மலர்களை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் பின்னே வந்துநின்ற மகேந்திரன், ஒரு சந்தேகம் கேட்டார். ‘சுவாமி, எனக்குத் தெரிந்த நண்பர் கடினமான உழைப்பாளி. அவர் தொடங்கிய ஹோட்டல் மிகப்பெரிய வெற்றி கிடைத்துவிட்டது. அவரது கடுமையான உழைப்புக்கும், அனுபவத்திற்கும் கிடைத்த வெற்றி என்று நான் சந்தோஷப்பட்டேன். ஆனால் அவரோ, ‘எனக்கு கடவுளின் மிகப்பெரிய ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது என்று, ஒவ்வொரு கோயிலுக்கும் போய் எக்கச்சக்கமாக பணத்தை உண்டியலில் போட்டு வருகிறார்.. ஏன் இப்படி நடந்துகொள்கிறார்..?” என்று கேட்டார்.
‘’இந்த உலகத்தில் எல்லோருக்குமே வெற்றி கிடைக்கவேண்டும் என்ற ஆசையும், அதே நேரம் அதெல்லாம் கிடைத்துவிடாது என்ற அவநம்பிக்கையும் உண்டு. அவர்களுக்கு திடீர் வெற்றி கிடைக்கும்போது, இந்த வெற்றிக்கு நான் தகுதியானவனா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. இந்த வெற்றி நிலைக்காது என்ற பயம் வந்துவிடுகிறது. அதனால்தான், வெற்றியைத் தக்கவைக்க ஜோதிடம், கோயில் என்று விசித்திரமாக நடந்துகொள்கிறார்கள்.
சினிமா கலைஞர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும்தான் இப்படி எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகிறது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், தன்னுடைய உழைப்புக் கிடைத்த வெற்றி என்று நம்பாமல் இறைவன், குடும்பம் அல்லது டீம் ஆட்கள்தான் வெற்றிக்குக் காரணம் என்று அறிவிப்பார்கள். உண்மையில், அவர்தான் முழு காரணமாக இருப்பார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாத அச்சத்தில் இருப்பவர் மனநிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டால், இம்போஸ்டர் சிண்ட்ரோம் என்று சொல்லக்கூடும்.
அதாவது, மோசடியால் அல்லது அதிர்ஷ்டத்தால் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த உண்மை வெளியே தெரிந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில்தான் கோயில் கோயிலாக ஏறி இறங்குவார்கள்…’’
‘’இவர்கள் என்னதான் செய்யவேண்டும்?’’
‘’இந்த வெற்றிக்குக் காரணம் அவர்தான், இதனை அனுபவிக்கும் தகுதியும் அவருக்கு உண்டு என்பதை நம்ப வேண்டும். அவரது கனவு, அனுபவம், விடா முயற்சியாலே இந்த வெற்றி கிடைத்துள்ளது, இது தகுதிக்குக் கிடைத்ததுதான். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகில் எதுவும் காரணமின்றி கிடைப்பதில்லை என்பதை புரிந்துகொண்டு, கிடைத்த வெற்றியை ஆனந்தமாக அனுபவிக்க வேண்டும்’’ என்றார்.
‘’திடீர் வெற்றிக்கு கடவுளுக்கு நன்றி சொல்லலாம்தானே..?”
‘’அவரது நன்றிக்காக கடவுள் காத்திருக்கவில்லை… அது அவருக்குத் தேவையும் இல்லை’’ என்று தோட்டத்தில் நடை போட்டார் ஞானகுரு.