வானத்தில் மேகத்தின் ஊர்வலத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்து நின்றார் மகேந்திரன். அவரிடம் மிகப்பெரிய கேள்வி ஒன்று இருப்பது அவரது கண்களில் தெரிந்தது. கண்களால் அனுமதி கொடுத்ததும் கேட்டார்.

‘’வேகமாக பயணிக்க ஏரோப்ளேன், சொகுசாக தூங்குவதற்கு ஏசி என மனிதன் வாழ்க்கையை சுலபமாக்க எத்தனையோ விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. ஆனால், மனம் நிம்மதி அடைவதற்கு சரியான கருவியை அல்லது வழியை யாரும் கண்டுபிடிக்கவில்லையே ஏன்..? அப்படியொன்றை கண்டுபிடித்துவிட்டால், இந்த உலகில் யாரும் துன்பம் அடைய வேண்டியதில்லையே..?”

‘’இந்த உலகில் எல்லோருடைய உடல் தேவையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பசியை தீர்ப்பதற்கும், பயணம் செய்வதற்கும் எல்லோருக்கும் பொதுவாக ஒன்றை கண்டுபிடிப்பதே போதுமானது. இன்னும் சொல்லப்போனால் நோயைக் குணப்படுத்தவும் பொதுவான மருந்து இருக்கிறது.

அதேபோன்று மனதை நிம்மதியடையச் செய்வதற்கும் ஒன்றை மனிதன் எப்போதோ கண்டுபிடித்துவிட்டான். அதுதான் கோயில். அங்கு போனால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும், நிம்மதி வந்துவிடும் என்று நினைத்துத்தான் கோயிலைக் கண்டுபிடித்து உள்ளே கடவுளை வைத்தான். ஆனால், மனிதர்கள் கடவுளிடமும், கோயிலிலும் நிம்மதியைத் தேடாமல், அங்கிருக்கும் சாமியார் மீதும், பூஜைகள் மீதும் நம்பிக்கை வைத்தார்கள். அதனால்தான், சாதாரணமாக எளிதில் கிடைக்கவேண்டிய நிம்மதி அவனுக்குக் கிடைக்கவே இல்லை…’’

‘’உண்மையில் நிம்மதிக்கு எளிய தீர்வு கிடையாதா..?”

‘’இருக்கிறது. நேர்மையாக இரு. அதுதான் எப்போதும் நிம்மதி தரக்கூடியது. நேர்மையை இழப்பதுதான் ஆசைக்கும், துன்பத்துக்கும் காரணமாகிவிடும்…”

‘’அப்படியென்றால் கோயில்..?”

‘’உள்ளே கடவுள் இருக்கிறார் என்று சொன்னாலாவது நேர்மையாக இருப்பாய் என்ற நம்பிக்கையில்தான் கோயில் கட்டினார்கள். ஆனால், தரிசனத்துக்கே குறுக்குவழியில் செல்லும்போது நிம்மதி எப்படி கிடைக்கும்’’ என்று சிரித்தார் ஞானகுரு.

Leave a Reply

Your email address will not be published.