முகம் முழுக்க சோகத்துடன் வந்து நின்றான் மகேந்திரன். ‘’சாமி, மாச சம்பளக்காரன். எவ்வளவுதான் சிக்கனமா செலவழிச்சாலும் மாசக் கடைசியிலே கடன் வாங்க வேண்டியதா இருக்குது. இப்போ திடீர்னு ஆஸ்பத்திரி செலவு வந்து நிக்குது, நான் செய்வது? எங்களை மாதிரி ஏழைகள் வாழவே லாயக்கி இல்லையா?’’ கிட்டத்தட்ட அழும் நிலையில் கேட்டான்.
‘’உன் வாழ்க்கை பரிதாபமானதுதான்… உன்னுடைய சம்பளத்தைக் கூட்டினால் போதுமான அளவுக்கு சேமிப்பு செய்து, சிக்கல் இல்லாமல் வாழ்வாயா..?’’
மகேந்திரன் முகத்தில் ஆயிரம் வாட் பல்ப் எரிந்தது. ‘’சாமி, அப்படி மட்டும் ஏதாவது நடக்க வைச்சீங்கனா, என் ஜென்மம் உள்ள வரைக்கும் உங்களை மறக்கவே மாட்டேன்’’ கையெடுத்து கும்பிட்டான்.
சட்டென்று சிரித்தார் ஞானகுரு. ‘’நீ என்னை மறக்காமல் இருப்பதால் எனக்கு என்ன லாபம்..? ஆனால், ஒரு விஷயம் தெரியுமா? இதற்கு முன்பு உனக்கு சம்பள உயர்வு கிடைத்த நேரத்திலும், கூடுதல் பணத்தை, நீ சேமிக்கவே இல்லை. அதனால் இனிமேல் கூடுதலாக வந்தாலும், அதற்கேற்ப செலவு செய்வாயே தவிர சேமிக்க மாட்டாய். சரி, வீட்டில் நீ எவ்வளவு குப்பைகளை சேமித்து வைத்திருக்கிறாய்..?’’ கேள்வி புரியாமல் விழித்தான்.
‘’நான் குப்பை என்று சொல்வது, தேவை இல்லாமல் நீ வாங்கி சேர்த்து வைத்திருக்கும் பொருட்களை. கட்டில், மெத்தை, டைனிங் டேபிள், வாஷிங் மெஷின், வாட்டர் ஃபில்டர் போன்ற எல்லாவற்றையும் அத்தியாவசியமாக நீ நினைப்பதால் உடல் நலனை ஆடம்பரமாக்கிவிட்டாய். ஆடைகள் வாங்கி குவிப்பதும், வாகனம் வாங்குவதும் அவசியமாகிவிட்டது. நீ வாங்கும் ஒவ்வொரு பொருளும் உனக்கு சுமை என்பதை உணர்ந்துகொள். ஒரு வாகனம் வாங்குவது உன் வேலையைக் குறைக்காமல் அதிகப்படுத்தவே செய்யும். ஆம், பெட்ரோல், பழுது என்று செலவழித்துக்கொண்டே இருப்பாய். அதேநேரம் நீ பொது போக்குவரத்தை பயன்படுத்தினால், நடந்தே சென்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், மருத்துவமனை உன்னை அழைக்காது. இனியாவது சரியாக வாழ கற்றுக்கொள்‘’
பதில் சொல்ல முடியாமல் திரும்பினான் மகேந்திரன்.