எந்த உற்சாகமும் இல்லாமல் வந்துசேர்ந்தார் மகேந்திரன். ‘’பரிசோதனை செய்துவிட்டேன். உடலில் எந்த நோயும் இல்லை. நன்றாகவே சாப்பிடுகிறேன். தூக்கமும் வருகிறது. ஆனால், நீண்ட நாளாகவே காரணமின்றி வலிக்கிறது… நான் என்ன செய்வது? முன் ஜென்மத்து வினைதான் காரணமாக?” என்று கேட்டார்.

‘’கேள்வியைக் கேட்டு, நீயே ஒரு பதிலும் வைத்திருக்கிறாய். பிறகு என்ன, அப்படியே வலியை ஏற்றுக்கொள்…’’ என்று ஞானகுரு சிரித்ததும், சட்டென்று தன் தவறை உணர்ந்தார்.

‘’மன்னிக்கணும் சாமி. முன் ஜென்மம், மறு ஜென்மத்தை நீங்க மதிக்க மாட்டீங்க. நான் வலியில் என்ன பேசுறேன்னுகூட தெரியலை, முதுகு, தசை, எலும்புன்னு  எல்லாமே வலிக்குது..’’

‘’காரணமின்றி வலித்தால், அதை சூரிய பகவானிடம்தான் சொல்ல வேண்டும். கடைசியாக எப்போது சூரியனை தரிசித்தாய்..?”

‘’வீட்டு வாசலில் கார். அலுவலகத்திற்கு காரில் போகிறேன். அலுவலகம் முழுவதும் ஏசி. இருட்டிய பிறகே வீட்டுக்கு வருகிறேன். சூரியனை ஞாயிற்றுக் கிழமை ஜன்னல் வழியே பார்த்தால்தான் உண்டு. எங்கேனும் வெளியூர் பயணம் சென்றபோது கொஞ்சநேரம் வெயிலில் நடந்திருக்கலாம்…’’ என்று முடித்தார்.

‘’இனி, நீ அலுவலகத்துக்கு வெயிலில் நடந்துசெல். அதுதான் உனக்கான மருத்துவம். வைட்டமின் டி பற்றாக்குறை மட்டும்தான் உடலின் அத்தனை அவயங்களுக்கும் வலி கொடுக்கக்கூடியது. உனக்கு ஓர் உண்மை தெரியுமா? பழங்களாலும், காய்களாலும், தானியங்களாலும் கொடுக்க முடியாத டி வைட்டமின் சூரியனில் மட்டும்தான் இருக்கிறது. அது, உன் தோலில் இருந்துதான் உற்பத்தியாக வேண்டும்.

அதனால் தினமும் நீ வெயிலில் நடக்க வேண்டும். அப்போதுதான் வைட்டமின் டி மூலம் உடல் முழுவதும் சூரியன் செல்லும். சூரிய வெப்பம் இல்லையென்றால் தசையில் பிடிப்பு, நரம்பு மண்டலத்தில் எரிச்சல், எலும்புகளில் பலவீனம் உருவாகும். ஆனால், இவற்றை நீ பரிசோதனை மூலம் எளிதில் கண்டறிய முடியாது. அதனால் வலி தீரவேண்டுமென்றால், தினமும் 10 நிமிடம் வெயிலில் நில்’’ என்றபடி வெயிலில் நடை போட்டார் ஞானகுரு.

கையில் இருந்த மொபைலில் வேகவேகமாக கூகுள் செய்துபார்த்த மகேந்திரன், சூரிய ஒளி பற்றி ஞானகுரு சொன்னது அப்படியே உண்மை என்று அறிந்து ஆச்சர்யத்தில் நின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *