மயிலை கபாலீஸ்வரன் காராகிரகத்தில் ஏகாந்தமாகக் கொலுவீற்றிருக்க, அவன் கடாட்சம் வேண்டி நம்பிக்கை சுமந்த மனதுடன் கரம்கூப்பி வலம் வந்து கொண்டிருந்தனர், சிவபக்தர்கள்.

 கோவில் சுற்றுப்பிரகார மண்டபத்தூண் ஒன்றில் முதுகைச் சாய்த்து கால்களை கால்நீட்டியபடி அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பக்தர்களில்தான் எத்தனையெத்தனை வகை! குருக்கள் நீட்டும் தட்டில் தட்சணைக்காசு போட வகையற்ற ஏழைகள். பட்டுவேட்டி சரசரக்க தோரணையாக வணங்கி நிற்கும் பெரிய தனக்காரர்கள், பயபக்தியுடன் மந்திரங்களை முணுமுணுப்பவர்கள், வேண்டுதலை நிறைவேற்றியதற்கு நன்றி சொல்லிவிட்டு கையோடு அடுத்த அப்ளிகேஷனைப் போட்டு வைப்பவர்கள், ஆசையை நிறைவேற்றினால் அள்ளிக் கொடுப்பதாக கடவுளுக்கே ஆசை காட்டுபவர்கள், ஏகாந்தமாக சுற்றித் திரிபவர்கள், கடவுளிடம் சண்டை போடுபவர்கள்,  பக்தர்களிடம் பிச்சை எடுப்பவர்கள், கடவுளை ஒரு கண்ணிலும் கட்டிளம் பெண்களை மறுகண்ணிலும் சேவிக்கும் கட்டிளங்காளைகள் என கோயில் களைகட்டியிருந்தது.

அழுதுகொண்டிருந்த இடுப்புக் குழந்தையை நச்சென கீழே உட்காரவைத்து, என் அருகில் அமர்ந்தாள் ஒரு பெண். இருபது வயதிருக்கும், உடுத்தியிருந்த ஆடையில் எளிமையும், ஏழ்மையும் தெரிந்தது. ஏற்கெனவே சோகத்தில் வந்தவளுக்கு இங்கு ஆறுதல் கிடைக்கவில்லை என்பது அவளது முகத்தில் தெரிந்தது. தாயின் சோகம் உணரா அந்தக் குழந்தை, சிணுங்கலுடன் தாயிடம் பால் குடிக்க தாவ… முதுகில் பட்டென்று ஒரு அடி வைத்தாள். அதை எதிர்பார்க்காத குழந்தை தாயைப் பாய்ந்து கட்டிக் கொண்டு ‘வீல்’ எனக் கத்தியது.

பெத்த மனம் பித்தல்லவா! உடனே அந்தக் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு சமாதானப்படுத்தத் தொடங்கினாள். கண்களின் ஓரம் கண்ணீர் எட்டிப் பார்த்தது. குழந்தையை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவள் தற்செயலாக என்னைத் திரும்பிப் பார்த்தாள்.

நான் புன்னகையை வீசினேன், அதுவே அவளைப் பேசவைக்க போதுமானதாக இருந்தது.

’’சாமி… அம்பாள்கிட்ட இருந்து ஒரே ஒரு பூ குடுங்கன்னு பூசாரிகிட்டே கேட்டேன். அவர் தரவே இல்லை… யார் யாருக்கோ கிடைக்குது, எனக்கு அந்தக் கொடுப்பினைகூட இல்லை…’’ என்று மேற்கொண்டு பேசப்போனவளை கையமர்த்தி தடுத்து, ‘‘தட்டில் எவ்வளவு தட்சணை போட்டாய்?’’ என்று கேட்டேன்.

’’ஐம்பது காசு சாமி…’’ என்று கூச்சத்துடன் சொன்னாள்.

’’ஐம்பது காசுக்கு அவன் உனக்கு குங்குமம் கொடுத்ததே அதிகம்…’’ என்று சிரித்தேன். அவளது ஏழ்மையைக் கிண்டல் செய்வதாக நினைத்து, முகம் சுருங்கினாள். கிட்டத்தட்ட அழும் நிலைக்கு அவள் வருவதை பார்த்ததும் என் புன்னகையை சீரியஸாக்கிக் கொண்டேன்.

’’பெண்ணே… நான் உன்னை குறை சொல்லவில்லை. பூசாரியின் தயவு காசினால்தான் அளக்கப்படுகிறது என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். அதுசரி அம்பாளின் பாதம்பட்ட பூ தேவைப்படும் அவசியம் என்ன..?’’

என்னுடைய கேள்வி அவளுக்கு நிம்மதி தந்திருக்க வேண்டும். மனதில் இருப்பதைக் கொட்டத் தொடங்கினாள், ‘‘சாமி…  நான் ஒரு கனவு கண்டேன். என் தம்பிக்கு கல்யாணம் நடக்குது, அதுல செத்துப் போன எங்க அப்பா கலந்துக்கிறார். விருந்து சாப்பாடு தடபுடலா இருக்கு, நான் வைச்சதை எல்லாம் சாப்பிட்டுக்கிட்டே இருக்கேன். என் புள்ளைய யாரோ என்கிட்டே இருந்து வாங்கிட்டுப் போறாங்க, அதைக்கூட கண்டுக்காம சாப்பிடுறேன் சாமி…’’ என்றாள்.

’’அதனால் என்னம்மா…?’’

’’என்ன சாமி இப்படி சொல்றீங்க… கல்யாண கனவு கண்டா வீட்ல ஏதாவது துக்கம் நடக்கும்னு பெரியவங்க சொல்வாங்களே… ஊர்ல எங்க அம்மா மட்டும் தனியா இருக்குது. அதுக்கு ஏதாவது நடந்துடுமோ, இல்லைன்னா என் வீட்டுக்காரருக்கோ குழந்தைக்கோ ஏதும் ஆயிடுமோன்னு பயமா இருக்கு. அதான் சாமிகிட்ட பூ கிடைச்சா கெட்டது விலகிடும்னு கோயிலுக்கு ஓடியாந்தேன். ஏற்கெனவே பயப்படுறது போதாதுன்னு, பூசாரி பூ குடுக்காம என்னை இன்னும் பயம் காட்டிட்டார். வந்த அழுகையை அடக்கத்தான் இங்க வந்து உட்கார்ந்தேன்…’’ என்றாள்.

அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்தேன். பெயர் அம்சவள்ளி. நெல்லையை அடுத்த சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறாள். இவளது தாய்வீடும், தூரத்து உறவினரான கணவன் குடும்பமும் விவசாய கூலிகள். வானம் பொய்த்து விவசாயம் இல்லாததால் சென்னைக்கு  வரவேண்டிய நிலை. இப்போது கணவன் சொற்ப சம்பளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான். இவள் பத்தாவது வரைதான் படித்திருக்கிறாள், மேலும் திருமணம் ஆனதும் குழந்தை பிறந்துவிட்டதால் வீட்டோடு இருக்கிறாள். ஒரே ஒரு அறை, அதிலேயே கிச்சன் தடுப்பு என்று இருக்கும் குட்டியூண்டு வீட்டில் வாடகைக்கு இருக்கிறாள். அந்த குடியிருப்பில் இருக்கும் ஆறு வீட்டிற்கும் சேர்த்து ஒரே பாத்ரூம், ஒரு டாய்லெட். தண்ணீர் எல்லாம் வாசலில் இருக்கும் குழாயில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இதெல்லாம் குறையாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தவளை, நேற்றைய கனவுதான் புரட்டிப் போட்டிருக்கிறது. இத்தனை விஷயத்தையும் கொட்டியதில் கொஞ்சம் அசுவாசமடைந்திருந்தாள்.

’’அம்சவள்ளி… கொஞ்சம் இரு’’ என்று சொல்லிவிட்டு அருகே அனுமன் சிலைக்குப் போடப்பட்டிருந்த பூவை எடுத்து, கண்களை மூடி தியானித்து அவளிடம் கொடுத்தேன். பரவசத்துடன் பூவை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

’’அம்சவள்ளி… கனவு என்பது என்ன தெரியுமா?’’

’’நடக்கப்போறதை முன்கூட்டியே நமக்குச் சொல்றதுதான சாமி…’’

’’இல்லை அம்சவள்ளி. ஞாபகங்கள், நினைவுகள், பதிவுகள் என அன்றாடம் சேகரிக்கும் மூளை எனும் குப்பைத் தொட்டியில் இருந்து நிரம்பிவழிபவைதான் கனவுகள். அதனால் கனவில் நீ இறைவனைப் பார்த்தாலும் சரி, நரகத்தைப் பார்த்தாலும் சரி அதன்படி எதுவும் நிகழப் போவதில்லை. வாழ்விற்கும் கனவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…’’

’’காலையில கண்ட கனவு பலிக்கும்னு சொல்வாங்களே சாமி..’’

’’எந்த நேரத்தில் பார்த்தால் என்ன, குப்பையை குப்பை என்றுதானே சொல்லவேண்டும்?’’

நான் சொன்னதில் அம்சவள்ளிக்கு முழுதிருப்தியில்லை என்பது அவள் முகத்தில் தெரிந்தது.

’’சரி.. உன் வீட்டில் இருந்து கோயிலுக்கு வரும்வரை, தெரிந்தவர்கள் என்று எத்தனை நபர்களை சந்தித்தாய்..?’’

’’பக்கத்து வீட்டுக்காரம்மா மட்டும்தான் மார்க்கெட்டுக்குப் போயிட்டு வந்தாங்க, வேற யாரையும் பார்க்கலையே…’’ என்றாள்.

’’நீ யாரையும் குறிப்பாக பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், உன் கண்கள் அப்படியல்ல. நீ வந்த தெரு, மனிதர்கள், கட்டடங்கள், நடந்துகொண்டிருந்த நிகழ்வுகள் என்று அனைத்தையும் கவனித்து உள்வாங்கி இருக்கும்.  இவை எதுவும் உனக்குத் தற்போது தேவையில்லை என்பதால், உன் நினைவுக்கு அதனை மூளை கொண்டுவருவது இல்லை.  இதுபோலவே இதுவரை உன் வாழ்நாளில் நடந்த, கேட்ட, பார்த்த விஷயங்கள் மட்டுமின்றி உன் எண்ணங்கள், ஆசைகள், நிராசைகள், கோபங்கள், பயம், சந்தோஷம் அத்தனையையும் மூளை சேகரித்துக் கொண்டே இருக்கும். அதிகப்படியான குப்பை சேர்ந்தவுடன் தேவையற்றதை வெளியே தள்ளுவது போன்று மூளையும் அவ்வப்போது, தேவையற்ற சில நினைவுகளை உறக்கத்தில் கனவாக வெளியேற்றுகிறது. குப்பைகள் வெளியேறுவது வீட்டுக்கு சுகாதாரம்தானே தவிர, கவலைப்பட ஏதுமில்லை. கனவுகள் காணாத நபர் என்று எவருமே இல்லை, எல்லோருமே கனவுக்கு அர்த்தம் தேடத் தொடங்கி, அதனை நிஜ வாழ்வுடன் பொருத்திப் பார்க்கத் தொடங்கினால், நிகழ்காலத்தில் யாருமே சுகமாக வாழவே முடியாது…’’ என்றேன்.

அம்சவள்ளிக்கு பட்டும் படாமலும் ஏதோ புரிந்திருக்க வேண்டும். அந்தப் புரிதலில் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *