குட்டித்தூக்கம் போட்டதில் எவ்வளவு நேரம் ஓடியதோ… ஒரு பெண்ணின் அழைப்பைக் கேட்டு கண் விழித்தேன். ஐம்பது வயது, இருபது வயது மதிக்கத்தக்க  இரண்டு பெண்கள் கையில் உணவுப் பொட்டலத்துடன் நின்றார்கள்.

’’சாமி… தூக்கத்தைக் கெடுத்ததுக்கு மன்னிக்கணும், என்னோட பொண்ணுக்குப் பிறந்தநாள். அதான் அன்னதானம் பண்ணறேன். நீங்க வயிராற சாப்பிட்டு குழந்தையை ஆசிர்வாதம் செய்யணும்…’’ என்றாள்.

நான் வாய் திறந்து பேசுவதற்கு முன்னதாக சின்னப் பெண், ‘‘மம்மி… இன்னும் எத்தனை கோயிலுக்குப் போகணும், எத்தனை சாமியார் கால்ல விழணும்…’’ என்றாள் அலுப்புடன்.

அம்மா பதட்டமடைந்து, ‘‘சுஜா… இப்படி பேசக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது?’’ என்று பெண்ணைக் கடிந்துகொண்டபின் என்னிடம், ‘‘சாமி தப்பா நினைச்சுக்கக் கூடாது’’  என்று மகள் சார்பில் மன்னிப்பு கேட்டாள்.

நான் பதில் கூறத் தோன்றாமல், உணவுப் பொட்டலத்தை கீழே வைக்குமாறு முகக்குறிப்பால் சொல்லிவிட்டு மீண்டும் கட்டையைக் கிடத்தினேன்.

சிறிது நேரத்தில், ‘‘ஸாரி…’’ என்று குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தேன். காலில் விழ மறுத்த சுஜா நின்று கொண்டிருந்தாள்.

நான் கண் விழித்ததும், ‘‘நீங்க ஏதாவது சாபம் கொடுத்துடுவீங்கன்னு அம்மா பயப்படுறாங்க… அதான் ஸாரி கேட்கச் சொன்னாங்க, ஸாரி…’’ என்றாள்.

இளம்பெண்ணாக வளர்ந்தபிறகும் குழந்தைத்தன்மையுடன் இருந்தவளை மிகவும் பிடித்திருந்தது.

’’சாபம் கொடுப்பது எல்லாம் கதைகளில் மட்டும்தான் சாத்தியம். சாபம் கொடுப்பதால் எவரையும் கெடுக்க முடியாது… ஆசிர்வாதம் செய்வதால் எவரையும் வாழவைக்கவும் முடியாது. உன்னுடைய சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் நீ மட்டுமே காரணமாக இருக்க முடியும். சந்தோஷமாக போய்வா சுஜாதா’’ என்றேன். முழுப்பெயர் சுஜாதாவாக இருக்க வேண்டும் என கணித்திருந்தேன், அது சரியாக இருக்கவே குழந்தை போன்று ஆச்சர்யப்பட்டாள்.

’’ஐ… என் முழுப்பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ என்றாள்.

சிரித்தபடி, ‘‘இதைக் கண்டுபிடிக்க இமயமலையில் தவம் செய்து, சக்தி பெற்றுவர வேண்டுமா?’’ என்று புன்னகையுடன் கேட்டேன்.

’’அம்மா… அர்ச்சனை பண்ணிட்டு வர லேட்டாகும், நான் உங்ககிட்ட உட்கார்ந்துக்கலாமா?’’ என்று ஆர்வமாக கேட்டவள் என் பதிலை எதிர்பாராமல் அமர்ந்தாள்.

’’சாமி… நான் நினைச்சது நடக்குமா?’’ என்று ரகசியக் குரலில் கேட்டாள்.

அவள் பணக்காரி என்பது உடையிலும் லிப்ஸ்டிக்கிலும் தெரிந்தது. அதனால்  படிப்போ, பணத்தட்டுப்பாடோ சிக்கலாக இருக்காது. அதனால் இவளது அழகும், இளமையும்தான் சிக்கல் என்று கணக்குப் போட்டு, ‘‘இந்த வயசில் உனக்கு ஏற்பட்டிருப்பது காதல் அல்ல… அது சாதாரண இனக்கவர்ச்சிதான். அதை  நீயே முறித்துக் கொள்வாய்…’’ என்று அழுத்திச் சொன்னேன்.

ஆச்சர்யப்பட்டு கையால் வாயைப் பொத்திக் கொண்டாள், அந்த செய்கை அழகான ஓவியம் போன்று இருந்தது.

’’ஓ… காட், நல்லவேளை மம்மி இருக்கும் போது சொல்லலை. நான் அவனை நிஜமாத்தான்…’’ என்று இழுத்தாள்.

’’காதல் என்றால் என்னவென்று தெரியுமா?’’

’’லவ்வுன்னா… அவனுக்காக நான் உயிரைக் கொடுப்பேன்… எனக்காக அவன் உயிரைக் கொடுப்பான்’’ என்றாள்.

’’ம்…’’ என்று மேலும் சொல்லத் தூண்டினேன்.

’’அவனைக் கட்டிக்கிட்டா நான் சந்தோஷமா இருப்பேன். என்னய நல்லா வைச்சுக்குவான். நான் சொன்னதை எல்லாம் கேட்பான். அதனால எங்க காதலுக்கு குறுக்கே யார் வந்தாலும் விடமாட்டோம்… பெத்தவங்க சொன்னாலும் கேட்க மாட்டோம்…’’ என்றவள் முகத்தில் பெருமை பொங்கியது.

அவள் காதலை ஆழமாக சோதிக்க விரும்பினேன்.

’’உன் காதலன் உன்னை ஏமாற்றி, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் என்ன செய்வாய்?’’

’’அப்படியெல்லாம் சொல்லாதீங்க சாமி, அவன் அப்படிப்பட்டவன் இல்லை. ரொம்பவும் நல்லவன். அப்படி ஒருவேளை தப்பு செஞ்சான்னா… அவனை கொலை செஞ்சுடுவேன்…’’ என்றாள் ஆவேசத்துடன்

’’ஆஹா… உன் விளக்கம் அற்புதமாக இருக்கிறது. காதல் என்பது மென்மையானது, அதை நீ  வன்முறையாக மாற்றி விட்டாய். உயிரை கொடுப்பது அல்லது உயிரை விடுவது, எதிர்க்க வருபவர்களை எதிர்ப்பது, ஏமாற்றினால் கொல்வது என்று ஒரே ரத்தக்களறியாக இருக்கிறதே…’’ என்று கேட்டேன்.

’’அவனை அவ்ளோ லவ் பண்றேன்…’’ என்றாள்.

வெறுமனே சிரித்தேன். என்னுடைய சிரிப்பு அவளை கேலி செய்வதாக இருந்ததைப் பார்த்தவள், ‘‘நான் சொல்றது தப்பா?’’ என்று கேட்டாள்.

’’ஆம் பெண்ணே… காதல் என்பது சுதந்திரம். காதல் என்பது அழகானது. இன்னும் முழுமையாகச் சொல்வது என்றால், விட்டுக் கொடுப்பது. நீ உன்னைப் பற்றி எண்ணாமல், உன் அன்புக்குரியவனின் நலனுக்காக சிந்திப்பது. ஒருவேளை உன்னை மணந்து கொள்வதை விட இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டால், காதலன் சந்தோஷமாக இருப்பான் என்று தெரிந்தால், அவனையே விட்டுக் கொடுக்கவும் நீ தயாராக இருக்கவேண்டும். அதுதான் காதல்…’’ என்றேன்.

திறந்தவாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

’’நீ என்னை நன்றாக வைத்துக் கொண்டால் மட்டுமே, உன்னை நான் திருப்தி படுத்துவேன் என்று கட்டுப்பாடு விதிப்பது காதல் அல்ல. நான் உன்னை நேசிக்கிறேன், அது என்னுடைய ஆசை. அதற்காக உன்னுடைய இயக்கத்தில் தலையிடமாட்டேன், உன்னுடைய எந்த விருப்பத்திற்கும் தடை போடமாட்டேன் என்று நேசம் காட்டுவதுதான் காதல். தன்னுடைய சுகத்தை மட்டும் நினைப்பவர் எப்படி பிறரால் நேசிக்கத் தக்கவராக இருக்க முடியும்? பேராசை, பொறாமை, மிரட்டல், அதிகாரம் இருக்கும் இடத்தில் காதல் வளராது. நாம் மனமார நேசிக்கும் ஒருவர் நம்மை விரும்பவில்லை என்றபோதும் வருந்தாத மனம்தான் காதல்…’’ என்று முடித்தேன்.

ஆச்சர்யத்துடன், ‘‘சாமி… நீங்கள்லாம் மந்திரம் ஓதிக்கிட்டு, கடவுளைப் பத்தி மட்டும்தான் பேசுவீங்கன்னு நினைச்சேன்.. காதலைப் பத்தி இவ்ளோ பேசுறீங்க… கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… காதல் தோல்வியினால சாமியாராயிட்டீங்களா?’’ என்றாள்.

’’இல்லையே… இப்பவும் காதலிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.’’ என்றேன்.

ஆச்சர்யத்துடன், ‘‘யாரை..?’’ என்று கேட்டாள்.

’’இந்த கணம் உன்னைத்தான் காதலிக்கிறேன்…’’ என்று சொல்லி அவள் கண்களை ஆழமாகப் பார்த்து சிரித்தேன். அவள் அதிர்ச்சியை ரசித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *