நீண்ட நாட்கள் கழித்து நிம்மதியாக குளித்து, புத்தாடை அணிந்துகொண்டதும் மனதில் திடீர் உற்சாகம் எழுந்தது. அடுத்த பயணத்துக்குத் தயாராகி வெளியே வந்தேன்.

ராஜரத்னத்துடன் இன்னொரு நபரும் புல்வெளியில் அமர்ந்திருந்தார். பக்கத்து வீட்டுக்காரர் என்று ஆனந்தனை அறிமுகப் படுத்தி வைத்தார்.

’’சாமி… இந்த வீட்ல வாஸ்து கோளாறு எதுவுமே இல்லைன்னு சொன்னீங்களாம். ரொம்பவும் சந்தோஷம், நானும் அதைத்தான் சொன்னேன், ராஜரத்னம் கேட்கவே இல்லை…’’  என்றபடி எழுந்து வணங்கினார் ஆனந்தன்.

நான் முகத்தில் எந்த  சலனமின்றி கிளம்புவதில் குறியாக இருந்தேன்.  ஆனால் ஆனந்தன் விடாமல், ‘‘சாமி… எங்க வீட்டுக்கும் வந்து ஒரு பூஜை செஞ்சா ரொம்பவும் சந்தோஷப்படுவேன்…’’ என்றார்.

’’நான் மந்திரங்களை விற்பனை செய்வதில்லை…’’ என்று முகத்தில் அடித்தாற்போன்று பதில் சொன்னாலும் விடாமல் மீண்டும் பேசினார்.

 ‘‘திடீர்னு உங்களைக் கூப்பிடுறது தப்புத்தான். அடுத்த வாரத்துல எங்க முன்னோர்களுக்காக பரிகார பூஜை நடத்தப் போறோம். ஹோமம் வளர்த்து பழங்கள், பிரசாதங்கள், பட்டுப்புடவைகள் எல்லாம் நெருப்புக்கு அர்ப்பணம் செய்யப் போறோம். அதுக்காவது நீங்க வந்து ஆசிர்வதிக்கணும். நீங்க எங்கே இருப்பீங்கன்னு சொன்னா, நானே கார்ல வந்து அழைச்சுக்கிறேன்…’’ என்றார். சுர்ரென எனக்கு கோபம் எட்டிப் பார்த்தது.

’’எதற்காக உணவுப் பொருளையும், பட்டுப்புடவையையும் தீயில் போடுகிறாய்…?’’ கோபத்தை வெளியில் காட்டாமல் கேட்டேன்.

‘‘என்ன சாமி இப்படிக் கேட்கிறீங்க… மந்திரத்தின் மகிமையால அவை முன்னோர்கள் வசிக்கும் லோகங்களை அடைந்து, அவர்களை ப்ரீத்தி அடையச் செய்யும்…’’ என்றார்.

 ‘‘பக்கத்துத் தெருவில் உயிருடன் இருக்கும் உன் உறவினர் அல்லது நண்பர்களுக்கு மந்திரத்தின் சக்தியால் முதலில் பொருட்களை அனுப்பச் சொல், அதற்குப் பின் கண்ணுக்குத் தெரியாத உலகத்தில் இருக்கும் முன்னோர்களுக்கு உணவு அனுப்பலாம் மகனே…’’ என்றேன்.

’’என்ன சாமி இப்படிச் சொல்றீங்க…’’ என்று கேட்டதும் கோபத்தை வெளியே காட்டாமல் அமைதியாகவே பேசினேன்.

’’இறைவன் பெயரால் எதையும் வீணாக்காதே ஆனந்தன். அது இயற்கைக்கு நீ செய்யும் துரோகம்…’’ என்றேன்.

’’சாமி… ஒரு மீடியம் மூலமா, செத்துப்போன என்னோட மூத்த அண்ணன்கிட்ட பேசுனேன். அப்போதான் எங்க அண்ணன், ‘ரொம்பவும் பசியா இருக்கேன்’னு சொன்னார். அதான் ஹோமம் நடத்தி உணவுகளைக் கொடுக்கலாம்னு முடிவு எடுத்தேன்…’’ என்றார் ஆனந்தன்.

’’மனிதர்களுடன் பேச நேரமில்லாத இந்தக் காலத்தில் ஆவியுடன் பேசினாயா..?  நல்ல தமாஷ். உன் முன்னோர்களை ஜோசியக் கிளி போன்று அவமானப் படுத்தாதே…’’ என்றேன்

’’சாமி… நான் செஞ்சது தப்பா, அப்படின்னா பசியோடு இருக்கிற அண்ணன் ஆவி…..’’ என்று இழுத்தார் ஆனந்தன்.

’’உன் அண்ணன் ஆவிக்குப் பசித்தால் அந்த உலகத்திலேயே எதையாவது வாங்கி சாப்பிட்டு பசியாறிக் கொள்ளட்டும். அதையும் மீறி பூஜை நடத்துவதாக இருந்தால் வேதங்கள் தெரிந்த எத்தனையோ ஞானிகள் ஆவி உலகத்தில் இருப்பார்கள், அவர்களை வைத்தே ஹோமம் நடத்திக் கொள்…’’ என்று சடக்கென எழுந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *