குடும்ப பாகம் பிரித்ததில் கிடைத்த பணத்தை முதலீடு செய்யும் முன் ஞானகுருவிடம் ஆசி பெற வந்தார் மகேந்திரன். ‘’மிகச்சரியாக கணித்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், நல்ல லாபம் வரும் என்று சொல்கிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த பணம் எனக்கு அவசியம் இல்லை. அதனால், அதில் முதலீடு செய்யப்போகிறேன், நல்ல லாபம் கிடைக்க ஆசி தாருங்கள்?’’ பணிவுடன் கேட்டார்.
‘’உனக்கு கிடைத்திருக்கும் அந்த பணம் நிறைய பலன் கொடுக்கவேண்டுமா அல்லது நிச்சய பலன் கொடுக்க வேண்டுமா?”
‘’என்ன சாமி, இப்படி கேட்குறீங்க. நிறையவோ, கொஞ்சமோ நிச்சயமா பலன் கொடுக்கணும். இதை தவிர எனக்கு மொத்தமா பணம் வர்றதுக்கு வேற வழியே கிடையாது. என் பொண்ணு கல்யாணத்துக்கும் எங்க எதிர்காலத்துக்கும் இதைத்தான் நம்பியிருக்கேன்..’’ என்றார்.
‘’உன்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்திற்கும், ஏழைகளுக்கும் அரசு உத்தரவாதமுள்ள வங்கி, அஞ்சலகம் போன்றவையே நல்லது. நிலமும் தங்கமும் நல்ல முதலீடு. ஆனால், அவற்றை முறையாக பராமரிக்கவில்லை என்றால், அதனாலும் துன்பம் விளையும். ஆனால், எந்த காரணம் கொண்டும் ஷேர் மார்க்கெட்டில் மட்டும் முதலீடு செய்யாதே… ஏனென்றால் அது பணக்காரர்களின் அரசியல் விளையாட்டு. ஏழையும், ஷேர் புரோக்கர்களும் டிரேடிங் செய்து கோடீஸ்வரனாக மாறிய வரலாறு கிடையாது…’’
‘’அப்படி என்றால், உறவினர் ஒருவர் நல்ல வட்டி தருவதாகச் சொல்லி கடன் கேட்கிறார். கடன் பத்திரம் எழுதிக்கொள்ளலாம், செக் தருகிறேன் என்றும் உத்தரவாதம் தருகிறார்.. பொதுவான நபர்களை சாட்சியாக வைத்து கடன் தரலாமா?’’
‘’அதைவிட, கழுதை எங்காவது இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்து உன்னுடைய பணத்தை தின்னக்கொடு. ஒரு பிராணிக்கு உணவளித்த சந்தோஷமாவது கிடைக்கும்’’ என்றபடி கண்களை மூடி தியானத்துக்குப் போனார் ஞானகுரு.