‘’சாமி, எனக்கு பணம் சம்பாதிக்கப் பிடித்திருக்கிறது. பணத்தை சேமித்து வைக்க பிடித்திருக்கிறது. பணத்தை பார்ப்பதுதான் எனக்கு சந்தோஷம். ஆனால், பணம் துன்பம் தரக்கூடியது என்று சொல்கிறார்களே… அது ஏன்?” நியாயமான சந்தேகம் கேட்டார் மகேந்திரன்.
‘’சிலருக்கு தபால் தலை சேகரிக்கப் பிடிக்கும். சிலருக்கு புத்தகங்கள் சேகரிப்பதில் ஆனந்தம். அப்படித்தான் உனக்கு பணம் சேமிப்பதில் சந்தோஷம் கிடைக்கிறது என்றால், அதை செய்வதில் தவறே இல்லை. பணத்திற்கு சில விசேஷ குணங்கள் உண்டு. பணம் இருப்பவர் நினைத்தால், இமயமலை அடிவாரம் வரையிலும் சென்று பனி மழையை ரசிக்க முடியும். மிகப்பெரிய பங்களா கட்டி, சுற்றிலும் விதவிதமாக மலர்களை வைத்து, அதன் வாசனையையும் மலர்தலையும் ரசிக்க முடியும். உடலில் சிறு வலி ஏற்பட்டாலும் ஹைடெக் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.
அதேநேரம் பணம் என்பது ஒரு சாதாரண காகிதம்தான். பண்டமாற்றுக்கு பயன்படக்கூடிய ஒரு சாதனம் மட்டுமே. அந்த பணம் இன்பமும் தருவதில்லை, துன்பமும் தருவதில்லை. அரிய தபால் தலைகளை அதன் அருமை தெரியாதவர்களிடம் கொடுத்துப் பார். குப்பையில்தான் வீசுவார்கள். அதனால், பணத்தை நீ எப்படி பயன்படுத்துகிறாய் என்பதைப் பொறுத்துதான், அது இன்பமாகவும் துன்பமாகவும் மாறும்.
ஏழைகள் நினைத்தாலும் விமானம் ஏறி பயணம் செல்ல முடியாது. உடலில் நோய் வந்தாலும் பெரிய மருத்துவமனை பக்கம் ஒதுங்க முடியாது. ஆனால், அவர்களும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஆம், மரத்துக்குக் கீழே தலை சாய்த்து வானத்தைப் பார்ப்பதில் ஆனந்தம் அடைகிறார்கள். மரத்தின் விழுதுகளில் ஊஞ்சலாடுவதில் ஏழைக் குழந்தைகளுக்கு இணையில்லா சந்தோஷம் கிடைக்கிறது.
பணம் இல்லாதவர்களும், துறவிகளும்தான் பணத்தை துன்பம் தரக்கூடியது என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பணத்தால் கிடைக்கும் இன்பத்தைவிட, தீமைகளும், துன்பங்களும் மட்டுமே தெரியும். அதனால், நீ பணத்தைக் கொண்டு இன்பம் அடைந்து பார். பணம் இல்லாமலும் இன்பம் கிடைக்கும் என்பதை உணர்ந்துகொள். பணம் ஒருபோதும் உனக்கு துன்பமாக மாறாது” என்றார்.
திருப்தியுடன் நகர்ந்தார் மகேந்திரன்.