பளீச்சென இருக்கும் இளைஞன் ஒருவனை அழைத்துவந்தார் மகேந்திரன். ‘’சுவாமி, இந்த இளைஞன் எனக்குத் தெரிந்தவன். மிகவும் புத்திசாலி. இந்த வயதிலேயே மிகப்பெரிய சம்பளம் வாங்குகிறான். ஆனால், படுத்தவுடன் தூக்கம் வராமல் அவஸ்தைப்படுகிறான். மாத்திரைகள் போடுவதற்கு அச்சப்படுவதால், உங்களிடம் அழைத்துவந்தேன்’’ என்றார்.
‘’உயிரியல் கடிகாரம் கேள்விப்பட்டிருக்கிறாயா மகனே..?” இளைஞனிடம் கேட்டார் ஞானகுரு.
‘’அப்படியொரு கடிகாரமா, எங்கே விற்பனையாகிறது?”
‘சுவாசம், உணவுக்கு அடுத்து மனிதனுக்கு அவசியத் தேவை தூக்கம். வாழ்வின் மூன்றில் ஒரு பகுதி நேரம் தூங்கித்தான் கழிக்க வேண்டும் என்பதை சொல்வதுதான் உடல் கடிகாரம். எந்த நேரம் விழித்திருக்க வேண்டும், எந்த நேரம் தூங்க வேண்டும் என்ற கணக்கு உடலுக்கு உண்டு. போதுமான அளவு தூங்கவில்லை என்றால், ரத்த நோய், சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவற்றுடன் மன நோயும் ஏற்படலாம்.
உடல் இயக்கம் சிறப்பாக அமைவதற்கு மெலட்டோனின் ஹார்மோன் அவசியம். இது பகலில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் சுரக்கும். இன்று பெரும்பாலான இளைஞர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து வேலை செய்வதாலும், தொலைக்காட்சி, செல்போனில் மூழ்கிக் கிடப்பதாலும் மெலட்டோனின் குறைவாகவே சுரக்கிறது. அதனால்தான் உடலில் சக்தி குறைந்து, பல்வேறு உடல்நல பிரச்னைகளும் ஏற்படுகிறது. நல்ல உறக்கம் வேண்டும் என்றால், இரவு எட்டு மணிக்குப் பிறகு மின்சாரம் பயன்படுத்துவதை நிறுத்து. ஆம், செயற்கை வெளிச்சம்தான் உறக்கத்திற்கு எதிரி. மரம், செடி, கொடிகள், விலங்குகள், பறவைகள் போன்று இரவை அனுபவித்துப் பார்… பகலில் நீ இரண்டு மடங்கு உற்சாகத்துடன் வேலை செய்ய முடியும்…’’
‘’ஆனால், எங்கள் வேலையே இரவுதானே, அதை எப்படி நான் மறுக்க முடியும்..?”
‘மெத்தை வாங்குவதற்காக நீ சம்பாதித்து தூக்கத்தை இழக்கப் போகிறாய். நிறைய பணம் சம்பாதித்து மருத்துவரிடம் கொடுத்து, வாழ்நாள் முழுவதும் நோயாளியாக இருக்கப் போகிறாயா அல்லது நிம்மதியாக உறங்கி ஆரோக்கியமாக வாழப் போகிறாயா என்பது உன் கையில் இருக்கிறது’’ என்றார் ஞானகுரு.
குழப்பத்தில் ஆழ்ந்தான் இளைஞன்.