துக்கொண்டே இருக்கிறார். வலியும், வேதனையும் அதிகரிக்கிறதே தவிர, தீர்வு தென்படவில்லை. இப்போது அவர் என்ன செய்யவேண்டும்..?” என்று கேட்டார்.

’’வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் மனிதரின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஒரு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, நீ டிரைவரை நம்பித்தான் பயணம் செய்ய வேண்டும். அவர் ஏதேனும் தவறு செய்து விபத்து ஏற்பட்டால், ஒரு தவறும் செய்யாத நீயும் அதன் பலனை அனுபவித்தே தீர வேண்டும். இதை உன்னால் மாற்ற முடியாது.

இனிமேல் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற அளவுக்கு வியாபாரம் நடக்கும்போது திடீரென கொரோனா வைரஸ் போன்ற சூழல் ஏற்பாடு ஒட்டுமொத்த வியாபாரமும் இழுத்துமூட வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

இதுபோன்று வாழ்க்கை முழுவதும் நன்மையும், தீமையும் எதிர்பாராமல் நடந்துகொண்டேதான் இருக்கும். நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்வது நல்லது. புற்றுநோய் என்பது உறுதியான பிறகு, அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது எத்தனை முக்கியமோ, அந்த அளவுக்கு  புற்று நோயை முழுமையாக ஏற்றுக்கொள்வதும் அவசியம். இதை நினைத்து வருந்துவது, அழுவது, புலம்புவது எந்த வகையிலும் பயன் தரப்போவதில்லை.

புற்றுநோய்க்கு சிகிச்சையை மகிழ்வுடனும் நம்பிக்கையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். புற்றுநோயில் இருந்து மீண்டுவிட்டால் நல்லது மீளாவிட்டாலும் நல்லதே என்று ஏற்றுக்கொள்ளும் நிலை வர வேண்டும். புற்று நோயினால் முடி கொட்டிவிட்டால், உன்னால் ஒரு விக் வைத்துக்கொண்டு வலம் வர முடியும். அதுதான் உன்னால் செய்யக்கூடிய மாற்றம்.

ஆகவே, எதிர்பாராத மாற்றம் நிகழும்போது, உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியதை மாற்றுங்கள். கட்டுப்படுத்த முடியாத விஷயம் என்றால் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது உலகம் இன்னும் அழகாகத் தெரியும். ஒரு புற்று நோயாளியால்தான் ஒவ்வொரு பூவையும் ஒவ்வொரு உதயத்தையும் நன்கு ரசிக்க முடியும்’’ என்றார் ஞானகுரு.

வேதனையுடன் நின்றார் மகேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published.