மனிதர்களில் பெரும்பாலோருக்கு உடலும் மனமும் கெட்டுப்போவதற்கு மிகவும் முக்கியமான காரணம் என்ன தெரியுமா? தன்னால் எதுவுமே செய்யமுடியாத விஷயங்களைக்கூட, அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இல்லாததுதான். இதற்கும் உடல் கெடுவதற்கும் என்ன காரணம் இருக்கமுடியும்? இந்தக் கதையில் ஒருவேளை விடை கிடைக்கலாம்.

ரோஸி கடுமையான படிப்பாளி. பரிட்சை வருகிறது என்றால் இரவும் பகலுமாக படிப்பாள். சோறு, தண்ணீர் எல்லாம் அவளுக்கு இரண்டாம் பட்சம்தான். பரிட்சை நேரங்களில் யாரும் தன்னுடன் பேசுவதையும், விளையாடுவதையும் விரும்பமாட்டாள். ஆனாலும் வழக்கமாக அவளுடைய உழைப்புக்கு ஏற்ப மதிப்பெண்கள் கிடைப்பதில்லை. 70 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் மதிப்பெண்கள் மட்டுமே வாங்கிவந்தாள். அவளைப் பொறுத்தவரை அப்படி எடுப்பதே சாதனை என்று எடுத்துக்கொண்டாள்.

கல்லூரியில் இதுவரை நடந்த அனைத்து செமஸ்டர்களிலும் எல்லா பாடங்களிலும் பாஸ் ஆகிவிட்டாள். கடைசி செமஸ்டர், கடைசி பரிட்சை மட்டுமே மிச்சம் இருந்தது. இன்னும் ஒரே பரிட்சையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பு முடியப்போகிறது என்ற சந்தோஷமும், நிறைவும் அவளுக்கு வந்துவிட்டது. அதனால் கடைசி பரிட்சைக்கு நன்றாக படிப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தாலும், அவளை மீறி மனம் என்னமோ குதூகலத்திற்குத்தான் சென்றது. எப்படியோ படித்துமுடித்து பரிட்சைக்குப் போனாள்.

கேள்வித்தாளை பார்த்ததும் ஒரு கணம் ஆடிப்போய்விட்டாள். அனைத்து கேள்விகளும் எங்கேயோ படித்த மாதிரியும் இருந்தது, படிக்காத மாதிரியும் இருந்தது. மிகவும் கலங்கிப்போனவள் இருப்பதிலேயே தனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு கேள்வியைத் தேர்வு செய்து முதல் பதிலாக நன்றாக எழுதிவைத்தாள். அதற்குப் பின் மற்ற கேள்விகளுக்கு ஓரளவு சுமாராக பதில் எழுதிவைத்தாள். வழக்கம்போல் 70 மதிப்பெண் கிடைக்காது என்றாலும் 50 முதல் 60 மட்டும்தான் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டாள்.

பரிட்சை எழுதிவிட்டு ஹாலைவிட்டு வெளியே வந்தாள் ரோஸி. தன்னுடைய தோழியைப் பார்த்து ஒரே ஒரு கேள்விக்கு மட்டும்தான் நன்றாக பதில் தெரிந்தது என்று முதல் கேள்வியையும் தான் எழுதிய பதிலையும் சொன்னாள்.

நீ தவறான பதிலை எழுதியிருக்கிறாய் என்று தோழி விளக்கமாக எடுத்துச்சொன்ன பிறகுதான் அவளுக்கு தான் செய்த தவறு புரிந்தது. தேவை இல்லாமல் முதல் கேள்விக்கு மிகவும் அழுத்தம் கொடுத்து, மிகவும் விரிவாக தவறான பதிலை எழுதிவிட்டோமே என்று நொந்து போய்விட்டாள். தான் இந்தப் பரிட்சையில் நிச்சயம் ஃபெயில் ஆகிவிடுவோம் என்ற பயத்தில் வேதனைப்பட தொடங்கினாள். வீட்டில் பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவரிடமும் தன்னுடைய சோகத்தை சொன்னாள்.

முதல் கேள்வி தவறாக இருந்தாலும் பரவாயில்லை, மற்ற கேள்விகளுக்கு நீ எழுதியிருக்கும் பதிலைப் பார்த்து சரியாகவே மதிப்பெண் போடுவார்கள். அதனால் கவலை இல்லாமல் இரு, நீ தோல்வியடைய வாய்ப்பு இல்லை என்று எத்தனையோ பேர் எடுத்துச்சொன்னாலும் நான்ஸியின் மனம் சமாதானம் அடையவில்லை. இரவும் பகலும் எழுதிமுடித்த பரிட்சை பற்றிய கவலையிலே இருந்தாள். இதுவரை வாழ்வில் ஒரு முறைகூட தோல்வி அடைந்ததில்லை, இந்த பரிட்சையில் தோல்வி அடைந்தால் அவமானமாகிவிடும் என்று அச்சப்பட்டாள்.

தோழிகள் அனைவரும் விடுமுறையில் சந்தோஷமாக, ஜாலியாக பொழுது போக்கிக்கொண்டிருக்க தனியறையில் அடைந்து சோகத்தில் மூழ்கிக்கிடந்தாள் நான்ஸி. யார் யார் சமாதானம் சொன்னாலும் எடுபடவில்லை. பரிட்சை ரிசல்ட் வரும் நாள் வந்தது. எப்படிப்பட்ட ரிசல்ட் வந்தாலும் கவலையில்லை என்று வீட்டினர் சமாதானப்படுத்தினார்கள். சமாதானம் ஆனவள் போல் படுக்கச்சென்ற நான்ஸி, அன்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். அடுத்த நாள் வந்த பரிட்சை முடிவில் வழக்கம்போல் 72 மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள் நான்ஸி. அதைப் பார்க்கத்தான் அவள் உயிருடன் இல்லை.

பரிட்சை எழுதுவது வரை மட்டுமே தன்னுடைய பணி. அதன் முடிவு எப்படியிருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நான்ஸிக்கு இல்லாததும், முடிவுக்கு காத்திருக்கும் பொறுமை இல்லாததும்தான் நான்ஸியின் மரணத்துக்குக் காரணம். நான்ஸியின் மரணத்தால் அவளது பெற்றோர் நொறுங்கிபோனார்கள் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. இப்படித்தான் பெரும்பாலான மனிதர்கள் தன்னை மீறிய விஷயங்களுக்கு எல்லாம் கவலைப்பட்டு, தேவையற்ற துன்பத்தை வாங்கிக்கொள்கிறார்கள்.

  • இதுபோல் கவலைப்படுபவர்கள் சிறிய சதவிகிதம்தானே?

மரணம் வரை செல்லும் நபர்கள் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம், ஆனால் 99 சதவிகிதம் பேர் தேவையற்ற சாதாரண விஷயங்களுக்குத்தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். சந்தோஷமாக பொழுதுபோகவேண்டும் என்று சினிமா தியேட்டருக்கு சென்றால், அங்கேயும் இன்பமாக இருப்பதில்லை. தியேட்டருக்கு சென்றதும், இன்னமும் அரங்கம் திறக்கவில்லையே என்று கவலைப்படுவார்கள். அரங்கத்தை திறந்து இருக்கையில் அமர்ந்ததும், இன்னமும் படம் போடவில்லையே என்று கவலைப்படுவார்கள். தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் ஏதோ பெரிய வேதனையில் இருப்பதுபோல் நெளிவார்கள். விளம்பரப் படங்கள் போட்டால் எரிச்சல் அடைவார்கள். அக்கம்பக்கத்தில் யாராவது பேசினால் கோபமாவார்கள். இவர்களது கவலைக்கும் கோபத்துக்கும் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்வதே இல்லை. இதில் எந்த ஒரு விஷயமும் அவர்கள் கையில் இல்லை என்பதும் தெரிவதில்லை.

  • இதுபோன்ற நேரத்தில் என்ன செய்யவேண்டும்?

ரயிலுக்காக காத்திருக்கிறீர்கள். தாமதமாக வரும் என தெரியவருகிறது. உங்களால் அங்கே எதுவும் செய்யமுடியாது என்ற உண்மை புரியவேண்டும். இன்னமும் ரயில் வரவில்லையே என்று கடிகாரம் பார்த்துப்பார்த்து டென்ஷன் ஆவதைவிடுத்து, இன்று கூடுதலாக கொஞ்சநேரம் பிளாட்ஃபாரத்தில் இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று ரசித்துப் பார்.

ஊரில் இருந்து வீட்டுக்கு வரும் உறவினர் பஸ் ஏறிவிட்டதாக போன் செய்து ஒரு மணி நேரம் ஆனதால், ரோட்டிற்கும் வீட்டுக்கும் அலைவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ரோடு வரை வந்தவர் நிச்சயம் வீட்டுக்கும் வரத்தான் செய்வார். அந்த நேரத்தில் உறவினருக்குத் தேவையான எதையாவது தயார் செய்துவைக்கலாமா என்று யோசிக்க வேண்டுமே தவிர, வீணாக டென்ஷன் ஆவதில் பிரயோஜனமில்லை. மூன்றாம் மாடியில் இருந்து முதல் மாடிக்கு லிஃப்ட் வருவதற்குள் முப்பது முறை பட்டனை அழுத்தும் ஆசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு முறை அழுத்தினாலும் முப்பது முறை அழுத்தினாலும் விளைவு ஒன்றுதானே… காத்திருக்கும் பொறுமை இல்லையென்றால் மனம் எரிச்சல் அடையும். மனம் குப்பையாகும்போது ஜீரண சக்தி குளறுபடியாகும். ஜீரணம் சிக்கலானால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படவே செய்யும்.

  • அப்படியென்றால் எப்படிப்பட்ட மனநிலையில் காத்திருக்க வேண்டும்?

காத்திருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாதவண்ணம் ஒரு நல்ல அனுபவத்திற்காக மட்டுமே காத்திருக்க வேண்டும். ஏனென்றால் காத்திருக்கிறோம் என்ற எண்ணமே தீவிரமான மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். உன்னால் எதுவும் செய்யமுடியாத நேரத்தில் அமைதியாக வேடிக்கை பார், வாழ்க்கை சுவாரஸ்யமாகிவிடும். எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் ஏகாந்த நிலையை மனம் பெற்றுவிடும். அதனால் காத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *