மனிதனைவிட மிகக்கொடூரமான மிருகம் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு எஜமானாக எண்ணிக்கொள்கிறான். இந்த உலகமும், இயற்கை வளங்களும், பிற உயிர்களும் தனக்கு அடிமை சேவகம் செய்வதற்கு படைக்கப்பட்டதாக எண்ணுகிறான். தன்னுடைய நலனுக்காக எந்த ஓர் எல்லைக்குச் செல்வதற்கும் தயாராக இருக்கிறான். இதற்கு உதாரணமாக சுகந்தியை சொல்லலாம்.

தன்னுடைய தோழி வளர்ப்பதுபோல் தனக்கும் ஒரு டாபர்மன் நாய்க்குட்டி வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கினாள் சுகந்தி. கல்லூரி படிப்பைவிட நாய் வளர்ப்பு அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதற்கு எப்படி உணவு ஊட்டவேண்டும், எப்படி பழக்கவேண்டும் என்று இணையங்களில் தேடிக் கண்டுபிடித்து முழுநேரமும் அதனுடன் தன் நேரத்தை செலவழித்தாள். தான் சொல்லும் இடத்தில் உட்காரவும், சொல்லும்போது சாப்பிடவும் அதனை மிகவும் சிறப்பாக பழக்கிவைத்தாள். உணவுக்கும் ஊட்டச்சத்துக்கும், மருந்துகளுக்காகவும் தண்ணீராக பணத்தை செலவழித்தாள். வீட்டுக்குவந்த ஒவ்வொரு நபரும் சுகந்தியின் திறமையைப் பாராட்டினார்கள். அதனால் நாயை இன்னமும் சிறப்பாக பழக்கினாள். நாய்களுக்கான போட்டி நடந்தால், அங்கே அழைத்துச்சென்று வெற்றிபெறுவதற்கு முயற்சி செய்தாள்.

இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு சோகம் நிகழ்ந்தது. ஆம், அவள் ஆசை ஆசையாக வளர்த்த நாய்க்கு திடீரென ஏதோ தொற்றுநோய் ஏற்பட்டது. எவ்வளவோ வைத்தியம் செய்தபிறகும் அவளால் அந்த நாயை காப்பாற்ற முடியவில்லை. இரவும் பகலுமாக அழுது தீர்த்தாள். எந்த நேரமும் நாய் பற்றிய நினைப்பில் இருந்த சுகந்தியைத் தேற்றுவதற்கு வழி தெரியாமல் கவலைப்பட்ட பெற்றோர், ஒருவழியாக புது வழியை கண்டுபிடித்தார்கள். ஆம், அவள் ஏற்கெனவே வைத்திருந்ததைப் போலவே டாபர்மேன் நாய் இனத்தைச் சேர்ந்த இரண்டு குட்டிகளை வாங்கி அவளிடம் ஒப்படைத்தார்கள். அதுவரை இருந்த சோகத்தில் இருந்து மீண்ட சுகந்தி, மீண்டும் அந்த நாய்களை பராமரிப்பதற்கு முழு கவனத்தையும் செலுத்தியதால், விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டாள்.

மேலோட்டமாக பார்க்கும்போது சுகந்தியின் கதையானது அழகான பாசக் கவிதை போல் தோற்றமளிக்கும். ஆனால் உண்மையில் இது கொடூரமான அடிமைப்படுத்தும் புத்தியின் மிச்சம் என்பதுதான் உண்மை. இன்று பிற உயிர்களை வதைக்கும் மனிதன் முன்பு மனிதனை அடிமைப்படுத்தி ஆதாயம் அடைவதற்குத்தான் அதிக முன்னுரிமை கொடுத்தான்.  

ஆப்பிரிக்க மனிதர்களை ஆயுதமுனையில் பிடித்து, அமெரிக்காவில் ஏலம் போட்டு விற்பனை செய்திருக்கிறான். அடிமைகளின் கடுமையான உழைப்பினால் முன்னேறிய அமெரிக்க நாடுதான் இன்று மனித உரிமைகள் பற்றி உலகிற்கே பாடம் நடத்துகிறது.

விலை கொடுத்து வாங்கிய அடிமைகளை பகடை காய்களாக பயன்படுத்தி நடத்தப்படும் சதுரங்க விளையாட்டு வெளிநாடுகளில் மிக பிரபலம். ஒரு காய் வெட்டப்படும் நகர்த்தலில், மனசாட்சி இல்லாமல் அடிமையின் தலை வெட்டப்படும். மக்களுக்கு பொழுது போவதற்காக ஊருக்கு நடுவே மைதானம் கட்டி, அதற்குள் அடிமைகளை மரணம் வரையிலும் மோதவிடும் கொடூரமும் நடந்தது.  நம்மூரில் சேவல்களை மோதவிடுவது போல், வெளிநாட்டினர் அடிமைகளை வைத்து கொடூர விளையாட்டு நடத்தி, அதில் இன்பம் கண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.

இந்த கொடூரங்கள் எல்லாம் வெளிநாடுகளில் மட்டும்தான், நாமெல்லாம் நாகரிக வளர்ச்சி அடைந்தவர்கள் என்று நினைக்கவேண்டாம். கொடூரங்களில் எவனுக்கும் குறைந்தவனில்லை நம் தமிழன். அதுவும் தமிழ் நாகரிகத்தின் உச்சகட்டம் என்று சொல்லப்படும் சோழர் காலத்திலும் அடிமை முறை கொடிகட்டி பறந்திருக்கிறது.

ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ஆண், பெண்ணை விலை கொடுத்து வாங்கி, கோயில், மடம், தர்மசாலைகளுக்கு தானமாக கொடுத்துவிடுவார்கள். அங்கே அவர்கள் இரவும் பகலும் ரத்த வியர்வை சிந்தி வேலை பார்க்கவேண்டும். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அடிமைகளாக பிறந்து அடிமைகளாகத்தான் மடிவார்கள். இந்த அடிமைகள் தப்பிக்கக்கூடாது என்பதற்காக, உடலில் சூடு போட்டு முத்திரை பதிப்பது தமிழனின் வழக்கம். அடிமைப் பெண்களை உடல் ரீதியிலும் எவரும் சொந்தம் கொண்டாடலாம் என்பதுதான் நம் தமிழனின் நாகரிக சிந்தனை.

இந்த 21ம் நூற்றாண்டிலும் கடன் வாங்கியவனின் மனைவியை அடமானமாக பிடித்துக்கொள்ளும் மனிதர்கள் நம்மிடம் உலா வரவே செய்கிறார்கள். உடல் உழைப்பு தேவைப்படும் முறுக்குக் கடை தொடங்கி காளவாசல் வரையிலும் மனித அடிமைகள்தான் வேலை பார்க்கிறார்கள். பெண்களை சதை வியாபாரத்துக்காக கடத்தி அடிமைப்படுத்தும் கும்பல் இருக்கவே செய்கிறது. ஏன் இன்று அரசியலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கும் அடிமைகளையும், வானத்தைப் பார்த்து, வாகனங்களைப் பார்த்து கும்பிடும் அடிமைகளையும் ரசிக்கும் தலைமை இருக்கிறது. பொதுவாகவே இன்று மனிதர்கள் சுதந்திரத்திற்காக போராடும் மனநிலையை மறந்து, அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடப்பதை சுகமாக நினைக்கிறார்கள். அடிமைப்படுத்த ஒரு கூட்டம் ஆசைப்படுகிறது, அடிமையாக இருக்கவும் ஒரு கூட்டம் ஆசைப்படுகிறது. அடிமைகள் தனக்குக் கீழ் சில அடிமைகளை கொடுமைப்படுத்துவதுதான் வேடிக்கை.

  • அப்படியானால் எந்த மனிதனுக்கும் சுதந்திர எண்ணம் இல்லையா?

ஸ்பார்டகஸ் வாழ்க்கையை படித்திருப்பீர்கள். அடிமை வீரனாக இருக்க விரும்பாமல், சக அடிமைகளுடன் தப்பியவன். அடிமை சங்கிலிகளை தகர்த்து எறியும் போராட்டத்தில் முழுமூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவன். இன்றும் அடிமைகளின் விடுதலை என்றால் ஸ்பார்டகஸ் பெயரைத்தான் உலகம் உச்சரிக்கிறது. உண்மை என்னவென்றால் ஸ்பார்டகஸ் அடிமைகளின் தலைவன், அவ்வளவுதான்.

  • அடிமை எண்ணத்தை மாற்றவே முடியாதா?

தான் அடிமையாக இல்லையென்றால் பிறரை அடிமைப்படுத்த நினைக்கிறான். மனிதனை அடிமைப்படுத்த முடியவில்லை என்றால் விலங்கு, பறவைகளை வளர்த்து அடிமையாக நடத்துகிறான். அதற்கும் வழியில்லை என்றால் தன்னுடைய மனைவி, குழந்தைகளை அடிமைகளாக மாற்றுகிறான். மனிதன் மட்டுமின்றி ஒவ்வொரு உயிரும் தனித்தன்மை வாய்ந்தது, பிறருடைய வாழ்க்கையில் தலையிடவும் முடிவு செய்யவும் தனக்கு உரிமை இல்லை என்பதை மனிதன் உணரும்போதுதான் அடிமை எண்ணம் மாறும்.

  • உடனடியாக மாற்றவேண்டிய அடிமைத்தனம் எது?

கோயில் யானைகள். காட்டில் தன்னிஷ்டத்துக்கு சுற்றித்திரிய வேண்டிய பிரமாண்ட விலங்கு அது. நூறு கிலோவுக்கு மேல் இலை, தழை, கனிகளை தின்று வளரவேண்டிய யானைக்கு, சோற்று உருண்டை கொடுத்து பசியைக் கட்டுப்படுத்துகிறான் மனிதன். விசித்திர படைப்பான யானையை ரோட்டில் பிச்சையெடுக்க வைத்து காசுக்காக வாழ்த்தச் சொல்கிறார்கள். கோயில், வீடு போன்ற இடங்களில் வைத்து வளர்க்கவேண்டிய விலங்கு அல்ல யானை. பத்தடி அறைக்குள் மனிதன் அடைந்துகிடப்பதை போல் சின்ன கொட்டகைக்குள் யானையை கட்டிப்போட்டு வளர்ப்பது முட்டாள்தனம். யானை மட்டுமல்ல குதிரை, நாய், பூனை போன்ற எந்த ஒரு விலங்கையும் பறவையையும் வீட்டில் வளர்ப்பது அடிமைத்தனத்தின் மிச்சம்தான்.

  • காட்டில் யானைக்கு சரியான உணவு கிடைக்காதே.. நாம் வளர்ப்பதுதானே பாதுகாப்பு?

யானையைப் பற்றிய கவலை மனிதனுக்குத் தேவையில்லை. தன் வயிற்றுக்குத் தேவையான உணவை யானையால் தேடிக்கொள்ள முடியும்.  இப்படித்தான் காலம்காலமாக யானைகள் உயிர் வாழ்ந்து வந்திருக்கின்றன. அதனால் யானை, நாய் போன்ற உயிரினங்களை காப்பாற்றப் பிறந்தவன் என்ற எண்ணம் எந்த மனிதனுக்கும் தேவையில்லை. வாழ்க்கையோ அல்லது மரணமோ அது கடைசிவரை இயல்பான வாழ்வாக இருக்கவேண்டுமே தவிர அடிமைத்தனமாக அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *