இடுப்பைப் பிடித்தபடி வந்து சேர்ந்தார் மகேந்திரன். அவருக்கு முதுகில் தாங்கமுடியாத வலி என்பதை அவரது முகக்குறிப்பு காட்டியது. அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தார் ஞானகுரு.

‘’சாமி… முதுகு வலிக்கு மருத்துவரைப் பார்த்தேன். சில உடற்பயிற்சிகள் சொல்லிக்கொடுத்து மருந்து கொடுத்தார். அவர் சொன்னபடி, நல்ல இலவம்பஞ்சு மெத்தையில், மருத்துவர் ஆலோசனைப்படி சிறிய உயரத்தில் தலையணை வைத்து படுக்கிறேன். ஆனாலும், முதுகு வலி குறையவே இல்லை..’’

‘’வேறு மருத்துவரைப் பார்த்தாயா..?’’

‘’நாலைந்து மருத்துவர்களைப் பார்த்துவிட்டேன். வெவ்வேறு மருந்துகள், வெவ்வேறு பயிற்சிகள். ஆனாலும் தீர்வுதான் இல்லை… இனி, சித்த மருத்துவம் பார்க்கலாமென்று நினைக்கிறேன்..’’

‘’எல்லா முயற்சிகளும் தோற்றுப்போன பிறகுதான் சித்த வைத்தியத்தில் தஞ்சம் அடைகிறார்கள் மனிதர்கள். நோய் முற்றியவர்களை காப்பாற்றும் சக்தி அந்த மூலிகைகளுக்கும் கிடையாது. சரி, ஒரு மாதம் இயற்கையுடன் இணைந்து படுத்துப் பார்க்கிறாயா..?’’

’’மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் படுக்க வேண்டுமா..?””

சிரித்தபடி தொடர்ந்தார் ஞானகுரு. ‘’கடைசியாக எப்போது தரையில் படுத்தாய் என்று யோசித்துப் பார். அதுதான் உறங்குவதற்கு இயற்கை காட்டும் வழி. ஆனால், இன்று கட்டாந்தரையில் படுப்பதற்கு மனிதனுக்குக் கொடுத்துவைக்கவில்லை. அதனால், ஒரு பாய் வாங்கி தரையில் விரித்துப் படு. தலையணைகளை தூரப் போடு. கை, கால்களை நீட்டி, உடல் எப்படியெல்லாம் வளைகிறதோ, அப்படியெல்லாம் படு. முதுகுத்தண்டுக்கு சீரான, கடினமான தரைதான் ஏற்றது. இப்படித்தான் உலகில் அத்தனை உயிரினங்களும் படுத்து உறங்குகின்றன. எந்த உயிரினமும் முதுகு வலிக்கு மருத்துவரிடம் செல்வதில்லை.

பாயில் படுக்கும்போது ரத்தவோட்டம் சீராக உடல் முழுவதும் செல்கிறது, உடல் உஷ்ணமும் குறைகிறது. இப்படி படுக்கவேண்டும் என்பதால்தான் முன்னோர் புதுமணத் தம்பதியருக்கு பாயை சீதனமாகக் கொடுத்தார்கள். செய்துபார், இதைவிட சிறந்த ஆசனம் வேறு எதுவும் இல்லை’’ என்றார் ஞானகுரு.

அடுத்த முயற்சிக்குத் தயாரானார் மகேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published.