கபாலிஸ்வரர் கோயில் பிரகாரத்தில் சாய்ந்திருந்த என்னிடம் சுஜாவும், அவளது அம்மாவும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர்.

’’சாமி… ஆண்களும் பெண்களும் சமம் எனும் நிலை எப்போ வரும்?’’ என்று தயக்கத்துடன் கேட்டாள் சுஜாவின் அம்மா.

’’ஆண் என்று ஒரு குலம் இருக்கும்வரை, அப்படியொரு நிலை பெண்களுக்கு  வரவே வராது…’’ என்றபடி எழுந்து நின்றேன்.

’’சாமி.. என்ன இப்படி அச்சானியமா சொல்லிட்டீங்க… இப்பவே ஆண் செய்யும் எல்லா வேலையையும் பெண் செய்யத் தொடங்கியாச்சு. விண்வெளிக்குக்கூட பெண்கள் போயிட்டு வந்தாச்சு, இந்த காலத்துலயும்  இப்படிச் சொல்றீங்களே…’’ என்று சுஜாவின் தாய் அதிர்ச்சியோடு கேட்டாள்.

சற்று நகர்ந்து வசதியாக ஒரு தூணில் சாய்ந்து கொண்டேன். ‘‘சரி, இப்படிச் சொன்னால் புரிகிறதா என்று பாருங்கள். பெண்கள்தான் குழந்தை பெறுவார்கள் என்ற நிலை இருக்கும் வரை சம உரிமை என்பது கிடைக்காது…’’ என்றேன்.

’’அதெப்படி?’’

’’எத்தனை திறமையான பெண்ணாக இருந்தாலும், ஒரு குழந்தை பிறந்ததும் தனது ஆசைகளை எல்லாம் அழித்துக் கொண்டு குழந்தைக்காக வாழத் தொடங்குகிறாள். தான் அடைய முடியாத உயரங்களைக்கூட குழந்தைகள் மூலம் அடைய நினைக்கிறாள். பெண்ணின் உரிமைப் போராட்டம் என்பது குழந்தை பெற்றவுடன் நின்று போகிறது…’’ என்றேன்.

என்னுடைய பதில் இருவருக்கும் திருப்தி தரவில்லை என்பது தெரிந்தது, ஆனாலும் எதிர்த்து பேசாமல் இருந்தார்கள்.

’’பெண்கள் ஆண்களுக்கு சமமாக  முடியாது ஆனால், ஆண்களிடமிருந்து விடுதலை அடைய முடியும்…’’ என்றதும்,

’’சாமி… நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது ஆனா புரியலை’’ என்றாள் தாய்.

’’பெண்ணின் உடல் அமைப்பு ஆணைவிட பலவீனமானது என்பதால் உடலால் அவனை வெல்வது கடினம். இன்னும் சொல்லப்போனால் எல்லோராலும் முடியாது. விதிவிலக்குகள் பற்றி பேசவேண்டியதில்லை.  ஆனால் ஆணை வேறு வகையில் வெல்ல முடியும். அவனை வென்று சுதந்திரமாக வாழ முடியும். இதுதான் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய விடுதலை…’’ என்றேன்.

’’அதற்குத்தான் நாங்கள் மகளிர் அமைப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கிறோம்…’’  என்று பெருமை பொங்கச் சொன்னார் சுஜாவின் தாய்.

அவரை ஆழமாக பார்த்தபடி, ‘‘பெண் விடுதலைக்கு என்று போராடும் அமைப்புகள் எல்லாமே பெண்களை ஆண்களாக்கும் முயற்சியில்தான் ஈடுபடுகிறது. ஆண் கால்சட்டை போட்டால், பெண்ணும் போடலாம். ஆண் சிகரெட் குடித்தால் பெண்ணும் குடிக்கலாம். ஆண் அடித்தால், பெண்ணும் திருப்பி அடிக்கலாம், ஆண் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் பெண் செய்ய முடியும் என்று சொல்லி, பெண்களை ஆண்களாக மாற்றி வருகிறீர்கள். இன்னும் கூர்மையாக சொல்வதென்றால், இதுவரை பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஆண்களை பழி வாங்க நினைக்கிறீர்கள்…’’  என்றேன்.

’’இது சரிதானே…’’ என்று இழுத்தாள் சுஜா.

’’இல்லை. ஆணைப்  போன்று பெண்  மாறுவது நல்லதல்ல. பெண் அமைப்புகள் எதிர்பார்க்கும் இதுபோன்ற விடுதலையினால் பெண்கள் சுதந்திரமாக இருப்பதை ஆண்கள் இன்னும் சாதகமாகவே பயன்படுத்திக் கொள்வான்…’’

’’அதெப்படி…?’’ என்று கேள்வி கேட்டாள் தாய்.

’’ஏனென்றால் சுதந்திரமான பெண்களிடம் நட்பு பாராட்டுவது ஆண்களுக்கு எளிது. அப்படிப்பட்ட பெண்ணை அவள் வழியிலே ஏமாற்றி எவ்விதபொறுப்பும் இன்றி இன்பம் அனுபவிக்க முடியும். அவன் அனுபவிக்கும் பெண்ணின் குழந்தைக்கோ, எதிர்காலத்திற்கோ எவ்விதமான பொறுப்பும் எடுத்துக் கொள்ளாமல் வெவ்வேறு பெண்ணிடம்  தாவிக்கொண்டே இருப்பான். ஆனால், என்றுமே பெண்களால் இப்படி வண்டு மாதிரி ஒவ்வொரு பூவாக சென்று கொண்டிருக்க முடியாது என்பதால் நஷ்டப்படப் போவது சுதந்தரமான பெண்கள்தான்…’’ என்று சொல்லி முடிக்கும் முன்னர் அடுத்த கேள்வியை வீசினாள் சுஜா.

’’அப்படின்னா பெண்கள் என்னதான் செய்யணும் சாமி..?’’

’’ஆணும் பெண்ணும் வெவ்வேறு உலகம். ஆணும் பெண்ணும் இரு துருவங்கள். ஆனால், இரண்டும் ஈர்க்கப்படுவதுதான் அழகு, இணைவதுதான் இயற்கை. இதில், ஆண் எப்போதும் ஆணாக, பெண் எப்போதும் பெண்ணாகவே இருக்கவேண்டும். ஒருவரையொருவர் பயன்படுத்தும் நிலை வரக்கூடாது. ஒருவரையொருவர் மதிக்கும் அன்பு இருத்தல் வேண்டும். சுயநல ஆணிடம் இருந்து பெண்ணும், சுயல பெண்ணிடம் இருந்து ஆணும் விலகியே இருத்தல் வேண்டும். பெண்ணை போகப் பொருளாகவும், தன்னுடைய சொத்தாகவும் மதிக்கும் ஆண் அயோக்கியன் என்றால், ஆணை பணம் காய்ச்சி மரமாகவும், தன்னுடைய அடியாளாகவும் நினைக்கும் பெண்ணும் மோசம்தான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவும், அன்பு பாராட்டவும் வேண்டும். இந்த நிலை வருவது பெண்ணின் கையில்தான் இருக்கிறது. ஆம், ஆண் பிள்ளையை உயர்வாக நினைத்து வளர்க்கக்கூடாது. அதுதான் பெண் சுதந்திரத்தின் ஆரம்பமும் முடிவும்” என்று முடித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *