மகேந்திரசாமியும் அவரது பரிவாரமும் பின்தொடர, அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தேன். இந்த மினி ஊர்வலத்தை, பக்தர்கள் பயபக்தியுடன் பார்த்து வழிவிட்டு நின்றதுடன், எனக்கு கும்பிடும் போட்டனர்.

சுவாமி தரிசனம் முடித்து கையில் மாலை, பிரசாதத்துடன் காருக்குள் ஏறப்போன ஒரு கோல்டு ஃபிரேம் கண்ணாடி மனிதர், என் வருகையைப் பார்த்ததும் மூக்குக் கண்ணாடியை சரிசெய்தபடியே பவ்யமாக வணங்கி நின்றார்.அவர் அருகே நான் சென்றதும் பவ்யமாக கும்பிட்டபடி,

’’சாமி… அடியேனை ஆசிர்வாதம் செய்யணும்…’’ என்று நடுரோட்டில் சட்டென காலைத் தொட்டு வணங்கினார்.

கண்ணாடிக்காரருக்கு ஏதோ அவசியத் தேவை இருக்கிறது என்பது அவரது செயலில் புரியவே, ‘‘சொல்லுங்கள்… என்ன பிரச்னை?’’ என்று கேட்டேன்.

’’வழக்கமா இங்க ஒரு குருஜி இருப்பார், அவரிடம்தான் என் மனபாரத்தை இறக்கி வைப்பேன். ஆனா, ஒரு வாரமா அவர் போன இடமே தெரியலை. அதுதான் யாரிடம் கொட்டித் தீர்ப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில், கடவுளாய் பார்த்து உங்கள் தரிசனம் கிடைக்கச் செய்திருக்கிறார்…’’ என்றார்.

என் பின்னே வந்த பரிவாரங்களுக்கு அவரை நன்றாகவே தெரிந்திருந்தது. ‘‘சாமி… ராஜரத்னம் ரொம்ப நல்லவர், வசதியானவர். இந்தப்பக்கம் மக்களுக்கு நிறைய உதவி செய்றார், வெள்ளிக்கிழமையானா கோவிலுக்கு வந்து எல்லோருக்கும் கைநிறைய காசு கொடுப்பார், சாப்பாடு போடுவார்’’ என்றார்கள்.

நான் அமைதியாக நிற்கவே, ‘‘சாமி… தயவு பண்ணி என் வீட்டுக்கு வரணும், நானே உங்களைத் திருப்பிக் கொண்டுவந்து விடுறேன்…’’ என்றார்.

திடீர் நண்பர்களைவிட்டு எப்படி விலகிச் செல்வது என்ற என் யோசனைக்கு எளிய விடை கிடைத்தது. அதனால் எந்த மறுப்பும் சொல்லாமல் அனைவருக்கும் புன்னகையுடன் விடைகொடுத்துவிட்டு, காரின் முன் சீட்டில் ஏறி உட்கார்ந்தேன்.

புத்தம் புது பங்களாவின் முன்னே கார் நின்றது. என்னை மரியாதையுடன் அழைத்துச் சென்று மனைவியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பால், பழம் கொடுத்து உபசரித்த மனைவியின் தலை மறைந்ததும், பிரச்னையை பேசத் தொடங்கினார்.

’’சாமி… எனக்கு என்ன பிரச்னைன்னா..’’ என்று தொடரப்போனவரை கண்களால் நிறுத்தி, ‘‘இந்த வீடுதானே…’’ என்றேன். ஒருகணம் ஆடிப்போய் விட்டார். குடும்பப் பிரச்னை அல்லது தொழில் பிரச்னை என்றால் வீட்டிற்கே வம்படியாக கூட்டி வரமாட்டார்கள் என்பது சிம்பிள் லாஜிக். அதற்கே அசந்து போயிருந்தார். மேற்கொண்டு அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.

ஊரிலேயே பிரபலமான ஜோதிடரின் வாஸ்து ஆலோசனை கேட்டே பிரமாண்டமாக இந்த பங்களாவைக் கட்டியிருக்கிறார். வீட்டைக் கட்டி முடிக்கும்வரை எந்த சிக்கலும் இல்லையாம். ஆனால் இங்கு குடி வந்ததில் இருந்து எல்லோருக்கும் ஏதோ மனக்குறை, உடல் குறை. வியாபாரத்திலும் லாபம் குறைந்திருக்கிறது.

கடந்தவாரம் இந்த வீட்டிற்கு ஒரு பூஜைக்காக வந்த ஒரு பிரபல குருக்கள், ‘வீடு வாஸ்துவில் கோளாறு இருக்கிறது, ஆபத்து வருவதற்கு முன் சரிசெய்துவிடு’ என்று எச்சரித்துப் போனாராம். அன்று முதல் மனசே சரியில்லை. மீண்டும் பழைய வீட்டிற்கே போய்விடலாமா என்பதையே கேட்டுத் தெளிவுபடுத்த விரும்பினார். 

 வீட்டை நன்றாக சுற்றிப் பார்த்தேன். வீடு பெரியபெரிய ஜன்னல்களுடன் கட்டப்பட்டிருந்தது. ஆனால் வீட்டிற்குள் வெளிச்சம் வராதவகையில் ஜன்னல்கள் மூடி வைக்கப் பட்டிருந்தன. முதலில் அனைத்தையும் திறந்து வைக்கச் சொல்லிவிட்டு பங்களாவின் வெளியே இருக்கும் புல்வெளிக்குப் போனேன். ராஜரத்தினம் ஆட்டுக்குட்டி போல் பின்னே வந்தார்.

’’ராஜரத்னம்… வேலை விஷயமாக அல்லது சுற்றுப்பயணமாக எந்த ஊருக்குப் போனாலும், சில தினங்களிலேயே அந்த ஊர் அலுப்புத்தட்டி சொந்த ஊருக்குத் திரும்பும் ஏக்கம் அனைவருக்கும் வந்துவிடும். சொந்த ஊருக்குத் திரும்பி, சொந்த வீட்டில், தனக்கான அறையில்  படுத்தபின்னர்தான் அக்கடாவென்று திருப்தியாக இருக்கும். அந்த நிம்மதியை  அனுபவித்திருக்கிறாயா…?’’

’’ஆமாம் சாமி…’’ தலையாட்டினார்.

’’திருமணமான புதுப்பெண்ணுக்கு மாமியார் வீடு பழகிப்போக சில மாதங்களாவது ஆகும்.  அதுபோலவே உங்களுக்கும் இந்த வீடு இப்போது கண்ணாமூச்சு காட்டுகிறது.  தொடர்ந்து நீங்கள் இங்கு புழங்கும்போது, இந்த வீடும் உங்கள் அங்கமாக மாறிவிடும்…’’ என்றேன்.

’’நீங்க சொல்றது சரிதான் சாமி… வீட்டைச் சுத்திப் பார்த்தீங்க, வாஸ்து குறை இருக்கான்னு சொல்லலையே…’’ என்று கேட்டார்.

’’பிரபலமான வாஸ்து ஜோதிடரின் ஆலோசனைப்படிதானே வீட்டைக் கட்டினீர்கள்? பின் எதற்காக இன்னொருவர் சொன்னதும் குழப்பம்?’’

’’சாமி… ஜோதிடம் என்பது முழு உண்மை. ஆனால் சில ஜோதிடர்கள் சரியாகக் கணிக்காமல் தப்பு செய்துவிடுவது சகஜம்தானே.  அப்படி இந்த வீட்டின் வாஸ்து தவறாகக் கணிக்கப்பட்டுவிட்டதாக அந்தக் குருக்கள் சொன்னார்…’’

’’ஜோதிடம் உண்மையான கணக்கு என்றால், யார் அந்தக் கணக்கைப் போட்டாலும் சரியான விடை மட்டுமே வரவேண்டும். ஆளுக்கொரு விடை வருகிறது என்றால்…? அது கணிதமும் அல்ல, உண்மையும் அல்ல. உன்னுடைய பழைய வீடு கட்டி எத்தனை வருடங்கள் ஆகிறது… அதை வாஸ்து பார்த்துக் கட்டினீர்களா?’’

‘‘அது எப்படியும் இருபது வருஷத்துக்கு மேல இருக்கும், அப்போ வாஸ்து எல்லாம் பார்க்கலையே…’’ என்றார்.

’’ஏன்?’’

’’அப்ப வாஸ்து பத்தி எனக்கு எதுவுமே தெரியாது சாமி…’’

’’உண்மைதான்… அப்போது உன்னிடம் நிறைய பணம் இருக்கவில்லை, மேலும் வாஸ்து என்பதும் ஒரு தொழிலாக வளர்ந்திருக்கவில்லை. வீடு கட்டும்போது பூமி வலுவாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். காற்றோட்டம், தண்ணீர், வாகனங்கள் நிறுத்த இடம், புழங்குவதற்கு தாராள இடம், பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே போதுமானது. எந்த ஒரு வீட்டையும் திசைகள் கட்டுப்படுத்தாது.

உன் வீட்டின் மேற்குச் சுவர் என்பது அண்டை வீட்டுக்காரனுக்கு கிழக்குச் சுவராக இருக்கிறது. ஒரே சுவர் உனக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பதாகவும், அண்டை வீட்டுக்காரனுக்கு கெடுதல் செய்வதாகவும் எப்படி இருக்கமுடியும்?’’

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ராஜரத்னம், ‘‘அப்படின்னா பரிகாரம் மட்டும் செஞ்சா போதுமா?’’ என்று இழுத்தார்.

’’வாஸ்து என்பது வீடு கட்டும் முன்னர் நீ ஜோதிடனை நம்புவதற்காகத் தரும் விலை. வாஸ்து பரிகாரங்கள் மேலும் சில ஜோதிடர்களின் வாழும் கலை. சிரிக்கும் புத்தரோ, அதிர்ஷ்ட மீன்களோ, தண்ணீர் பூக்களோ ஏன் திசைகளோகூட உன் வாழ்வைத் தீர்மானிக்க முடியாது. இவற்றால் கடைக்காரனுக்கு லாபம் வரலாம், உங்களுக்கும் ஒரு பொய்யான நிம்மதி கிடைக்கலாம்… அவ்வளவுதான்’’ என்றேன்.

’’ஆனா… இந்த வீட்டுக்கு வந்தபிறகுதானே…’’ என்று லேசாக இழுத்தார்.

’’நீண்ட காலமாக திருமணம் முடியாதவர்கள் நாலைந்து வருடமாக ஒவ்வொரு திருத்தலமாக போய் பரிகாரம் செய்து வருவார்கள். ஏதாவது ஒரு திருத்தலம் சென்று வந்த நேரத்தில் திருமணம் முடிவாகும். உடனே, ‘எல்லாம் அந்த குறிப்பிட்ட திருத்தல மகிமைதான்’ என்பார்கள். அப்படியென்றால் அதுவரை அவர்கள் சென்று வந்த அத்தனை திருத்தலங்களும் மகிமை இல்லாதவையா? நடக்க வேண்டியவை அதனதன் நேரத்தில் நடந்து கொண்டே இருக்கும். உன் குடும்பத்தாரின் உடல்நிலை, வியாபாரம் போன்றவற்றை இந்த வீட்டோடு முடிச்சுப் போடாதே… ஆனாலும் உனக்கு திருப்தி கிடைக்கவேண்டும் என்றால், 21 நாட்கள் இரவு படுக்கப்போகும் நேரத்தில், வீட்டின் நான்கு மூலைகளிலும் கற்பூரம் ஏற்றி வை. தீய சக்திகள் எதுவும் உள்ளே நுழையவே முடியாது’’ என்றேன். இந்த எளிய பரிகாரம் ராஜரத்னத்துக்கு மிகுந்த திருப்தியை கொடுத்தது அவரது கண்களில் தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *