காவியைக் களைந்துவிட்டு வெள்ளை வேட்டி, சட்டைக்கு மாறியிருந்தேன். குற்றாலம் போகலாம் என்ற எண்ணத்தில் பேருந்து நுழையத்தில் நுழையும்போது, வாசலுக்கு வந்த ஒரு சொகுசுப் பேருந்தில் இருந்து, ‘மதுரை.. மதுரை… மதுரை’ என்று ஏலக்குரல் அழைத்தது.
‘சொக்கநாதனே கூப்பிடுகிறான்…’ என்று நினைத்து அதில் ஏறினேன். கடைசிக்கு முந்தைய இருக்கையில்தான் இடம் இருந்தது. ஜன்னலை நன்றாக திறந்து வைத்ததும் காற்று முகத்தில் அறைந்தது.
சிறிது நேரத்தில் என் பக்கத்து இருக்கையில் மிகவும் ஒல்லியாக, ஐம்பதைத் தொட்ட ஒருவர் வந்து அமர்ந்தார். அவருடைய சூட்கேஸைக் கொண்டுவந்த நபருடன் ஆங்கிலத்தில் பேசிய தொணியை வைத்து, மருத்துவராக இருக்க வேண்டும் என்று கணித்தேன். பஸ் கிளம்பி நகர எல்லையைத் தாண்டும்வரை வேடிக்கை பார்த்ததில் மனம் லயித்துப் போயிருந்தது.
’’சார்… ப்ளீஸ் எனக்கு ஜன்னலோர ஸீட்டைத் தரமுடியுமா?’’ என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.
’’பஸ்ல டிராவல் செஞ்சி ரொம்ப வருஷமாச்சு. டிரெயின் டிக்கெட் இல்லைன்னு இதுல ஏறினேன். பஸ் குலுங்கிறதைப் பார்த்தா, வாந்தி வந்திடுமோன்னு பயமா இருக்கு’’ என்றார் கெஞ்சும் குரலுடன்.
’’ஒரு டாக்டர் இப்படி பயப்படுவது ஆச்சரியம்தான்…’’ என்றேன். அதிர்ச்சி அப்பட்டமாக அவர் முகத்தில் தெரிந்தது.
’’எப்படித் தெரியும் உங்களுக்கு, என்னோட ஹாஸ்பிட்டலுக்கு வந்திருக்கிங்களா?’’ என்று கேட்டார்.
புன்னகைத்தபடி, ‘இல்லை’ என்று தலையசைத்தேன். அவரது அதிர்ச்சி இப்போது ஆச்சரியமாக மாறியிருந்தது.
’’ஒரு ஆளைப் பார்த்ததும் இன்னாருன்னு சொல்றீங்கன்னா… ஒண்ணு சாமியாரா இருக்கணும், இல்லைன்னா ஜோசியரா?’’
’’நீங்களே கண்டுபிடித்துச் சொல்லுங்கள். நான் யார் என்பது எனக்கே மறந்துவிட்டது’’ என்றேன்.
’’அப்படின்னா நீங்க சுவாமிகள்தான்..’’ என்றவர் இப்போது சந்தோஷத்திற்கு மாறியிருந்தார்.
அவரது மெல்லிய கையை நன்றாக அழுத்திப் பிடித்து, ‘‘இனி இந்த பஸ்ஸில் குலுக்கல்கள் இருந்தாலும் உங்கள் உடம்புக்கு எதுவும் நிகழாது, தைரியமாக இருங்கள்… இப்போதே வாந்தி பற்றிய பயம் காணாமல் போய்விட்டதுதானே?’’ என்றேன்.
’’தேங்க்ஸ்… என்னோட கவனத்தை திசை திருப்பிட்டீங்க… இதுவும் ஒரு வகையான டிரீட்மென்ட்தான்…’’ என்றார். அதன்பிறகு மருத்துவத்தையும், அவரது சாதனைகளையும் சிலாகித்துப் பேசத் தொடங்கினார். ‘‘சரியான நேரத்துக்கு மட்டும் ஆஸ்பத்திரிக்கு வந்துட்டா, எப்படிப்பட்ட நோயில் இருந்தும் தப்பிச்சுடலாம்…’ என்றவரைத் தடுத்து,
’’அதுசரி, ஜலதோஷம், தலைவலிக்கு மருந்து கண்டுபிடித்து விட்டீர்களா?’’ என்று கேட்டேன்.
இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் யோசித்தவர், ‘‘அதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம்… இதயத்துல ஆபரேஷன் பண்ண முடியுது, மூளையை ஓப்பன் செய்ய முடியுது, கிட்னியை ரெக்கவரி செய்யலாம்…’’ என்று அடுக்கினார்.
’’புற்றுநோய் ஏன் வருதுன்னு தெரியுமா?’’ என்று மீண்டும் சாதாரணமாகவே கேட்டேன்.
’’சாமி… மருத்துவ உலகத்தின் மேல உங்களுக்கு ஏதும் கோபமோ?’’ என்று கேட்டார்.
’’எனக்கென்ன கோபம்? மருத்துவம் உன்னத நிலைக்கு வந்துவிட்டதாக நீங்கள் சொல்வதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களுடைய மருந்துகள் எல்லாமே ஏமாற்றுவித்தை என்பதுதான் என் கருத்து…’’ என்றேன்.
புரியவில்லை என்பது போன்று புருவம் உயர்த்திப் பார்த்தார்.
’’உடலில் நோய் தொற்றி வருபவர்களுக்கு நீங்கள் படித்த புத்தகத்திலிருந்தும், வாரம் அல்லது மாதம் ஒரு முறை பை நிறைய மருந்துகளை அள்ளிவரும் மருந்துக் கம்பெனிகளின் பிரதிநிதிகள் சொல்வதையும்தானே, மருந்து என்று எழுதித் தருகிறீர்கள். இதற்குப் பெயர்தான் மருத்துவமா?’’ என்று கேட்டேன்.
எனது கேள்வியால் டாக்டருக்கு முகம் சுருங்கியது. அவரது தொழில் குறித்துப் பேசுவதை ரசிக்கவில்லை என்பது தெரிந்தது.