மருந்துகள் என்று மருத்துவர் கொடுப்பது எல்லாமே ஏமாற்றுவித்தைதான் என்று சொன்னதும் மருத்துவருக்கு முகம் மாறிப்போனது. நான் பேசுவதை அவர் ரசிக்கவில்லை என்பதும் நன்றாகவே தெரிந்தது.

ஆனாலும் நான் விடாமல், ‘‘நோய் தீர்ப்பதில் பத்து சதவிகிதம்கூட மருந்துகளுக்கு பங்கில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நோய் தீர்ப்பதில் முக்கியமானது பாதிக்கப்பட்டவரின் உடம்பும் மனதும்தான்.

அடுத்தது நோயாளி உட்கொள்ளும் உணவு. அது நோயை எதிர்ப்பதற்குத் தேவையான சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரும். இதற்கெல்லாம் நிகரானது பாதிக்கப்பட்டவருக்காக துடிக்கும் உறவுகளின் ஆறுதல். இந்தப் பட்டியலில் கடைசியாக இடம்தான் உங்கள் மருந்துகள்… மற்றும் உங்கள் மீது உள்ள நம்பிக்கை’’ என்று நான் சொல்லி முடிக்குமுன்னர், ’’அப்படின்னா மருந்து கொடுக்காமலே நோய் குணமாயிடும்னு சொல்றீங்களா?’’ என்று டாக்டர் கிண்டலுடன் கேட்டார்.

’’மருந்து சாப்பிடும் எல்லோருமே குணமடைந்து விடுவார்கள் என்று நீங்கள் உறுதியாகச் சொல்ல முடிந்தால், மருந்து எடுத்துக் கொள்ளாமலே அனைவரும் குணமடைய முடியும் என்று நானும் சொல்வேன்…’’ என்றேன்.  அடுத்த சில நிமிடங்கள் எங்கள் இருவருக்கும் இடையில் மௌனத்திரை ஒன்று விழுந்தது.

அந்தத் திரையை டாக்டரே விலக்கினார். ‘‘சுவாமி… நீங்க பேசுறதுக்கு அர்த்தம் என்ன? டாக்டர்கள் என்ன செய்யணும்னு சொல்றீங்க..?’’

’’மூளையில் இருந்து மட்டுமின்றி டாக்டர்களின் இதயத்திலிருந்தும் மருத்துவம் வரவேண்டும் என்கிறேன். தன்னலம் கருதா அன்னையைப் போல் அக்கறை காட்ட வேண்டும். ஒரு நோயாளி வந்ததும், அவனது குடும்ப சூழ்நிலை, வருமானம், வாழ்வு முறை போன்ற எதையும் கேட்காமல், உடல் அறிகுறிகளை மட்டும் கேட்டு அவசரஅவசரமாக மருந்து சீட்டு எழுதிக் கொடுக்கிறீர்கள். அதற்குப்பின் அவனுக்கு என்ன ஆனது என்பது பற்றி நீங்கள் கவலைப் படுவதில்லை…’’

’’நீங்க சொல்ற மாதிரிப் பார்த்தா, டாக்டர்கள் ஆசிரமம்தான் நடத்தணும் சுவாமி. நாங்க மருந்து கொடுத்தாலே நோய் குணமாகுது. அதனாலதான் நோயாளிகள் நம்பிக்கை வைச்சு, திரும்பத் திரும்ப வர்றாங்க..’’ என்றார்.

’’உங்களிடம் ஏன் திரும்பத் திரும்ப வரவேண்டும்?’’

நான் கேட்ட கேள்வியை நிதானமாக யோசித்தவர், ‘‘இதென்ன சுவாமி அபத்தமா கேக்குறீங்க… மறுபடியும் நோய் வர்றதால் என்கிட்ட வர்றாங்க…’’ என்று இழுத்தார்.

’’அப்படியென்றால் உங்களால் அவருடைய நோயைத் தீர்க்க முடியவில்லை என்றுதானே அர்த்தம். ஒரே ஒரு தலைமுடியைக் கூட மருத்துவத்தால் வளரவைக்க முடியாது என்பதுதானே உண்மை…’’ என்றேன்.

சின்ன யோசனைக்குப் பிறகு, ‘‘நீங்க சொல்றதும் சரிதான். நோயாளி முதல்ல அவன் மீது நம்பிக்கை வைக்கணும். அடுத்ததா மருந்து மேல நம்பிக்கை வைக்கணும். அப்பத்தான் குணமாகும். ஆனாலும் எல்லோரும் பிழைக்க முடியாதுதானே…’’ என்றார்.

’’உண்மைதான். உடல் அதிசயத்தை  நுணுக்கமாக ஆராயச்சி செய்ய முடியுமே தவிர, உடம்பைக் கட்டுப்படுத்த முடியாது. எத்தனை கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலும், இறுதியில் மரணதேவனுக்கு முன்னே மண்டியிடத்தான் வேண்டும். நோயால் உண்டாகும் வேதனையை குறைக்கலாம், உறுப்புகளின் ஆற்றலைக் கூட்டலாம் என்பதுதான் மருத்துவத்தால் செய்யக்கூடியது. அதை அன்போடு செய்யயுங்கள். மருந்துகளை விட, மனதினால் நோய் விரைவில் குணமாகும் என்பதை உணர்த்துங்கள். சாதாரண காய்ச்சல் என்று வருபவர்களுக்கு மாத்திரை கொடுக்காமல், இரண்டு நாள் ஓய்வெடுத்து நாவைக் கட்டுப்படுத்தினாலும் காய்ச்சல் காணாமல் போய்விடும் என்று உண்மை பேசுங்கள்…’’ என்றேன்.

’’அப்படின்னா நாங்க சம்பாதிக்க வேண்டாமா?’’ குரலில் கோபம் எட்டிப் பார்தது.

’’கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் மதிப்பது மருத்துவர்களைத்தான். பிறரிடம் காட்டாத அந்தரங்கத்தையும், பேசாத ரகசியங்களையும் உங்களிடம் கொட்டத் தயாராக இருக்கும் மக்களிடம் அன்பை செலுத்துங்கள் என்று சொல்கிறேனே தவிர, பணம் சம்பாதிக்கவேண்டாம் என்று சொல்லவில்லையே…’’ என்றேன்.

’’நான் மட்டும் அன்பா இருந்தா போதுமா சாமி… மற்றவன் எல்லாம் சம்பாதிப்பானே…’’ என்று இழுத்தார்.

’’அடுத்தவரைப் பற்றிய கவலை எதற்கு..? உங்களுக்கு அன்பு போதிக்கச் சொல்லி, இறைவன் என்னை அனுப்பியிருக்கிறான். இந்தச் சந்திப்பு எதேச்சையாக நடந்ததல்ல என்பதை மட்டும் மனசில் வைத்துக்கொள்ளுங்கள்…’’ என்றேன்.

என் பேச்சு அந்த டாக்டரின் இதயத்தில் எந்த அறையைத் திறந்ததோ தெரியவில்லை..!

’’சுவாமி… ஓரளவு நல்லாவே சம்பாதிச்சுட்டேன். ஆனாலும் மனசுல சின்னதா ஒரு வெற்றிடம் இருந்துக்கிட்டே இருந்தது. அதை எப்படி  நிரப்பமுடியும்னு இதுவரை எனக்குத் தோணவே இல்லை. இப்போ நீங்க சொல்றபடி முயற்சி செஞ்சா முழுசா இல்லாட்டியும் கொஞ்சமாவது அதை நிரப்பமுடியும்னு தோணுது…’’ என்றவர் முகத்தில் ஆனந்தம் வந்தது. அவரது சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பாமல் கண் மூடி தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *