கடவுளை கும்பிட்டு வந்து பூக்கூடையுடன் கோயில் பிராகரத்தில் வந்து அமர்ந்த பெண்ணுக்கு கிட்டத்தட்ட 40 வயது இருக்கலாம். முகம் நிறைய கவலை அப்பிக்கிடந்தது.
‘’கடவுளிடம் சொன்ன கவலையை என்னிடமும் பகிர்ந்துகொள் பெண்ணே..’’ அருகிலிருந்த ஞானகுரு கேட்டதும், சட்டென திரும்பினாள். முகம் தெரியாத மனிதரிடம் மனதில் இருப்பதை பகிர்வது தவறில்லை என்று நினைத்தோ என்னவோ கண்களில் நீருடன் மளமளவென பேசத் தொடங்கினாள்.
‘’சாமி, எனக்கு ஒரே பெண். கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் அவள் மீது, என் உயிரைவிட அதிகம் பாசம் வைத்திருக்கிறேன். நேற்று அவளுடைய தோழிகளுடன் இரவு 2 மணி வரையிலும் பேசிக்கொண்டு இருந்தாள். அத்தனை நேரம் விழித்திருக்காதே என்று சொன்னதும், ‘நான் என்ன செய்தாலும் குறை கண்டுபிடிப்பதும், ஒட்டு கேட்பதும்தான் உன் வேலையா? எங்காவது போய் செத்துத்தொலை’ என்று என்று கத்துகிறாள். நான் அதிர்ந்துவிட்டேன். அவள் என்னை ஏன் எதிரியாகப் பார்க்கிறாள். தவறாக பேசியதற்காக அவள் வருந்தவில்லை. இன்று கல்லூரி விட்டு வந்தபிறகும் என்னை மதிக்கவே இல்லை, நான் எப்படி அவளை சமாளிப்பது” என்று சொல்லி முடிக்கும் முன்பு கண்ணீர் தாரைதாரையாக வடிந்திருந்தது.
‘’பதின்ம வயதுகளில் ஆண், பெண் பிள்ளைகளிடம் பாம்புக்குணம் நிரம்பியிருக்கும். அதனால் விஷம் கக்குவதும், கொட்டுவதும் சகஜம்தான். மின்னல் வேகத்தில் செல்லும் அவர்களை நேரடியாக தடுத்து நிறுத்த முயன்றால் விபத்துதான் ஏற்படும். அதனால், அவர்கள் நம்பும் வகையில் ஏதேனும் கதையை சொல்லித்தான் நல்வழியில் திருப்பமுடியும்…’’
‘’அதெப்படி?”
‘’சாதாரணமாக உன்னிடம் யாரேனும் வந்து கற்கண்டு கொடுத்தால் வாங்கமாட்டாய். அதையே, கடவுள் பிரசாதம் என்று சொன்னால் உடனே வாங்கி வாயில் போட்டுக்கொள்வாய். அப்படி, உன் மகள் நம்பும் அளவுக்கு ஒருகதையை சொல். இரவு நீண்ட நேரம் மகள் விழித்திருந்தால் அதை குறை சொல்லாதே. காலையில் எழுந்துவருபவளிடம், ‘ஏன் உன் முகம் இப்படி கருத்துப் போயிருக்கு… சரியா தூங்கலையா.? முகத்துல கருப்புப்புள்ளி வர்ற மாதிரி தெரியுதே… என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகிவிடு. உன்னைப் போலவே உன் கணவனையும், வீட்டில் மற்றவர்களையும் சொல்லும்படி செய். சீக்கிரம் தூங்கி, எழுந்துவந்தால், அடேங்கப்பா…. முகம் டியூப் லைட் மாதிரி பிரைட்டா இருக்குதே என்று முத்தம் கொடு. அவளுக்கே என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துவிடும். அதேபோன்று அவள் நன்றாக சாப்பிடவும், நன்றாக படிக்கவும் நம்பும் வகையில் பல பொய்கள் சொல். இந்த பொய்கள் அவளுக்கு எத்தனை தேவையாக இருந்தது என்பதை பின்னே அவள் உணர்ந்துகொள்வாள்’’ என்று அமைதியானார் ஞானகுரு.
இப்போது, அந்த தாயின் முகத்தில் பிரகாசம் வந்திருந்தது.