பெண்ணுரிமை பற்றி நிறையவே பேசினாலும், திருப்தி இல்லாமலே சுஜாதாவும், அவளது தாயாரும் விழித்தனர். நேரடியாகவே விஷயத்துக்கு வந்தேன்.
’’பெண்ணுக்கு மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள் தெரியுமா… அதுவும் அவர்களிடமே இருக்கிறார்கள்’’ என்றதும் விழித்தனர்.
’’கற்பு, அழகு, சுயநலம் என்ற மூன்றும்தான் பெண்களின் எதிரிகள். கற்பு என்ற தங்கக் கயற்றில்தான் பெண்களைக் கட்டி வைத்து, உயர்த்திப் பிடிப்பதாக பாவனை செய்கிறது ஆண்களின் உலகம். அது ஒரு மாயக்கயறு, கற்பு என்பது காற்றுச் சிறை என்பதை பெண்கள் புரிந்து கொண்டாலே, ஆண்கள் அதிர்ச்சியடைந்து பெண்களை மதிக்கத் தொடங்கி விடுவார்கள்.’’
’’கற்பை மதிக்காத பெண்ணை ஆண் எப்படி மதிப்பான்… ச்சீ என்று விலகிவிட மாட்டானா?’’ சுஜா சந்தேகத்துடன் கேட்டாள்.
’’கற்பு என்ற காரணம் காட்டித்தான் உடமையாக, அடிமையாக பெண்ணை வைத்திருக்கிறான். கற்பு என்பது உடலிலோ, மனதிலோ இல்லை நம்பிக்கையில் மட்டும்தான் இருக்கிறது. ஒரு ஆண் கற்புக்கு எத்தனை மதிப்பு கொடுக்கிறானோ, அதே அளவு பெண்ணும் கொடுத்தால் போதும் என்ற பொதுநிலையைக் கொண்டுவந்தால் போதும், ஆண் அடங்கிவிடுவான்…’’
’’பெண்ணை ஏமாற்றும் இன்னொரு விஷயம் அழகு. இந்த உலகில் எந்த பறவையும், விலங்கும் அழகு நிலையம் செல்வதில்லை, ஏனென்றால் அவை இயல்பாக இருக்கிறது, அதையே அழகென்று சொல்கிறோம். ஆனால் பெண்கள் மட்டும்தான் அழகுதான் தன்னுடைய மிகப்பெரிய சொத்து என்ற தப்புக்கணக்கில்தான் காலமெல்லாம் வாழ்கிறார்கள். உடலுக்கு வெளி அழகு முக்கியமில்லை என்ற உணர்வு பெண்களுக்கு சிறு வயதில் இருந்தே ஊட்டப்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் மூளையால் வாழவேண்டும். தன்னம்பிக்கைப் பெண்களுக்கு கண்கள் பளபளக்கும், முகத்தில் கம்பீர ஒளி உண்டாகும். அதற்கு ஈடு, இணை என்று எதையும் சொல்ல முடியாது. இந்த அழகு காலமெல்லாம் அழியவும் செய்யாது’’
’’ஆனால், அழகான பெண்களைத்தானே ஆண்கள் விரும்புகிறார்கள்…’’
’’ஆம், அழகான பெண்கள் மீது ஆசைப்படுவார்கள், ஆனால் கல்யாணம் செய்துகொண்டு குடித்தனம் நடத்தமாட்டார்கள். ஆண்களின் கனவுகளில் வாழ விரும்பாதே… நிஜமாக இணைந்து வாழ அழகு தேவை இல்லை. விட்டுக்கொடுத்து, இணைந்தே ஜெயிக்கும் மனம்தான் தேவை…’’
’’மூன்றாவதாக ஒன்று சொன்னீர்களே…?’’
’’ஆம்., அது சுயநலம். ஆண்களை மயக்கி கைக்குள்ளேயே வைத்திருப்பது பெண்களின் தீராத ஆசை. கணவன் தொடங்கி மகனிடமும் இதை எதிர்பார்க்கும் போது மருமகளுடன் யுத்தம் தொடங்குகிறது. தான், தன் கணவன், தன் குழந்தைகள் என்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் பெண்கள் கவலைப்படுவதில்லை. அளவுக்கு மீறிய சுயநலம் ஆபத்து. அதனால் கணவனாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி அவர்களையும் கொஞ்சம் தள்ளியே வைக்கப் பழகிவிட்டால் பெண் துன்பம் இல்லாமல் வாழலாம். தான் ஊட்டாவிட்டால் குழந்தை சாப்பிடாது, கணவன் மாத்திரை போடமாட்டான் என்று அன்புக்கு அடிமையாக்க நினைப்பது ஒருவகையில் குரூரம்’’
’’நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பெண்கள் மீதுதான் எல்லா தவறும் இருக்கிறதா?’’
’’ஆண்களிடமும் ஆயிரம் தவறுகள் இருக்கலாம். ஆனால் இப்போது விடுதலை அடையவேண்டியது பெண்கள்தான். பெண்களை தெய்வம் என்று கொண்டாடுவது கும்பிட அல்ல… பலி கொடுக்க என்பதைப் புரிந்து கொள். அதற்காக ஆண் இல்லாமல் வாழவேண்டிய அவசியமும் இல்லை. ஆணும், பெண்ணும் சேர்ந்து படைப்பதுதான் அற்புதமான இன்ப உலகம்’’ என்று நீளமாக சொல்லி முடித்தேன்.
’’சாமி… கற்பைப் பத்தி நீங்கள் சொல்வது எனக்கும் உடன்பாடுதான். ஆனால் இதனை எங்கள் சங்கத்துப் பெண்களிடம் சொன்னால், என்னைத் தப்பான பெண்ணாகப் பார்ப்பார்கள். எனக்கு சொல்லவும் கூச்சமாக இருக்கும். நீங்களே ஒரு நாள் வந்து எங்கள் சங்கத்தில் பேசமுடியுமா?’’ என்று கேட்டாள் சுஜாதாவின் தாய்.
ஆழமாக அவள் முகத்தைப் பார்த்தேன். ‘‘தோழிகளிடம் சொல்வதற்கே கூச்சப்படும் நீ, பெண்களுக்கு விடுதலை வாங்கித் தரப் போகிறாயா…நான் ஊருக்கெல்லாம் பேசும் உபதேசியல்ல…’’ என்று கை கூப்பி பேச்சை முடித்தேன்.